இப்பிசு

பண்டைய கிரேக்க குதிரைப்படை வீரர்கள்

இப்பிசு (Hippeis, பண்டைக் கிரேக்கம்ἱππεῖς , ஒருமை ἱππεύς, ஹிப்பியஸ் ) என்பது குதிரைப்படைக்கான கிரேக்க சொல் ஆகும். பண்டைய ஏதெனியன் சமுதாயத்தில், சோலனின் அரசியல் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இப்பிசு என்ற பிரிவினர் நாட்டின் நான்கு சமூக வகுப்புகளில் இரண்டாவது உயர்ந்த பிரிவினராக ஆயினர். இது குறைந்தபட்சம் 300 மெடிம்னோய் அல்லது அதற்கு இணையான ஆண்டு வருமானம் கொண்ட ஆடவர்களால் ஆனது. செல்வர் ஆட்சி அரசியலமைப்பின் படி ஒரு சராசரி குடிமகனின் ஆண்டு வருமானம் 200 மெடிம்னோய்களுக்கு குறைவாக இருந்தது. இதில் 300 மெடிம்னோய்களை ஈட்டிய ஆண்களுக்கு தங்கள் பணியில் ஒரு போர் குதிரையை வாங்கி பராமரிக்கும் வசதியை அளித்தது.

ரைடர் பெயிண்டரின் லாகோனியன் கறுப்பு உருவம் கொண்ட கோப்பை ஹிப்பியஸ் உறுப்பினரைக் கொண்டுள்ளது.

இந்த வகுப்பாருக்கு ஒத்தவர்களாக உரோமானிய ஈக்விட்ஸ் (குதிரைச்சவாரி) மற்றும் இடைக்கால வீரத்திருத்தகைகள் இருந்தனர்.

ஆரம்பகால வடிவங்கள்

தொகு

எசுபார்த்தாவில், இப்பியசு மரியாதைக்குரிய அரச காவலராக இருந்தனர். அதில் முப்பது வயதுக்குட்பட்ட 300 எசுபார்த்தன் இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் மன்னரின் மெய்க்காப்பகத்தில் அதிக ஆயுதம் ஏந்திய காலாட்படை வீரர்களாக பணியாற்றினர். கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்க-பாரசீகப் போருக்குப் பிறகு ஏதெனியன் குதிரைப்படை உருவாக்கப்பட்டது. இது முதலில் 300 வீரர்களைக் கொண்டிருந்தது. ஏதென்சின் பொற்காலத்தைத் தொடர்ந்து இது 1,200 வீரர்களாக அதிகரித்தது. இதில் 200 ஏற்ற வில்லாளிகள் (ஹிப்போடோக்சாடே) மற்றும் 1,000 ஏதெனியன் குடிமக்கள் இருந்தனர். இப்பியசு அமைதிக் காலங்களில் பொது விழாக்களிலும் ஊர்வலங்களில் கலந்து கொண்டனர். குதிரைப்படை நல்ல நிலையில் இருப்பதைக் கண்காணிப்பதும், புதிய உறுப்பினர்களின் உபகரணங்கள் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்வதும் பூலியின் அவையின் கடமையாக இருந்தது.

 
முழு ஆயுதம் ஏந்திய ஹிப்பியஸ் . அட்டிக் பிளாக்-ஃபிகர் ஆம்போரா, கி.மு 550-540 ( இலூவா )

குதிரை வீரர்களின் எண்ணிக்கையானது நகர அரசுகளின் குடிமக்கள் அவையால் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு குதிரை வீரரும் சேரும் போது உபகரணப் பணத்தையும் ஒரு குதிரைப்பாகன் மற்றும் இரண்டு குதிரைகளை வைத்திருப்பதற்கான மானியத்தையும் பெற்றனர். இது அரசின் வருடாந்திர மானியமாக வழங்கப்பட்டது.

எசுபார்த்தாவின் குதிரைப்படை

தொகு

காலாட்படையுடன் ஒப்பிடும் போது, நீண்ட காலமாக புறக்கணிப்பட்டுவந்த குதிரைப்படை அமைப்பு கிமு 424 இல் உருவாக்கப்பட்டது. பணக்காரர்கள் குதிரைகள், உபகரணங்கள் மற்றும் கவசங்களை மட்டுமே வழங்க வேண்டியிருந்தது; போரின் போது, ஹோப்லைட்டுகளாக சேவைக்கு தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் குதிரைப்படைக்கு வரவழைக்கப்பட்டு எந்த பூர்வாங்க பயிற்சியும் இல்லாமல் அனுப்பப்பட்டனர். பிற்காலத்தில், ஒவ்வொரு ஹாப்லைட் மோராவிற்கும் 60 குதிரைப்படைகள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. [1] கூலிப்படையை சேர்ப்பதன் மூலமும், கூட்டாளிகளை தங்கள் படைகளில் அறிமுகப்படுத்துவதன் மூலமும், எசுபார்த்தன்கள் இறுதியில் சிறந்த குதிரைப்படையைப் பெற்றனர்.

குறிப்புகள்

தொகு
  1. Connolly, Peter (2006). Greece and Rome at War. Greenhill Books, p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85367-303-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்பிசு&oldid=3376818" இலிருந்து மீள்விக்கப்பட்டது