இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பியான இவர் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவராவார். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவரது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு,கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டார்.விசயகண்ட கோபாலனின் சோழ நாடு மற்றும் ஈழ நாடு,கொங்கு நாடு போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவரும் ஆவார். பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று கப்பம் கட்ட வைத்து தில்லையில் வீராபிடேகம் மற்றும் விசயாபிடேகம் போன்றனவற்றினையும் செய்தார்.கொடுவடுகு வல்லான் என்பவரைவும் வென்று தில்லையில் உள்ள சிவகாமக் கோட்டத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தார். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.
ஈழ நாட்டில் போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவருக்கு முடிசூட்டுவித்தார். திருகோணமலை,திருகூடமலை போன்ற இடங்களில் கயற்கொடி பொறித்தார்.காவிக்களத்தில் சோழனுடன் போர் செய்தார். தனது தந்தையான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது 23ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு புதுக்கோட்டையிலும் 28ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு நெல்லையில் உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் வீரமரணம் அடைந்தார் என்பது வரலாறு.[சான்று தேவை]
ஈழப்போர்
தொகுதற்போதைய தாய்லாந்து பகுதியை சேர்ந்த சந்திரபானு என்னும் அரசன் ஈழத்தின் மீது படையெடுத்து அதில் இருந்த தமிழர்களின் வடபகுதியை 1255 ஆம் ஆண்டு வென்றான்.[1] அவன் ஈழத்தின் தென்பகுதியை கவரும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இக்காலத்தில் சந்திரபானுவின் மகனான சாவகன் மைந்தன் தாய்லாந்து நாட்டின் தாமிரலிங்க பகுதியை ஆண்டு வந்தான். 1255 ஆம் ஆண்டு வீரபாண்டியனின் அண்ணனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஈழத்தின் மீது படையெடுத்து சந்திரபானு அரசனை தோற்கடித்தான். ஆண்டுக்கு வரியாக பல விலை உயர்ந்த ஆபரணங்களையும் யானைகளையும் பெற்றது பாண்டிய அரசு. மீண்டும் சந்திரபானுவுக்கும் பாண்டியர்களுக்கும் போர் ஏற்பட வீரபாண்டியன் தலைமையில் 1262 ஆம் ஆண்டு முதல் 1264 ஆம் ஆண்டு வரை போர் போர் நடந்தது. அதில் சந்திரபானு கொல்லப்பட்டான். வெற்றியின் நினைவாக வீரபாண்டியன் பாண்டியர் சின்னத்தை திரிகூடகிரியிலும் திரிகோணமலையினும் பொறித்தான். குடுமியான்மலை கல்வெட்டு பாண்டியர் பெற்ற இந்த போர் வெற்றியில் கொண்டுவந்த செல்வங்களை கூறுகிறது.
சாவகன் மைந்தன் யாழ்ப்பாணப்பகுதியில் போரிட்டு பாண்டியர்களை எதிர்த்தாலும் போரில் தோற்றதால் பாண்டியர் ஆட்சிக்கு அடிபணிந்தான். பாண்டியர் அரசு சாவகன் மைந்தனை சுந்தரபாண்டியனின் மதுரை அரசின் கீழ் அட்சி செய்ய அனுமதித்தது. சாவகன் மைந்தன் ஆண்ட வடக்கு ஈழப்பகுதி விலை உயர்ந்த கற்கள் கிடைத்தாலும் பாண்டியர் அரசுக்கு செலுத்தி வந்த வரியை சில ஆண்டுகளில் நிறுத்தினான். 1270 ஆம் ஆண்டு சாவகன் மைந்தன் மீண்டும் ஈழத்தின் தெற்குப்பகுதியை படையெடுக்க முயல முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கீழ் பாண்டியர் படை ஈழத்தின் மீது படையெடுத்து சாவகன் மைந்தனை தோற்கடித்தது. மேலும் ஈழத்தின் வடபகுதியை ஆள குலசேகர சிங்கையாரியன் என்பவனை ஆட்சியில் வைத்தது.[2][3] பாண்டியர்களின் ஆட்சி 1311 ஆம் ஆண்டு மதுரையில் வீழ்ந்த பிறகும் 1619 ஆம் ஆண்டு வரை குலசேகர சிங்கையாரியன் வழி வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் ஈழத்தின் வடபகுதியை ஆண்டனர்.
கல்வெட்டுகள்
தொகுபோர் வெற்றிகள் பற்றிய மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள்
தொகுவீரபாண்டியன் அரசேற்ற போது அதில் கங்கம் கவுடம் கடாரம் காசிபம் கொங்கம் குதிரம் கோசலம் மாளுவம் அருமனம் சோனகம் சீனம் வந்தி திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் பெபனம் தண்டகம் பண்டரம் முதலிய நாடுகளில் இருந்து அரசர்கள் வந்ததாக மெய்கீர்த்தி கூறுகிறது. ஈழத்தை வென்ற போது அங்கிருந்து வரியாக யானையும் பலப்பைப்புரவியும் கண்மணித்தேரும் சீன வடமரும் நாகத்தோடும் நவமணிக்குவையும் ஆடகத்திரியும் அரியாசனமும் முடியும் கடகமும் முழுமணி யாரமும் கொடியும் குடையும் குளிர்வெண்கவரியும் முரசும் சங்கமும் தனமும் கொண்டு வந்ததாகவும் கூறுகிறது.[4]
கொடை கல்வெட்டுகள்
தொகுகுடுமியான்மலை சிக்கந்தநாதர் கோயில் கல்வெட்டுகளில் வீரபாண்டியனின் பதினோறாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் வீரபாண்டியனின் அமைச்சனான காலிங்கராயன் திருநழுக்குன்றம் உடைய நாயனான் கோயிலுக்கும் அதிலுள்ள திருக்காமக்கோட்ட நாச்சியாருக்கும் மேலமநல்லூர் சிற்றூரையும் அதில் கிடைக்கப்பெறும் வரிகளையும் தானமாக அளித்ததை குறிப்பிடுகிறது. இந்த திருக்காமக்கோட்ட நாச்சியார் துர்க்கையாண்டாள் நாச்சியாரின் மகள் என்றும் கல்வெட்டில் உள்ளது.[5]
முறப்பநாட்டு வேத நாராயண பெருமாள் கோவிலில் காணப்படும் வீரபாண்டியன் கல்வெட்டு 1266 ஆம் ஆண்டு போசளவீர சோமிதேவ-சதுர்வேதிமங்கலம் மகாசபையினர் நரசிம்ம பரம்சாமி கடவுளுக்கு நிலங்களை தானம் கொடுத்ததை குறிப்பிடுகிறது. அதில் வீரபாண்டியனின் பதினோறாம் ஆட்சியாண்டில் வீரபாண்டியனால் பூந்தோட்டத்துக்காக கொடுக்கப்பட்ட இரண்டு இடங்களும் இறைவனறையூர் ஸ்ரீகிருஷ்ண பட்டனால் கொடுக்கப்பட்ட ஒர் இடமும் வீரபாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் இறையிலியாக கொடுக்கப்பட்ட ஒர் இடமும் அடக்கம்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ deSilva 67
- ↑ de Silva, A History of Sri Lanka, p.91-92
- ↑ Kunarasa, K The Jaffna Dynasty, p.#
- ↑ கங்கங் கவுடம் கடாரம் காசிபம் கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம் அருமனம் சோனகம் சீனம் வந்தி திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் பெபனந் தண்டகம் பண்டர முதலிய எப்புவி வேந்தரும் கல்மண்டலீகரும் மும்முரைசு முழங்கும் செம்மணி மாளிகை கோயில் கொற்ற வாயில் புகுந்து காலம் பார்த்து கழலிணை பணிந்து - சடையவர்மன் வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி
- ↑ 5.0 5.1 Sri. G.V.Srinivasa Rao Retd. Senior Epigraphical Assistant, Dr. M.D.Sampath Director (Epigraphy) I/C. "A .R. No. 356 of 1906 INSCRIPTIONS OF JATAVARMAN VIRA PANDYA II". SOUTH INDIAN INSCRIPTIONS INSCRIPTIONS XXII (Part II).
உசாத்துணைகள்
தொகு- de Silva, K. M. (2005). A History of Sri Lanka. கொழும்பு: Vijitha Yapa. p. 782. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8095-92-3.
- Kunarasa, K (2003). The Jaffna Dynasty. Johor Bahru: Dynasty of Jaffna King's Historical Society. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8455-00-8.