இரண்டாம் தாரைன் போர்

ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிர

இரண்டாம் தாரைன் போர் என்பது, கிபி 1192 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராசு சௌகானின் படைகளுக்கும் இடையில், தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலத்தில் தானேசருக்கு அண்மையில் அமைந்துள்ளது.

பிரித்திவிராசு சௌகானின் சிலை

பின்னணிதொகு

கிபி 1191 ஆம் ஆண்டில் இதேயிடத்தில் இடம்பெற்ற போரில், பிரித்திவிராசின் படைகள் முகம்மத் கோரியின் படைகளைத் தோற்கடித்தன. எனினும், தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்த சுல்தான் கோரி இத்துடன் விட்டுவிடுவதாக இல்லை.

1192 ஆம் ஆண்டில் 120,000 பேர் கொண்ட பெரும் படையொன்றைத் திரட்டிக் கொண்டு முகம்மத் கோரி இந்தியாவை நோக்கி வந்தார். லாகூரை அடைந்ததும், அங்கிருந்து தூதுவன் ஒருவனை பிரித்திவிராசிடம் அனுப்பி அவரைத் தனக்கு அடங்கிவிடுமாறு பணித்தார். ஆனால், பிரித்திவிராசு அதற்கு இணங்கவில்லை. தொடர்ந்து பிரித்திவிராசு ராசபுத்திரத் தலைவர்களுக்கு வேண்டுகோளொன்றை விடுத்தார். அதில் அவர்களை ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஒன்றுபடுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார். 150 இராசபுத்திரத் தலைவர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர்.

பிரித்திவிராசும் பெரிய படையொன்றைத் திரட்டினார். அதில் பெருமளவு யானைப்படைகள் அடங்கியிருந்தன. பிரித்திவிராசு படை நடத்திக்கொண்டு தாரைன் நகரை நோக்கிச் சென்றார். சுல்தான் கோரி, பிரித்திவிராசை இசுலாம் மதத்தில் சேருமாறும் அல்லது தோல்வியைச் சந்திக்கவேண்டி வரும் என்றும் கெடு விதித்தார். அதற்கு இணங்காத பிரித்திவிராசு, சமாதானம் செய்துகொள்வதற்கு உடன்பட்டார். ஆனால், சுல்தான் கோரி போரிட முடிவெடுத்தார்.

போர்தொகு

கோரி தனது படைகளை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு இராசபுத்திரப் படைகளைத் தாக்கினார். அதிகாலைப் பொழுதில், வில்லேந்திய வீரர்கள் அலையலையாக வந்து ராசபுத்திரப் படைகளைத் தாக்கினர். ஆனால் பிரிதிவிராசின் யானைப்படைகள் முன்னேறியபோது அவர்கள் பின்வாங்கினர். மாலையில், சுல்தான் கோரி தனது ஆயுதம் தாங்கிய குதிரைப்படையினரை இராசபுத்திரப் படைக்கு நடுவில் செலுத்தினான். இதனால் இராசபுத்திரப் படைகள் நிலைகுலைந்தன. கோரியின் நான்கு படைப்பிரிவுகள் போரில் ஈடுபட்டு பிரித்திவிராசின் படைகளை நாற்புறமும் தாக்கியபோது ஒருபிரிவு அவசரத் தேவைகளுக்காக ஒதுங்கியிருந்தது. பிரித்திவிராசின் தளபதி காண்டே ராவ் கொல்லப்பட்டார். பிரித்திவிராசின் உற்சாகமும் இத் தோல்விகளால் குறைந்து வந்தது. அவர் தனது யானையை விட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினார். இராசபுத்திரப் படைகளும் தலைவர்களுக்குக் கட்டுப்படாது பின்வாங்கி ஓடின.

பின் நிகழ்வுகள்தொகு

இராசபுத்திர இராச்சியங்களான சரசுவதி, சமானா, கோரம், ஆன்சி என்பன மிக இலகுவாக சுல்தான் கோரியின் படைகளால் கைப்பற்றப்பட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி முசுலிம் படைகள் பிரித்திவிராசின் தலைநகரான அஜ்மேரை நோக்கிச் சென்றன. அங்கே பிரிதிவிராசு பிடிபட்டார். அவரை ஆப்கானிசுத்தானுக்குக் கொண்டு சென்ற சுல்தான் கோரி தண்டனையாக அவரது கண்களைக் குருடாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தாரைன்_போர்&oldid=2750727" இருந்து மீள்விக்கப்பட்டது