இராசவல்லவன் இராசயோகன்
இராசவல்லவன் இராசயோகன் (பிறப்பு: ஒக்டோபர் 17, 1945) இலங்கையின் வடமாகாணத்தில் வசித்துவரும் ஒரு நாடகக் கலைஞரும், சிறுவர் இலக்கிய எழுத்தாளருமாவார்.
இராசவல்லவன் இராசயோகன் | |
---|---|
பிறப்பு | ஒக்டோபர் 17, 1945 மானிப்பாய் ,யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | பரராஜசிங்கம் இராசவல்லவன்/ யோகமலர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇலங்கையின் யாழ்ப்பாணம், மானிப்பாய் தெற்கு கிராமசேவகர் பிரிவில் பரராஜசிங்கம் இராசவல்லவன், யோகமலர் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இராசயோகன் தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பெற்றார். தொழில் முறையில் மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராக பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி பெயர் சதாலட்சுமி. இவர்களுக்கு இராசமோகன், கலைவாணி, இசைவாணி, மோகனவாணி, யமுனாவாணி ஆகிய ஐந்து பிள்ளைகளுளர்.
எழுத்தார்வம்
தொகுஇவர் கற்கும் காலங்களில் ஆங்கிலக் கல்வியைக் கற்றாலும்கூட தமிழ்மொழி மீது இயல்பான பற்று காணப்பட்டது. இதனால் மாணவப் பருவத்திலிருந்தே தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இக்காலகட்டங்களில் எழுத வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அச்சம் இவர் மனதில் ஊடுருவியமையினால் அண்மைக் காலங்களிலிருந்தே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித்தார். இந்த அடிப்படையில் பத்திரிகையொன்றில் பிரசுரமான கன்னியாக்கம் 1999 ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் பிரசுரமானது. இவரின் கன்னிக்கதையின் தலைப்பு ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்பதாகும். இதிலிருந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றார்.
சிறுவர் இலக்கியம்
தொகுஇவரின் எழுத்தாற்றல் சிறுவர் இலக்கியத்திலே மிகைத்துக் காணப்படுகின்றது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். அரச சேவையாளர்களுக்கான நிர்மாணப் போட்டித் தொடர் 2004, 2005ம் ஆண்டுகளில் இவரது சிறுவர் கதைகளும், கவிதைகளும் பரிசுகளை வென்றுள்ளன.
சிறுவர் நூல்கள்
தொகுஇதுவரை இரண்டு சிறுவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- சிந்தனை செய் மனமே - ‘பூமா’ வெளியீடு
- ஆசையினாலே மனமே - ‘பூமா’ வெளியீடு
நாடகத்துறை
தொகுஇராசயோகன் வாலிப பராயத்திலிருந்தே நாடகத்துறையிலும் ஈடுபாடுமிக்கவராகக் காணப்பட்டார். இருப்பினும் அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு சரிவரக் கிடைக்கவில்லை. இந்நிலையில் 1994ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட ‘அவன் தாறான்’ எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார். குறிப்பாக 2003ஆம் ஆண்டில் ‘தாவடித் தங்கம்மா’ எனும் நாடகத்தில் தாவடித்தங்கம்மாவின் கணவராக நடித்ததையும், 2005ஆம் ஆண்டு கலைவிழாவில் ‘கல்யாணச் சாப்பாடு’ நாடகத்தில் தகப்பன் வேடன் போட்டு நடித்தமையும் தன் வாழ்வில் மறக்க முடியாத பாத்திரங்களாக குறிப்பிடுகின்றார்.
குறுந்திரைப்படம்
தொகுவீடியோ ஒளிநாடாக்கள் மூலமாக குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பதற்கும், நெறிப்படுத்துவதற்கும், வெளியிடுவதற்கும் ஆர்வம் கொண்டுள்ளார்.
பெற்ற சிறப்புகள்
தொகு- ‘கலை ஞாயிறு’ - வலி-தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் வழங்கியமை.
- வட மாகாண கலாசார விழாவில் (2005) யாழ். அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை.