இராஜா கேசவதாசு

இராஜா கேசவதாசு (Raja Kesavadas) (1745-1799) இவர், தர்ம ராஜா கார்த்திகை திருநாள் ராம வர்மனின் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூரின் திவானாக இருந்தார். இவர் திட்டமிடல் திறனுக்காகவும் நிர்வாக புத்திசாலித்தனத்துக்காகவும் நன்கு அறியப்பட்டார். ஆலப்புழா நகரத்தை வளர்ப்பதில் இவர் முன்னனியில் இருந்தார்.

இராஜ கேசவதாசு
Raja Kesava Das Statue in Alleppey - Changanassery Road @ Changananassery Junction.jpg
இராஜா கேசவதாசின் சிலை

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இராஜா கேசவதாசு 1745 மார்ச் 17 அன்று திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியான கன்னியாகுமரியில் உள்ள குன்னத்தூர் என்ற சிறிய குக்கிராமத்தில் கேசவ பிள்ளையாக பிறந்தார். இவருக்கு கணிதத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. பள்ளியாடியைச் சேர்ந்த பணக்கார வணிகரான புதுக்கடை செட்டியார், என்பவர் கேசவ பிள்ளையை தனது கணக்காளராக நியமித்தார். பின்னர் இவர் ஒரு முன்னணி வணிகரும் ஏற்றுமதியாளருமான போக்குமூசா மரைக்காரின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். [1] போக்குமூசா திருவிதாங்கூர் மகாராஜாவான கார்த்திகை திருநாள் ராம வர்மனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். மேலும் அவர் அரண்மனைக்கு சென்றபோது கேசவ பிள்ளையும் அவருடன் சென்றார். கேசவ பிள்ளையின் திறமையால் மகாராஜா ஈர்க்கப்பட்டு திருவிதாங்கூர் அரண்மனைப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

அரச சேவையில்தொகு

மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் திருவிதாங்கூர் மீது தாக்குதல் நடத்தியபோது, கேசவ பிள்ளை மாநில இராணுவத்தின் தளபதியாக இருந்தார். கேசவ பிள்ளையின் தலைமையில் திருவிதாங்கூர் இராணுவம் மைசூர் படைக்கு எதிராகப் போராடியது. இதனால் திப்பு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மைசூர் மீதான தனது வெற்றியை உணர்ந்த திருவாங்கூரைச் சேர்ந்த கார்த்திகை திருநாள் மகாராஜா, கேசவ பிள்ளையை திருவிதாங்கூரின் திவானாக நியமித்தார். பிரிட்டிசு ஆளுநர் மார்னிங்டன் என்பவர், இராஜா என்ற தலைப்பில் இவரது நிர்வாக திறமைகளைப் பாராட்டினார். திவானாக, திருவிதாங்கூரின் தலைநகரை பத்மநாபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றுவதற்கு இராஜா கேசவதாசு பொறுப்பேற்றார். [2]

பணிகள்தொகு

ஆலப்புழா துறைமுகத்தின் வளர்ச்சிதொகு

இவரது அனைத்துப் பணிகளிலும் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்தது, ஆலப்புழாவில் நன்கு திட்டமிடப்பட்ட துறைமுக நகரத்தை நிர்மாணித்ததாகும். புவியியல், கடல்சார் காரணங்களால், இவர் ஆலப்புழாவை மிகவும் பொருத்தமான இடமாகக் கண்டார். துறைமுகத்திற்கு பொருட்களைக் கொண்டுவருவதற்காக இரண்டு இணையான கால்வாய்களைக் கட்டிய இவர், சூரத்து, மும்பை மற்றும் கச்சு நகரிலிருந்து வணிகர்கள், வர்த்தகர்களுக்கு தொழில்துறை நிறுவனங்கள், வர்த்தக மையங்களையும் சரக்கு மையங்களையும் தொடங்க உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கினார். ஆலப்புழா முன்னேற்றம் அடைந்து திருவிதாங்கூரின் நிதிமையமாக இவரது காலத்தில் இருந்தது. [3] துறைமுகம் 1762 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. முக்கியமாக தேங்காய் நார் ஏற்றுமதிக்காக இது பயன்பட்டது. கேசவதாசு கொல்கத்தாவுடனும் மும்பையுடனும் வர்த்தகம் செய்வதற்காக மூன்று கப்பல்களைக் கட்டினார். மேலும் ஆலப்புழாவின் கிழக்கில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அகற்றுவதற்கும் வசதியான ஒரு இடத்தையும் கொடுத்தார். [4]

பிரதன மத்தியசாலை அமைத்தல்தொகு

கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலையாக இருக்கும் பிரதான மத்திய சாலை இராஜா கேசவதாசு திருவிதாங்கூரின் திவானாக இருந்த காலத்தில் கட்டப்பட்டதாகும்.

சாலை சந்தை திறப்புதொகு

திருவிதாங்கூர் இராச்சியத்திற்கு பொருட்களை வழங்குவதற்கான மையப் புள்ளியாக இந்த சந்தையை உருவாக்கும் நோக்கில் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவரது காலத்தில் சாலை சந்தை அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. திருவிதாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல கிள்ளி மற்றும் அருகிலுள்ள கரமணை ஆறுகள் பயன்படுத்தப்பட்டன.

பின் வந்த வருடங்கள்தொகு

இவரது திவான் பதவிக்காலம் 1798 இல் தர்ம ராஜா கார்த்திகை திருநாளின் மறைவுடன் முடிந்தது. அவரது வாரிசான பலராம வர்மன், பதினான்கு வயதே நிரம்பியிருந்ததால் ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி என்பவர் அவருக்கு ஆலோசகரா இருந்தார். இந்த சமயத்தில் இராஜா கேசவதாசு ஒரு துரோகி என்று அறிவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரிக்கு திவான் பதவி வழங்கப்பட்டது. பின்னர் இவரது குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1799 ஏப்ரல் 21 அன்று நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்தொகு

  1. S. Guptan Nair (1992). C.V. Raman Pillai. Sahitya Akademi. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7201-273-1. https://books.google.com/books?id=rr20K3WL-qgC. 
  2. "Statue of Raja Kesavadas to be erected in city". The Hindu. 2007-11-05. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/statue-of-raja-kesavadas-to-be-erected-in-city/article1942714.ece. பார்த்த நாள்: 22 October 2014. 
  3. A History of Trade & Commerce in Travancore, 1600-1805 by K. K. Kusuman
  4. "Alappuzha - A brief history". 2017-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raja Kesavadas
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_கேசவதாசு&oldid=3544236" இருந்து மீள்விக்கப்பட்டது