இராஜ்குமார் கடத்தல்

வீரப்பனின் செயல்கள்

கன்னடத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான இராஜ்குமாரை சந்தணக் கடத்தல் வீரப்பன் 2000 சூலை 30 அன்று கடத்தினார். ராஜ்குமாரின் சொந்த ஊரான காஜனூர் என்ற ஊர் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ளது, காஜனூரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு அவர் வந்திருந்தபோது ஆயுதந்தாங்கிய வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார்.[1] வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார் அவரது கட்டுப்பாட்டில் 108 நாட்கள் இருந்த நிலையில் 2000 நவம்பர் 15 அன்று வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.[2] இந்தக் கடத்தல் நிகழ்வால், இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களுக்கிடையிலான உறவை மேலும் சீரழித்ததுடன், இரு மாநிலங்களிலும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியது.

பின்னணிதொகு

குறிப்பிட்ட சிலரைக் கடத்தி வைத்துக்கொண்டு தனது காரியங்களை சாதித்துக் கொள்வது வீரப்பனின் வழக்கமாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு கர்நாடகத்தின் கொல்லேகால் வட்டத்தில் உள்ள புருடோ காட்டுப்பகுதியின் மரபாலா என்ற இடத்தில் இருந்து வீரப்பனால் ஒன்பது வனத்துறை அதிகாரிகளை கடத்தப்பட்டனர். தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் அவர்களை விடுவிப்பதாக வீரப்பனால் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், வீரப்பனின் கோரிக்கைகளை யாரும் ஏற்கவில்லை எனக் கூறி 7 வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ராஜகுமாரின் மகனான ராகவேந்திரா ராஜ்குமார் கூறுகையில், வீரப்பனனைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையானது (டி.ஆர்.எப்) அவரைக் கடத்துவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே வீரப்பனால் கடத்த வாய்ப்பு உள்ளதாக அவரை எச்சரித்தது.[3] ஆனால் இதை பொருட்படுத்தாத இராஜ்குமார்,[3] என்னிடம் வீரப்பன் பெறுவதற்கு "ஒரு சட்டையையும், வேட்டியையும்"[1] தவிர வேறொன்றுமில்லை என்று நகைச்சுவையாகக் கூறினார்.

தாக்குதலும் கடத்தலும்தொகு

2000 சூலை 30 அன்று தமிழ்நாட்டில் கஜனூரில் உள்ள ராஜ்குமாரின் பண்ணை வீட்டை சுமார் 9.30 மணியளவில் வீரப்பன் தன்னுடன் வந்த 10 அல்லது 12 பேர் கொண்ட ஆயுத குழுவினருடன் தாக்கினார். ராஜ்குமார் 2000 சூலை 27 அன்று கஜானூரில் தான் புதியதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் (ಗೃಹಪ್ರವೇ) என்னும் புதுமனை புகுவிழாவுக்காக வந்திருந்தார். வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் உள்ளே நுழைவதற்கு முன்புதான், ராஜ்குமார் இரவு உணவை முடித்திருந்தார். இராஜ்குமாரும் அவரது மனைவி பர்வதம்மா இராஜ்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் உள்ளே நுழைந்து கன்னடத்தில் எங்களுக்கு ஐயா வேண்டும்!" என்று கூறி மழை பெய்துகொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். வீட்டிற்கு வெளியே வந்த வீரப்பன் வீட்டிலுள்ள மற்றவர்களைப் பற்றி ராஜ்குமாரிடம் விசாரித்தார். இராஜ்குமாரிடம் தகவல்களைப் பெற்றபின்னர் மீண்டும் வீட்டினுள் சென்ற வீரப்பன் ராஜ்குமாரின் மருமகன் எஸ். ஏ. கோவிந்தராஜ், ஒரு உறவினரான நாகேஷ் மற்றும் ஒரு துணை இயக்குனரான நாகப்பா போன்றோரையும் உடன் அழைத்துச் சென்றார்.

இந்த கடத்தில் நிகழ்வு நடந்த நேரத்தில் கஜனூரில் உள்ள உராஜ்குமார் பண்ணை பண்ணை வீட்டில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திம்பம் பகுதியில் காவல்துறைத் தலைவர் எம். எல். பாலச்சந்திரன் மற்றும் சிறப்பு அதிரடிப்படைத் (எஸ்.எல்.எப்) தலைவர் அர்சவர்தன் ராஜு ஆகியோர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தனர். திப்பத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அவ்வப்போது வீரப்பன் வருவதாகவும் அப்போது அவரை அங்கே பிடிக்க ஒரு திட்டத்தை அந்நக் கூட்டத்தில் வகுத்துக்கொண்டிருந்தனர்.

விடுவிக்க நிபந்தனைகள்தொகு

இராஜ்குமாரை கடத்தும்போது வீரப்பன் கர்நாடக முதல்வரிடம் கொடுக்கச் சொல்லி ஒரு ஒலிநாடாவை இராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த ஒலிநாடாவில், இராஜ்குமாரை விடுவிக்க தான் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் அவரை விடுவிப்பதாகவும், அதற்காக ஒரு தூதரை தன்னிடம் அனுப்பவேண்டுமென்று அதில் கூறியிருந்தார் வீரப்பன்.

அடுத்த இரு நாட்களில் இரு மாநில அரசுகளின் தூதுவராக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், வீரப்பனைச் சந்திக்க வனப்பகுதிக்குள் சென்றார். நக்கீரன் கோபால் குழுவினர் மூலமாக 2000 ஆகத்து 5ஆம் நாளன்று வீரப்பனின் நிபந்தனைகள் அடங்கிய ஒலிநாடா வந்து சேர்ந்தது. அதில் வீரப்பனின் 10 நிபந்தனைகள் இடம்பெற்றன.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரைத் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக்கொள்ள வேண்டும். காவிரி கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். பெங்களூரு திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க வேண்டும். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழக, கர்நாடக அரசுகளின் சார்பில் பதில் தயாரிக்கப்பட்டு அவை அறிவிக்கப்பட்டு, பதில்கள் நக்கீரன் கோபால் மூலமாக வீரப்பனுக்கு அனுப்பப்பட்டன.

வனத்தில் கோபாலிடம் அளித்த பதிலில் வீரப்பன், அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய வீரப்பன், மேலும் கூடுதல் நிபந்தனையாக 10ஆம் வகுப்பு வரை தமிழே பாடமொழியாக இருக்க வேண்டும், சின்னாம்பதி, வாச்சாத்தியில் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என இரண்டு புதிய நிபந்தனைகளையும் சேர்த்தார். இதற்கிடையில் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவரது உதவியாளர் நாகப்பா, வீரப்பனின் பிடியில் இருந்து 2000 செப்டம்பர் 28ஆம் நாள் தப்பித்து வந்தார்.

மீட்புதொகு

இதன்பிறகு இராஜ்குமாரை மீட்க பழ. நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, கே. சுகுமாரன் ஆகியோர் கொண்ட குழுவினர் வனத்துக்குள் சென்றனர். ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவரது மைத்துனர் கோவிந்தராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெடுமாறன், நக்கீரன் கோபால் குழுவினருடன் வீரப்பன் அனுப்பி வைத்தார். 2000 நவம்பர் 14ஆம் நாள் நெடுமாறன் குழுவினர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றனர். அன்று இரவு வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை விடுவித்து அழைத்து வந்தனர். நவம்பர் 15ஆம் நாள் இராஜ்குமார் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[4]

வழக்குதொகு

இந்த கடத்தல் தொடர்பாக தாளவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கோவை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் வீரப்பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேரை எதிரிகளாக சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பட்டுக்கூடு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார்.

18 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடைபெற்ற நிலையில் 2018 செப்டம்பர் 25 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்த வழக்குக்கு உட்பட்ட பலர் விசாரிக்கப்படவில்லை என்றும், தமிழக கர்நாடக மாநில அரசுகள் வழக்குக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள ஒன்பது பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.[5]

இதனையும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 Jayaraman, A. (August 1, 2000). "Veerappan kidnaps Rajkumar, three others". தி இந்து. http://www.hindu.com/thehindu/2000/08/01/stories/01010001.htm. 
  2. "Death of a legendary bandit". பிபிசி. October 18, 2004. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2219574.stm. 
  3. 3.0 3.1 Sharma, Ravi (August 5–18, 2000). "Veerappan's prize catch". Frontline 17 (16). http://www.hindu.com/fline/fl1716/17161310.htm. 
  4. எஸ்.கோவிந்தராஜ் (2018 செப்டம்பர் 26). "ராஜ்குமாரின் 108 நாட்கள் ‘வனவாச’ பின்னணி". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
  5. "கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை; 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோபி நீதிமன்றம் தீர்ப்பு". செய்தி. இந்து தமிழ் (2018 ஆகத்து 26). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்குமார்_கடத்தல்&oldid=3093084" இருந்து மீள்விக்கப்பட்டது