இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்)

நூல்
(இராமாயணம் ஒரு ஆய்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமாயணம் ஒரு ஆய்வு கே. முத்தையா எழுதிய நூலாகும். அரசுகள் தோன்றி, நாடுகளாக விரிவடைய சிறிய அரசுகளை அழித்து பேரரசுகள் தோன்றிய காலகட்டத்தில் இருந்த ஓர் அரச குடும்பத்தின் இயல்பான நடவடிக்கையை இராமாயணம் எனும் காவியமாக வால்மீகி எழுதினார் என்று வாதிட்டு, 22 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இராமாயணம் ஒரு ஆய்வு
நூல் பெயர்:இராமாயணம் ஒரு ஆய்வு
ஆசிரியர்(கள்):கே. முத்தையா
வகை:ஆய்வு நூல்
துறை:'''இலக்கிய ஆய்வு'''
இடம்:மதுரை
மொழி:தமிழ்
பக்கங்கள்:142
பதிப்பகர்:வைகை வெளியீடு,6/16,புற வழிச்சாலை
பதிப்பு:1981 & 2003

ஆய்வுத் தலைப்புகள் தொகு

  1. வால்மீகி யார்?
  2. உண்மைகளை இனியும் மறைக்க முடியுமா?
  3. ஆதி காப்பியத்தின் அடித்தளம்.
  4. இலக்கியப் புரட்டர்கள் புகுந்தது எப்போது?
  5. விந்தியமலைப் பிரதேசம் தென்னிந்தியாவான விந்தை!
  6. காண்டங்களாகப் பிரித்ததின் நோக்கம்.
  7. பிள்ளைப்பேறு இல்லாத அரசர்கள் செய்ததென்ன?
  8. இராமனுக்குப் போர்ப்பயிற்சி-திருமணம்?
  9. கைகேயியைப் பற்றிய நெடுங்காலப் பொய்யுரை!
  10. உடமைப் பித்தும் பதவி ஆசையும் தலைக்கேறினால்!
  11. அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் வரை!
  12. வனங்களில் புகுந்த முனிவர்கள் கோரியது யாது?
  13. அந்த வான்மதியின் சோதிமுகம் காணாதவனா அவன்?
  14. சூர்ப்பனகையை மானபங்கம் செய்தது தெய்வீகத் தர்மமா?
  15. தங்கைக்கு இழைக்கப்பட்ட அவமனத்திற்காக இராவணன் தீர்த்த வஞ்சம்!
  16. தன் குறிக்கோளை அடைய எதையும் செய்யத் துணிந்த ஓர் அரசகுமாரன்!
  17. இலங்கைக்குப் பாலம் கட்டியதும் அணில் முதுகினைத் தடவியதும்!
  18. விஷ்ணு பக்தியால் வந்தவனல்ல விபீஷணன்!
  19. யுத்தத்தில் மாண்டவர் பல கோடிப் பேர்!
  20. பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்திய மாற்றங்கள்!
  21. திரும்பியது ஆகாயமார்க்கமல்ல பூமியில் ஊர்ந்த தேரில்!
  22. ஆரிய-திராவிட பிரச்சனை இதில் இல்லை!

வால்மீகி யார்? தொகு

வால்மீகி யார்? அவர் வாழ்ந்த காலம் எது? இந்த கேள்விகளை முன்னிறுத்தி நூலின் ஆசிரியரால் ஆய்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுவது போன்று காட்டுமிராண்டி அல்ல; சமஸ்கிருத மொழியை வெகு காலம் நன்கு பயின்று, கதை சொல்லும் முறையில் நல்ல தேர்ச்சி பெற்று கவிதை புனைந்தவர். அனுஷ்தூப் மீட்டர் என்ற நவீன சமஸ்கிருதத்தின் முதல்வர், வழிகாட்டி. இராமாயணக்கதை நிகழ்ச்சிகள் நடந்து வெகு காலத்திற்குப் பின் கி.மு.400ல் வாழ்ந்தவர் வால்மீகி.[1]

உண்மைகளை இனியும் மறைக்க முடியுமா? தொகு

இதில் அயோத்தியிலிருந்து சித்ரகூடம்வரை, அங்கிருந்து பஞ்சவடி, பின் மதங்க முனிவரின் ஆசிரமம், கிஷ்கிந்தை, மகேந்திர மலை, அங்கிருந்து அனுமன் கடந்து சென்ற நீர்சூழ்ந்த ஒரிசாவிலுள்ள லங்கா' இவை அனைத்தும் இன்றைய வடஇந்தியப்பகுதி என தெரிவிக்கிறார்.[2] வால்மீகி குறிப்பிடும் வர்ணனைகள் அதன் பூகோள அமைப்பு இன்றுள்ள ஸ்ரீலங்கா அல்ல.இராமன், இலக்குமணன், அனுமன் ஆகியோர் விந்திய மலைக்குத் தெற்கே வரவேயில்லை என்றும், இராவணன் இன்றைய ஸ்ரீலங்காவில் வசித்த பூர்வீக அரசனல்ல விந்திய மலைக்கு வட பகுதியில் கோந்த் என்ற இனக் குழுவின் தலைவன். இந்த கோந்த் இனக்குழு வசித்த சற்று வட பகுதியில் வசித்த வாலி, சுக்ரீவன் ஆகியோர் கொருக் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். [3]

ஆதி காப்பியத்தின் அடித்தளம் தொகு

வால்மீகி உருவாக்கிய இராமாயணக் கதை ஒரு யதார்த்தமானது. கதையின் ஓட்டம் யதார்த்தமானது என்பதைக் காட்டிடும் சுலோகங்கள்.

பால காண்டம் தொகு

  1. 20வது சர்க்கம்-17 முதல் 20 முடிய
  2. 44வது சர்க்கம் 11வது சுலோகம்

விசுவாமித்திரர் இராமனுக்கு கூறியவை இராமனை அழைத்துச் செல்லும் நோக்கம் என்ன என்பதை சொல்வதாகும்.[4]

அயோத்தியா காண்டம் தொகு

  1. 24வது சர்க்கம்-25வது சுலோகம்
  2. 107வது சர்க்கம்-8வது சுலோகம்
  3. 111வது சர்க்கம்-111வது சுலோகம்

இராமனின் முடிசூட்டு விழாவை நடத்திட வேண்டுவது குறித்து சொல்வதாகும் [4]

ஆரண்ய காண்டம் தொகு

  1. 6வது சர்க்கம்-13வது சுலோகம்
  2. 30வது சர்க்கம்-30 முதல் 32 முடிய
  3. 31வது சர்க்கம்-34வது சுலோகம்
  4. 45வது சர்க்கம்-25வது சுலோகம்
  5. 49வது சர்க்கம்-25வது சுலோகம்
  6. 54வது சர்க்கம்-2முதல் 50 முடிய சுலோகம்
  7. 56வது சர்க்கம்-2வது சுலோகம்
  8. 62வது சர்க்கம்-2வது சுலோகம்

ஆகியவை இராமர்,லட்சுமணன்,சீதை,ஆகியோரின் வாழ்க்கை முறையை சொல்வதாகும்.[4]

கிஷ்கிந்தா காண்டம் தொகு

  1. 59வது சர்க்கம்-12,15,16,21 சுலோகங்கள்

இவை சீதையை இராவணன் தூக்கிச் சென்றதை சொல்வதாகும்.[4]

சுந்தர காண்டம் தொகு

  1. 30வது சர்க்கம்-4வது சுலோகம்
  2. 57வது சர்க்கம்-6வது சுலோகம்

அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்கு, நீர் சூழ்ந்த கடலின் மீது களைப்படையாமல் வான்வழியில் செல்வதை சொல்வதாகும்.[4]

யுத்த காண்டம் தொகு

  1. 3வது சர்க்கம் -1வது சுலோகம்
  2. 8வது சர்க்கம் -58வது சுலோகம்
  3. 19வது சர்க்கம் -5வது சுலோகம்
  4. 111வது சர்க்கம் -111வது சுலோகம்[4]

அக்காலத்திய ரிஷிகள்,அரக்கர் என்று அழைக்கப்பட்ட மலைவாசிகள், வனவாசிகள், இவர்களின் தலைவர்களைக் கொன்று அடக்கி ஆள விசுவாமித்திரர் இராமனது உதவியை நாடி, அதன் விழைவாய் இராமன் ஜனஸ்தானத்தின் மலைவாசிகளின் தலைவன் கோருக் இன வாலியையும்,வனவாசிகளின் தலைவன் கோந்த்இன இராவணனையும் அழித்து முறையே சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்கு இராச்சியத்தை ஆளும்படி கட்டளையிட்டு தனது மனைவியையும் மீட்டுக்கொண்டு அயோத்தி திரும்புகிறான் என்பதே வால்மீகி சொன்ன இராமாயணக்கதை.இதுவே கதையின் அடித்தளம் [2]

இலக்கியப் புரட்டர்கள் புகுந்தது எப்போது? தொகு

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பும்,சற்று பின்பும் வெளியான சமஸ்கிருத இலக்கியங்களில் இலங்கை என்பது இன்றைய இலங்கை என்றோ, இராவணனுடைய லங்கா என்றோ எந்த குறிப்பும் இல்லை. கி.பி.1010-1050 ஆண்டுகளில் உஜ்ஜயினியை ஆண்ட போஜராஜா என்பவர் காலத்தில் உருவானது சம்பூர்ண இராமாயணம் அதில் இராவணனுடைய திரிகூட மலையிலிருந்த லங்கா இன்றைய சிங்களத் தீவு என எந்த குறிப்பும் இல்லை, அந்த குழப்பம் அன்று ஏற்படவுமில்லை.கி.பி.330 வாக்கில் வடக்கே ஆட்சி செய்த சமுத்திர குப்தன் காலத்தில் இன்றைய இலங்கையை ஆட்சி செய்த மேகவர்மன் சமுத்திர குப்தனுக்கு பரிசுகள்,வழங்கி தொடர்ந்து பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது, அப்போது எழுதப்பட்ட அரசு ஏடுகளிலோ, இலக்கியங்களிலோ லங்கா என்று குறிக்கப்படவில்லை, மாறாக சிங்களம் என்றே குறிக்கப்பட்டுள்ளது.[2] கி.பி.602-648 வரை வடக்கே ஆட்சி புரிந்த ஹர்ஷர் காலத்தில் உருவான ரத்னாவளியில் இன்றைய இலங்கை லங்கா என்று ஒரு தடவையேனும் குறிக்கப்பட்டது இல்லை

இன்றைய இலங்கையின் வரலாற்றைக் கூறுகிறது மகாவம்சம் . தமிழர்களின் படையெடுப்பால் அன்றைய அனுராதபுரம் அழிந்ததையும், அங்கு ஆட்சி செய்த மகிந்தன் என்ற அரசனைப் பற்றியும் விரிவாக கூறும் மகாவம்சத்தில் சிங்களம் என்றே குறிப்புகள் உள்ளது,வடக்கே உள்ள லங்காவைப் பற்றியோ விந்திய மலையைப் பற்றியோ எந்தக்குறிப்பும் இல்லை.தொடர்ந்து கி.பி.1164 வரை சோழ அரசர்களுக்கும், இலங்கை அரசர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்தன. இறுதியில் பராக்கிரம பாஹு என்ற சிங்கள அரசன் வெற்றி பெற்று தனது ஆட்சியை நிலைநாட்டிக்கொண்டான்.மேலும் சிங்களத்தீவு பற்றிக் குறிப்பிடும் தமிழ் ஏடுகள் ஈழம் என்றே கூறுகின்றன.வால்மீகி இராமாயணத்தில் இலக்கிய புரட்டு வேலை கி.பி.1050 -கி.பி.1112 காலகட்டத்தில் சோழ அரசர்களின் பேராதிக்கம் நிகழ்ந்த காலத்தில் நடந்தது.[2]

விந்தியமலைப் பிரதேசம் தென்னிந்தியாவான விந்தை! தொகு

சிங்களத் தீவை சோழ அரசர்கள் வென்றதை வரலாற்றுப் பதிவாக்க இலக்கிய புரட்டர்கள் மாற்றம் செய்தார்கள்.[2] வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம்-6 சுலோகம் 14,15,16ல் சுக்கிரீவன் இராமனை முதன்முதலாக சந்தித்ததையும்,ஒரு அழகான பெண்ணை கழுதைகள் பூட்டிய ஒரு சகடத்தில் (வண்டியில்) வைத்து பலவந்தமாக கொண்டு சென்றதாக தான் நேரில் கண்டதாக கூறுகிறான். மேலும் வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம்-7 சுலோகம் 1,2ல் இராவணனைப் பற்றி தனக்கு தெரியாது என திட்டவட்டமாக சுக்ரீவன் சொன்ன வாக்குமூலம்.இன்றைய இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம்-40 முதல் சர்க்கம் 43 முடிய சோழப் பேரரசின் பூகோள விபரங்கள் ஆகும். மேலும் சுக்ரீவனும் அவனது இனத்தவரும் பேசியது படாயீஸ் என்னும் மொழி என வால்மீகி குறிப்பிடுகிறார்.[1] வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம்-7,8ல் ஆயிரம் தலைகள் கொண்ட விந்திய மலைகளிலும், அதன் பள்ளத்தாக்குகளிலும் அருகில் உள்ள காடுகளிலும் சீதையை தேடுங்கள் என சுக்ரீவன் உத்திரவிட்டான் என்பதாகும். இன்றைய இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம்-40 முதல் சர்க்கம் 43 முடிய உள்ள சுலோகங்கள் காயத்ரி மீட்டர் பாணியில் எழுதப்பட்டுள்ளது [1] இராவணனது லங்கா மலை உச்சியிலிருந்த ஒரு நகரம் என்பது வால்மீகி இராமாயணம். ஆனால் 25 ஆயிரம் சதுர மைல்கள் பரப்புள்ள சிங்களத்தீவு எவ்வாறு இருக்க முடியும் என இராமாயணப் புரட்டர்கள் சிந்திக்கவே இல்லை.[2]

ஆரண்யகாண்டம் 16வது சர்க்கம் 15வது சுலோகம் இது

-வால்மீகி இராமாயணம்.

இதன் விளக்கம்."ரொம்ப ரொம்ப குளிர் மேலைக்காற்று வீசுகிறது" அதாவது குளிர்கால மாதங்களான டிசம்பர்,சனவரி,பிப்ரவரி (சமஸ்கிருத இலக்கியத்தில் மார்கசீர,திஸய,மஹா மாதங்களுக்கு தமிழ் மாதங்கள்-மார்கழி,தை,மாசி மாதங்கள் ஆகும்.) இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேலைக்காற்றும் (வடமேற்கு பருவக்காற்று)விந்திய மலைக்கு தெற்கே கீழைக்காற்றும் (வடகிழக்கு பருவக்காற்று)வீசும் இந்த பூகோல சீதோசநிலையினை நன்கு அறிந்தவர் வால்மீகி அதனால்தான் பஞ்சவடியில் வீசிய காற்று மேலைக்காற்று என அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார். இந்தியாவின் இந்த எதிரும் புதிருமான திசைகளில் காற்றோட்டம் செல்வதை ஆங்கிலேயரின் அரசாங்க வெளியீடு உறுதி செய்கிறது.[5] பஞ்சவடி என்ற இராமனின் பர்ணசாலை இருந்த இடம் இன்றைய ஆந்திராவின் கோதாவரி அல்ல. மாறாக விந்திய மலைக்கு வடக்கே வால்மீகியால் சொல்லப்பட்ட கோதாவரி நதிக்கரையிலிருந்த ஓர் இடம், பார்லியும்,கோதுமையும் விளைந்த,மேலைக்காற்று வீசக்கூடிய இடம்.

காண்டங்களாகப் பிரித்ததின் நோக்கம் தொகு

இன்றைய இராமாயணம் 6 காண்டங்களை உடையது, உத்திரகாண்டத்தையும் சேர்த்து 7 காண்டமாக்கப்பட்டது. இவ்வாறு காண்டங்களாகப் பிரித்து எழுதிய ஏற்பாடு சோழர் காலத்திய அரசவைப் புலவர்களாக இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் செய்த சாதுர்யமான திரித்தல் வேலை.[1] இராமாயணத்தை பெரியதாக்கி தங்கள் காலத்திய விருப்பு வெறுப்புகளை திணிப்பதற்காக செய்த பெருமுயற்சி இது. வால்மீகி இராமாயணத்தை எழுத தேர்ந்தெடுத்த பாடல்பாணி அனுஷ்தூப் மீட்டர் வகை இந்த வகையில் உள்ள 10,000 பாடல்களை வரிசைப் படுத்தினாலே இராமாயணக் கதை ஓட்டம் எங்கும் தடைபடவில்லை.எஞ்சிய 14,000 பாடல் பாணி காயத்ரி மீட்டரிலும்,ஏனைய மீட்டர் பாணியிலும் எழுதப்பட்டுள்ளது.[1]

  1. குறிப்பாக இராமன்|இராமனை விஷ்ணு|விஷ்ணுவின் அவதாரம் என்று மாற்ற விஷ்ணு பக்தர்கள் நெடுங்காலமாக முயன்று செய்த ஏற்பாடு.
  2. ரிஷிகள் என்று சொல்லப்படும் அன்றைய பிராமணர்களை மிக உயர்ந்த மனிதர்களாக-தெய்வீக சக்தி படைத்தவர்களாக்காட்டுவது.
  3. மகாபாரதம் என்ற காவியம் 24,000 பாடல்களைக் கொண்டு பெரியதாக இருந்ததால் இந்த அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல பாடல்களை வால்மீகி எழுதிய அனுஷ்தூப் மீட்டர் வகையில் இல்லாமல் தான் கற்றறிந்த பாடல் பாணியில் பாடல்களை எழுதிச் சேர்க்க வாய்ப்பை உறுவாக்கியது.
  4. இராமனுக்கு அடுத்தபடியாக அனுமனை ஓரு தெய்வீகப் பிறவியாக்கி வழிபாட்டுக்குறிய ஏற்பாட்டிற்கு உள்ளாக்குவது.
  5. சோழர் காலத்திய விருப்பு வெறுப்புகளை திணிப்பதற்காக செய்த பெருமுயற்சி.

காலம் காலமாய் குருவால் சிஷ்யனுக்கு போதிக்கப்பட்ட கதை இராமாயணத்தை பெரியதாக்கி சோழர் காலத்திய பண்டிதர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை திணிப்பதற்காக பல காண்டங்களாக பிரிக்கப்பட்டது. (பாலகாண்டம் 4வது சர்க்கம்)[1]

பிள்ளைப்பேறு இல்லாத அரசர்கள் செய்ததென்ன? தொகு

அன்றைய கலகட்டத்தில் அடுத்து அரசாட்சிக்கு வாரிசு இல்லாத நிலையில் அரசனுக்காக அந்த நாட்டில் உள்ள முனிவர்கள், யாகங்கள் நடத்தி குழந்தை பிறப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சடங்கு முறையே புத்ர காமேஷ்டி யாகம். தன்னால் தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் பிறரால் குழந்தை பிறக்க ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடு.[6] இதை வால்மீகி இராமாயணத்தில் பாலகாண்டம் 14 வது சர்க்கத்தில் எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்குகிறார். புத்ர காமேஷ்டி யாகம் நடத்த களம் தயாராகிறது,16 தலைமை புரோகிதர்கள் தலைமையில் யாகம் நடத்தப்படுகிறது. யாகத்தில் ஆடுகள்,மாடுகள்,குதிரைகள் என 300க்கும் அதிகமான மிருகங்கள் பலியிடப்பட்டு தசரதனும், அவனது மூன்று மனைவியரும் தீயில் பொசுக்கிய மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்.அதன் பிறகு மூவருக்கும் குழந்தைகள் பிறக்கிறது.[4] ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவரை அழைத்து வந்து அசுவமேத யாகத்தை நடத்தியதாகவும், யாகத்திலிருந்து ஒரு பூதம் வந்து அமுதம் கொடுத்ததாகவும், அதை ரிஷ்ய சிருங்கர் பெற்று தசரதனுக்கும் தசரதனின் மனைவியருக்கும் கொடுத்து அதன் பிறகு குழந்தை பிறந்ததாகவும் பாலகாண்டம் 15 வது சர்க்கம் முதல் 18வது சர்க்கம் வரை இடைச்செருகல்களை செய்துள்ளனர்.[1]

இராமனுக்குப் போர்ப்பயிற்சி-திருமணம் தொகு

புத்ர காமேஷ்டி யாகம் மூலமாக நான்கு புதல்வர்களை பெற்ற தசரதன் மூத்த மகனான இராமனுக்கு திருமணம் செய்விக்க ஆலோசனை செய்த சமயம் விசுவாமித்திர முனிவர் தசரதனின் அரண்மனைக்கு வந்தார். இவர் சத்திரியராக இருந்து தனது தவ வலிமையால் (பிராமணராக) பிரம்ம ரிஷியாக மாறியவர், இவரைக் கண்டாலே பிராமணர்களும், சத்திரியர்களும் பயந்து நடுங்குவார்கள்.தசதரனுக்கும் அந்த அச்சம் இருந்தது, வசிட்டர் முதலானோர் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். விசுவாமித்திரர் தான் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும் அதை அரக்கர்கள் சீர்குலைத்துவிடக் கூடும் என்பதால் இராமனை யாகம் சிறப்பாக நடக்க பாதுகாப்பு வழங்க தன்னுடன் அனுப்புமாறு வேண்டினார். மேலும் இராமன் அரசனாகப் போவதால் இராமனுக்கு சகலவிதமான ஆயுதப்பயிற்சியும், அஸ்திரங்களையும் பிரயோகிக்க தகுந்த பயிற்சி பெறவேண்டியது அவசியம் என்பதால் அதை தானே வழங்குவதாகவும் கூறி நின்றார். தசரதன்மகன் இராமன் மீது கொண்ட பாசத்தினாலும், அரக்கர் கையில் சிக்கி மாண்டுவிடுவானோ என்ற பய உணர்ச்சியினால் ஏதும் பேசாது மௌனமாக இருக்கவே வசிட்டர் குறுக்கிட்டு பிரச்சனையை முடித்துவைக்கிறார்.[6]

போர் பயிற்சியும்,யாகமும் தொகு

விசுவாமித்திர முனிவர் யாகம் நடத்தும் சித்தாஸ்ரமம் வந்து இராமனின் பாதுகாப்பில் யாகத்தை நடத்துகிறார், யாகம் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது யாகத்தை கலைக்க தாடகையும், அவளது படைகளும் செய்த அத்துனை முயற்சிகளையும் முறியடிக்கிறார் இராமன். இந்த சண்டையின் மூலமாக அத்துனை போர்முறைகளையும் கற்றுக்கொள்கிறார்,யாகமும் விசுவாமித்திர முனிவர் நினைத்த மாதிரி வெற்றிகரமாக நடைபெறுகிறது.[6]

இராமனின் திருமணம் தொகு

வெற்றிகரமாக யாகத்தை முடித்த (கோசிக முனிவர்) விசுவாமித்திரர் மிதிலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி இராமன் இலக்குமணன் இருவரையும் அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் மிதிலையில் உள்ள தனுசு(வில்)பற்றியும் கூறுகிறார், இதுபற்றி கம்ப இராமாயணத்தில் நான்கு விதமாக அதாவது ஒன்று தேவர்கள் ஜனகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது எனவும், இரண்டு ஜனகனின் மூதாதையரான தேவரதன் என்ற அரசனுக்கு சிவபெருமானால் பரிசாக அளித்ததாகவும், மூன்று பரசுராமன் சிவபெருமான் மீது ஏற்பட்ட கோபத்தால் வீசி எறிந்தது எனவும்,நான்காவது சீதை அனுசுயாவிடம் ஜனக மகாராஜனுக்கு வருண பகவானால் வழங்கப்பட்டது எனவும் தகவல்கள் உள்ளது.[7] அந்த சிவ தனுசை இராமன் வளைத்து நாண் ஏற்றும்போது வில் உடைகிறது,அதனைத் தொடர்ந்து இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் இனிதே நடைபெறுகிறது. இதை பாலகாண்டம் 31 வது சர்க்கம் வர்ணிக்கிறது.[6]

கைகேயியைப் பற்றிய நெடுங்காலப் பொய்யுரை! தொகு

முன்னொருகாலத்தில் தண்டகாரண்யம் என்ற (இன்றைய மத்தியப் பிரதேசத்தில்)பிரதேசத்தில் வசித்து வந்த மலைவாழ் அரசன் சம்பரன் என்பவனை எதிர்த்து போரிட்டு சம்பரனால் தோற்கடிக்கப்பட்ட தசரதன் படுகாயமடைந்து போர்களத்திலே வீழ்ந்து கிடக்க கைகேயி தைரியமாக போர்களத்திலிருந்து எடுத்துச் சென்று உயிரூட்டினாள். அப்போது தசரதன் உனக்கு இரண்டு வரம் தருகிறேன் நீ எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள், நிச்சயமாகத் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தான். நோய்வாய் பட்டு கஷ்டப்பட்ட கணவனிடம் வரத்தை நிறைவேற்றிக்கொள்ள அவள் பணிவிடை செய்யவில்லை மாறாக கணவனை காப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்தாள். காலப்போக்கில் வரத்தைப்பற்றியே மறந்தும் போனாள். தனது ஆசையை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தன் கணவனுடன் வாழ்ந்ததாக அவளைப்பற்றிய வால்மீகியின் வர்ணனை இல்லை.[6] இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்ததை அறிந்த கைகேயி மகிழ்ந்து செய்தி சொன்னப் பணிப்பெண்ணுக்கு இனிப்பு வழங்கி மகிழ்கிறாள். இதைக்கண்ட மந்தரை என்ற பணிப்பெண் கைகேயியின் மகிழ்ச்சி தவறானது,ஆபத்தானது என்று வாதிடுகிறாள். மந்தரையை கண்டித்து கைகேயியின் பதிலுரையை கம்பன் தனது காவியத்தில் அழகாக வடித்துள்ளார்.

தசரதன் செய்த சூழ்ச்சிகளெல்லாம் நியாயம் தான்,கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் மீறிச் செயல்பட அவனுக்கு உரிமையுண்டு அவன் நாட்டின் அரசன் அவன் எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அது தர்மத்தின் வழிபட்டது. ஆனால் கைகேயியின் நிலையைப் பற்றி கேவலமான சித்திரத்தைத் தீட்டி,தசரதன் யோக்கியன்;கைகேயி சண்டாளி,என நெடுங்காலமாக பொய்யுரை கூறிவந்துள்ளனர்.

உடமைப் பித்தும் பதவி ஆசையும் தலைக்கேறினால்! தொகு

கைகேயியின் செவிலித்தாய் மந்தரையின் சுயநலப்போதனைகளில் மயங்கிய கைகேயி, இராமன் முடிசூட்டிக் கொண்டால் தானும்,தன்மகனும் உதாசீனப்படுத்தப்படுவார்கள் எண்ணம் கைகேயியை வாட்டுகிறது. அதன் விளைவு பொறாமையின் உச்சத்தில் நின்று கொண்டு கோசலநாடும்,அதன் ஆட்சியும் தன் கைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல் ஏன்? இழிநிலைக்கு தள்ளப்பட வேண்டும். மகன் பரதன் இராமனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் அல்லவே! அவனும்,அவனது வாரிசுகளும் கோசலநாட்டு மன்னர்களாக வரும் வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும். உடமைப்பித்தும்,அரச பதவி ஆசையும் தலைக்கேறினால் அதற்கே உரித்தான சுயநலவெறி தலை தூக்குவது இயல்பு தானே?. தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தனது முடியை கலைத்தும்,வளையல்களையும்,நெற்றித்திலகத்தையும் அகற்றியும், நடனமாடும் மயில் சோர்ந்து கீழே விழுந்தது போலவும்,கசங்கிய மலர் கீழே உருண்டது போலவும் துன்பத் துயர்முகம் காட்டி தரையில் படுத்துக் கொண்டாள் என கம்பர் அற்புதமாக சித்தரிக்கின்றார்.[6] மகனுக்கு மறுநாள் முடிசூட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகிழ்ச்சியுன் இச்செய்தியை கைகேயியிடம் சொல்ல அவளது அரண்மனை வருகிறான். அவளது நிலைகண்டு ஏன் இந்த நிலை? உனக்கு கேடு செய்தது யார்? சொல் அவர்களை உடனே தண்டிக்கிறேன். கைகேயியின் பதில் மெதுவாக ஆனால் உறுதியாக வெளியாகிறது."சம்பரனால் காயம் அடைந்த போது எனக்கு இரு வரங்கள் தருவதாக சொன்னீரே அந்த வரங்களை இப்போது தாருங்கள் அதன் பிறகே என் துயர் தீரும்" என்றாள்."தந்தேன்! தந்தேன்!" என்று குதூகலித்துச் சொல்லுகிறான். நான் கோரும் வரங்கள் இவைதான் என்கிறாள். இதை கம்பர்

அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் வரை! தொகு

தன் அன்னையிடமும் ஏனையோரிடமும் விடைபெற்று இராமன்,சீதை,இலக்குமணன் மூவரும் அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்கின்றனர். கோசலநாட்டு மக்கள் இராமன் காட்டுக்குச் செல்லக்கூடாது என தொடர்ந்துவர இராமனை ஏற்றிக்கொண்ட தேர் தேம்ஸ் நதிக்கரையில் நிற்கிறது. அன்றைய இரவை நதிக்கரையில் கழிக்கின்றனர், மக்கள் தொடர்ந்து வரக்கூடாது என்பதால் இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நதியைக்கடந்து தெற்கே சென்றுவிடுகின்றனர்.

இராமன் சென்ற பாதை அயோத்தியிலிருந்து கங்கை நதி வரை 55 மைல், கங்கையிலிருந்து சித்திரக்கூடம் வரை (யமுனை நதியை கடந்து சென்றது வரை)45 மைல், (அடுத்து இராமன் தங்கியது ஆத்ரீ முனிவர் ஆசிரமம்) சித்துரக்கூடத்திலிருந்து ஆத்ரீ முனிவர் ஆசிரமம் வரை 12 மைல், (ஒரு நாள் பயணம்) ஆத்ரீ முனிவர் ஆசிரமத்திலிருந்து சரபங்க முனிவர் ஆசிரமம் வரை 12 மைல், அடுத்து சரபங்க முனிவர் ஆசிரமத்திலிருந்து சுதீக்‌ஷண முனிவரின் ஆசிரமம் வரை 20 மைல், சுதீக்‌ஷண முனிவரின் ஆசிரமத்திலிருந்து அகத்தியருடைய சகோதர்ரின் ஆசிரமம் வரை 18 மைல், அங்கிருந்து அகத்தியரின் ஆசிரமம் நான்கு (4) மைல், அகத்தியரின் ஆசிரமத்திலிருந்து தெற்கே பஞ்சவடியில் இராமன் பர்ணசாலையை அமைத்த இடம் வரை (9) ஒன்பது மைல் ஆக அயோத்தியிலிருந்து பஞ்சவடி வரை இராமன் தெற்கு நோக்கி வந்தது 200 மைல்களே. அதை அடுத்து இருந்த நீர் சூழ்ந்த பகுதியே இராவணனின் லங்காபுரியாகும். இந்த வர்ணனை ஆரண்ய காண்டம் 116வது சர்க்கம் முழுவதிலும் வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது. கோசலத்தின் தலைநகரான அயோத்தியிலிருந்து இராவணனது இருப்பிடமான லங்காபுரி(திரிகூடமலை)வரை இராமன் சென்ற வழியை வால்மீகி சித்தரித்தபடி காலம் சென்ற திரு.பரமசிவ அய்யர் வரைந்த பூகோலப்படம்(படம்)[2] வால்மீகி சித்தரித்திடும் இராமனது பாதையை அந்த மாபெரும் கவிஞன் கண்ணால் கண்டதையே தனது காவியத்தில் படைத்துள்ளார். இந்த பாதைகள் இன்று உருவம் மாறியிருந்தாலும்,தடம் மாறாமல் உள்ளது என கூறுகிறார் அமிர்தலிங்க அய்யர். [1]

வனங்களில் புகுந்த முனிவர்கள் கோரியது யாது? தொகு

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள் தங்களது ஆசிரமங்களில் இராமன்,சீதை,இலக்குமணன் ஆகியோரை விருந்தினர்களாக பல ஆண்டுகள் தங்கி இருந்த பொழுது தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள் அப்பகுதியில் உள்ள அரக்கர்களை அழித்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இராமனும் அவர்களுக்கு வாக்குறுதி தருகிறான்,அதனை ஆரண்யகாண்டம் 5வது சர்க்கம் முழுவதும் வால்மீகி வர்ணிக்கிறார். இதனை சீனிவாச சாஸ்திரியார் உறுதிபடுத்துகிறார்.[8] ஆரண்யகாண்டம் 10வது சர்க்கம் 19வது சுலோகம்

இதன் பொருள் "என் உயிரைத் துறப்பேன்!உன்னைத் துறந்தாலும் துறப்பேன்!லட்சுமணனையும் துறப்பேன்! ஏன்? என் சர்வத்தையும் துறப்பேன்! ஆனால் பிராமணர்களுக்குச் செய்த என் பிரதிக்ஞையை மட்டும் துறக்கமாட்டேன். அகத்திய முனிவர் இராமன்|இராமனின் வருகையை அறிந்து வரவேற்று தனது கோரிக்கையை தெறிவிக்கிறார். ஆரண்யகாண்டம் 10வது சர்க்கம் 66வது சுலோகம் முதல் 76வது சுலோகம் வரை வால்மீகி வர்ணித்துள்ளார்.[4]

அந்த வான்மதியின் சோதிமுகம் காணாதவனா அவன்? தொகு

இலக்குமணனைப் பற்றி இராமாயண புரட்டர்கள் சொல்லி வைத்த புரட்டு வேலைதான் "வான்மதியின் சோதிமுகம் காணதவன்" என்ற பட்டம். அதாவது வனவாசத்தில் இருந்த 14 ஆண்டுகள் இலக்குமணன் "சீதையின் முகத்தை இலக்குமணன் என்றுமே பார்த்ததில்லை, அவளது பாதங்களில் விழுந்து தினசரி வணங்கும் போது அவளது தாமரைப் போன்ற பொன்னடிகளைக் கண்டானே தவிர அவளது முகத்தை அவன் பார்த்ததே இல்லை" என எழுதி வைத்தனர் இராமாயணப் புரட்டர்கள்.

சீதைக்கும் இராம-இலக்குமணனுக்கும் இடையேயன உறவு இயற்கையான அன்றைய குடும்ப உறவு முறைகள்,கங்கை ஆற்றைக்கடக்க படகில் ஏற முடியாமல் சீதை தவிக்கிறாள் இலக்குமணன் சீதையைத் தொட்டு தூக்கி படகில் வைக்கிறான். மேலும் இலக்குமணன் சொல்கிறான் "சூரியவெப்பம் தாக்கும்போது சீதையின் முகத்தை இனம் கண்டு கொள்வது சிரமமாக இருப்பதுபோல சந்திரனின் முகமும் பிரகாசிக்காமல் இருக்கிறது" (ஆரண்யகாண்டம் 16வது சர்க்கம் 14வது சுலோகம்).

சூர்ப்பனகையை மானபங்கம் செய்தது தெய்வீகத் தர்மமா? தொகு

பஞ்சவடியில் இராமனும் ஒரு சில முனிவர்களும் இருந்த போது நடந்த சம்பவம். இராமன் இருந்த பஞ்சவடி தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்ற வனப்பகுதி. இப்பகுதி இராவணனின் தம்பிகளான கரன் மற்றும் தூஷணனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகும். இவர்களுக்கு (காமவல்லி)சூர்ப்பனகை என்ற தங்கை இருந்தாள், இவள் இராமனின் இடத்திற்கு வருகிறாள். இராமனைக் காண்கிறாள் இராமன் மீது காதல் கொள்கிறாள். இராமனின் முன் வந்து நின்ற சூர்ப்பனகை இராமனைப் பார்த்து "எங்களின் ஆளுகைக்குட் பட்ட இப்பிரதேசத்திற்கு வந்திருக்கும் தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று வினவ, இராமன் அயோத்தியில் நிகழ்ந்தவற்றையும்,தான் வந்த விபரத்தையும் கூறிவிட்டு, நீ யார்? உன் பெயரென்ன? என கேட்கிறான்.

"என் பெயர் சூர்ப்பனகை அசுரர்களின் அரசனான விஸ்ரவசுவின் மகன் இராவணனைக் கேள்விப் பட்டதுண்டா? அவன் என் சகோதரன் எனக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உண்டு.கரன்,தூஷணன் என்று அழைப்பார்கள். உன் மீது எனக்கு மிகுந்த ஆசை நீ சீதையை நிராகரித்து விட்டு என்னை ஏற்றுக்கொள் இந்த தண்டகாரண்யம் முழுவதும் உன் வசமாக்குகிறேன்" என்று கூற அதற்கு இராமன் குரூரமான கிண்டலும்,கேலியுமாக பேசுகிறான். "ஓ சூர்ப்பனகையே நான் திருமணம் ஆனவன் அதோ நிற்கிறாளே சீதை அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். இதோ இங்கு இருக்கிறானே என் தம்பி இலக்குமணன் திருமணமாகாதவன் (க்ருத்தரக்) சௌந்தர்யமான வாலிபன், ஒரு மனைவிக்காக ஏங்குபவன் நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாயோ அவ்வளவு அழகுடையவன் அவனிம் போ" என்று கூற ஆசையினால் உந்தப்பட்ட சூர்ப்பனகை இலக்குமணனைப் பார்த்து வேண்டுகிறாள். அதற்கு இலக்குமணன் சூர்ப்பனகையே நான் யார் தெறியுமா? இராமனது வேலைக்காரன்,நீயோ அரசகுமாரி நீ ஒரு வேலைக்காரனின் மனைவியாவதைவிட அரசகுமாரனான இராமனை மணப்பதே சரி ஆகவே இராமனிடமே போ! என்று கூறுகிறான்.[6]

இராமனும்,இலக்குமணனும் அளித்த பதிலால் கோபமுற்ற சூர்ப்பனகை "எனது கேள்விக்கு நீங்கள் நேர்மையாக பதிலளிக்காவிட்டால் இந்த இடத்திலேயே சீதையை கொன்றுவிடுவேன்" என்று கூறி சீதையை நோக்கி பாய்கிறாள். சீதைக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்த இராமன் சூர்ப்பனகையைப் பிடித்துத் தள்ளிவிடுகிறான். (நிக்ருஹ்ய- ஆரண்ய காண்டம் 18 வது சர்க்கம் 13 வது சுலோகம்)[8] "இலக்குமணா மேலும் தாமதிக்காதே! விளையாடாதே! உடனடியாக அவளை அங்கஹீனப் படுத்தி விரட்டிவிடு" என்று உத்திரவிடுகிறான். இராமனின் சொல் பிசகாமல் தொண்டு புரியும் இலக்குமணன் சூர்ப்பனகையின் மூக்கையும்,காதையும் (தனங்கள்)மார்பகங்களையும் அறுத்தெறிகிறான்.(ஆரண்ய காண்டம் 17,18 வது சர்க்கம் முதல் 31 வது சர்க்கம் வரை வால்மீகியால் வர்ணிக்கப் பட்டுள்ளது.[4]தெய்வீகத் தர்மமா? என்பது அமிர்தலிங்க அய்யரின் கேள்வி.

சான்றாவணம் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 RAMAYANA VIMARSA.-D.AMIRTHALINGA IYYAR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 RAMAYANA AND LANKA.-D.PRAMASHIVA IYYAR
  3. RAMAYANA MYTH OR REALITY H.D.SANGALIYA-ARCHIVIST
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 RAMAYANA VALMEGI
  5. "இந்தியன் இம்பீரியல் கெசட்டீர்" பண்டைய இந்தியா-டி.டி.கோஸாம்பி .
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 இராமாயணம் ஓர் ஆய்வு.கே.முத்தையா-வைகை வெளியீடு.1981&2003ம் ஆண்டு பதிப்பு
  7. கம்ப இராமாயணம் பாலகண்டம்-விஜயா பதிப்பகம் வெளியீடு.2007ம் ஆண்டு பதிப்பு
  8. 8.0 8.1 இராமயணப் பேருரைகள்.-மகாகணம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார்.

http://www.indiatoday.in/magazine/heritage/story/19810430-not-sri[தொடர்பிழந்த இணைப்பு] lanka-but-sonepur-in-orissa-is-the-lanka-of-ramayana-archeologist-772872-2013-11-22.