இலங்கை மூதவை

(இலங்கை செனட் சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை மூதவை அல்லது இலங்கை செனட்சபை (Senate of Ceylon) என்பது இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை சோல்பரி ஆணைக்குழு மூலம் 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக 1947, நவம்பர் 12 இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு 1971, அக்டோபர் 2 ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு 1972, மே 22 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Senate of Ceylon
இலங்கை மூதவை
வகை
வகைமேலவை
காலக்கோடு
நாடுஇலங்கை
தோற்றம்1947
முன்னிருந்த அமைப்புஇலங்கை அரசாங்க சபை
பின்வந்த அமைப்புஎதுவும் இல்லை
கலைப்பு2 அக்டோபர் 1971
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்30
தேர்தல்
தலைமையகம்
கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபை 1947 முதல் 1971 வரை மூதவையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது குடியரசுக் கட்டடம் என அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையாக மூதவை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மூதவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்[1].

1970 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. 1971 மே 21 இல் இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது[2]. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது[2]. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971) என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது[2]. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

உறுப்பினர்கள் தொகு

செனட் சபை 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் செனட்டர்கள் என அழைக்கப்பட்டனர். 15 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களால் விகிதாசார உறுப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாற்றத்தக்க வாக்குரிமை இருந்தது[3]. ஏனைய 15 பேரையும் பிரதமரின் பரிந்துரையில் இலங்கையின் ஆளுனர் நியமிப்பார். சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்[3].

செனட் உறுப்பினர்களின் குறைந்த வயதெல்லை 35 ஆக இருந்தது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். ஆனால், குறைந்தது இரண்டு அரசாங்க அமைச்சர்கள் செனட் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்[3]. ஒரு செனட்டரின் வழமையான பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

உசாத்துணைகள் தொகு

  1. Wickramanayake, Prabath. "Sri Lankan Senate". Analyst Journal இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120326014616/http://www.analystjournal.com/global-a-political-issues/world/236-sri-lankan-senate.html. பார்த்த நாள்: 24 June 2011. 
  2. 2.0 2.1 2.2 Rajasingham, K. T.. "Chapter 22: 'Only God Can Save the Tamils'". SRI LANKA: THE UNTOLD STORY இம் மூலத்தில் இருந்து 2011-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110907051245/http://www.atimes.com/ind-pak/DA12Df03.html. பார்த்த நாள்: 2011-09-25. 
  3. 3.0 3.1 3.2 Rajasingham, K. T.. "Chapter 11: On the threshold of freedom". SRI LANKA: THE UNTOLD STORY இம் மூலத்தில் இருந்து 2011-08-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110804215852/http://www.atimes.com/ind-pak/CJ20Df03.html. பார்த்த நாள்: 2011-09-25. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மூதவை&oldid=3791800" இருந்து மீள்விக்கப்பட்டது