உடையார் (புதினம்)

ரவிதாசன்

உடையார் (ஒலிப்பு) என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராசராச சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

உடையார்
உடையார்-பாகம் 6
நூலாசிரியர்பாலகுமாரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்விசா பப்பிளிகேசன்சு
வெளியிடப்பட்ட நாள்
மே 2002

கதைக்களம்

தொகு

கல்கியின் பொன்னியின் செல்வன் இராசராச சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், இராசராச சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.

கதைப் பின்னணி

தொகு

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் ஒன்றாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், இராசராச சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இராசராசர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள செய்திகள் இந்தப் புதினம் எழுதுவதற்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கதை மாந்தர்கள்

தொகு

இராசராசர், பஞ்சவன் மாதேவி, கருவூர்தேவர், இராசேந்திரன், வந்தியத்தேவன், குந்தவை - இராசராசனின் தமக்கை, குந்தவை - இராசராசனின் மகள், வந்தியத்தேவன் - குந்தவையின் கணவன், கிருட்டிணன் இராமன் - முதன் மந்திரி (பிரம்மராயர்), அருண்மொழி பட்டன் - உப தளபதி (கிருட்டிணன் இராமனின் மகன்), வைணவ தாசன் - ஒற்றர்படைத் தலைவன், குஞ்சர மல்லன் - முதன்மை சிற்பி, ஆதித்த கரிகாலன், உத்தம சோழன், செம்பியன்மாதேவி, இரவிதாசன், பரமேசுவரன், உமையாள், இராசராசி, இலத்தி சடையன், நித்தவினோத பெருந்தச்சன், குணவன் மற்றும் பலர்

கதைச் சுருக்கம்

தொகு

தஞ்சை பெரிய கோவில் கட்ட முடிவெடுத்து வரைபடங்கள் தயார் செய்து, காஞ்சியிலிருந்து அனுப்புகிறார்கள். தஞ்சைகருகில் தேவரடியார்கள் வந்த வண்டி காவிரியாற்றில் குடை சாய்ந்துவிடுகிறது. ஆனாலும் வரைபடங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அவற்றை காப்பாற்றுகிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லர் நேர்த்தியான நிலத்தை தேர்ந்தெடுக்கிறார். நிலத்தை அளந்து எல்லைகளைத் தீர்மானிக்கிறார்கள். கோவில் கட்டத் தேவையான பாறைகளை நார்த்தாமலையிலிருந்து வெட்டி எடுக்கிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லரின் சீடர்களான குணவனும், இலத்தி சடையனும் அரும்பணிபுரிகிறார்கள்.

இராசராச சோழரால் தோற்கடிக்கப்பட்ட சேர நாட்டு முன் குடுமி அந்தணர்கள் போரால் அவரை வெல்ல முடியாது என்பதால் பைசாசங்களை அனுப்புகிறார்கள். அதிலிருந்து கருவூர்த்தேவர் சோழ அரசரையும் தஞ்சையையும் காக்கிறார்.

திருவொற்றியூரில் இருந்து வடக்குப்பக்க எல்லையை காவல் காத்து வரும் இளவரசர் இராசேந்திரர் போர்க் கைதிகளை, அவர்களின் விருப்பத்துடன் கோவில் பணிக்குத் தஞ்சைக்கு அனுப்புகிறார். சிற்பிகள் கோவிலுக்கு சிலை வடிக்க மாதிரிக்காக எல்லா ஊர்களிலிருந்தும் தளிச்சேரிப் பெண்கள் வருவிக்கபடுகிறார்கள். நடு நாட்டு பிராமணர்கள் மற்றும் தொண்டை நாட்டு பிராமணர்கள் தஞ்சைக்கு வருகிறார்கள். அதனை தஞ்சை பிராமணர்கள் விரும்பவில்லை மற்றும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விரட்டுகிறார்கள்.

போர்க்கருவிகள் செய்யும் கருமார்கள் தாங்களும் சமுதாயத்தில் முதல் குடிகள் போல் நடத்தப்படவேண்டும் என்று அரசரிடம் முறையிடுகிறார்கள். அதற்கு அரசர் பொருத்திருக்குமாறு சொல்கிறார். அதனால் [எப்போதும் போர் பற்றியே சிந்திக்கும்] இளவரசர் இராசேந்திரர் அரசர் மீது சிறு கோபம் கொள்கிறார்.

எல்லா தரப்பினரும் கோவில் கட்ட தாமாக முன்வந்து உதவுகிறார்கள். நார்த்தாமலையில் பாறைகளை கணக்கிட கணக்கர்கள் தேவைப்படுகிறார்கள். வைணவதாசன் அறிவுரை செய்தும் தஞ்சை அந்தணர்கள் கணக்கெழுத மறுக்கிறார்கள். அருண்மொழி பட்டன் நடுநாட்டு அந்தணர்களை கணக்கெழுத பணிக்கிறான். குஞ்சரமல்லர் சவுக்கு கட்டையில் சாரம் கட்டி கற்களை மேலே எடுத்துப் போகலாம் என்கிறார். குணவன் அதற்கு மாற்றாக மண்ணால் சுற்றுப்பாதை அமைத்து கற்களை மேலே கொண்டு செல்லலாம் என்று சொல்லி அதற்கு மாதிரி செய்து காண்பிக்கிறான்.

கோவில் கட்ட போதுமான நிதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்படுகிறது மற்றும் மேலை சாளுக்கியம் சோழ நாட்டின் மேல் படை எடுக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு, இராசராசர் தலைமையில் படையெடுப்பு எற்படுகிறது. மேலைச் சாளுக்கியத்தை வென்று பெரும் பொருளோடு திரும்புகிறது சோழப் படை. கோவில் பணி நிறைவடையும் தருவாயில், லிங்கத்தை சுதாபிப்பதில் பிரச்சனை உண்டாகிறது. கருவூர்தேவர் முன்னின்று லிங்கத்தை சுதாபிக்கிறார். கோவிலின் முதல் தளத்தில் 108 வகையான நாட்டிய கரணங்களை பஞ்சவன் மாதேவியாரை மாதிரியாகக்கொண்டு சிலை வடிக்கிறார்கள். 81 கரணங்கள் முடிந்த நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் சிலர் இராசராசரைக் கொல்ல முயற்சிகிறார்கள், அந்த விச வாள் தாக்குதலை இராசராசரின் மனைவி பஞ்சவன் மாதேவி குறுக்கே புகுந்து வாங்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு தன உடல் பொலிவைத் தொலைத்து தஞ்சை காவல் தெய்வம் நிசும்ப சூதனியைப்போல் கோர உருவை அடைகிறார். எனவே அந்த சிலை அமைப்பு முற்றுப்பெறாமல் நிறுத்திவைக்கப்படுகிறது.

உச்சியில் கல் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட சுற்று மணற்குன்று மெல்ல அகற்றப்பட்டு, கோவில் கும்பாபிசேகம் சிறப்புற நடைபெறுகிறது. கோவிலைப் பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாக இராசராசர் அளிக்கிறார். மற்றும் கோவில் கட்ட உதவியவர்கள் எல்லோர் பெயரையும், கோவில் சுவற்றில் வடிக்க உத்தரவிடுகிறார். கோவிலில் நடனமாடிய தலைக் கோலிகள் எல்லோர் பெயரையும் அவர்களின் ஊர்களையும் கோவில் சுவற்றில் வடிக்க சொல்கிறார்.

சில காலம் கழித்து இராசேந்திரருக்கு முடி சூட்டிவிட்டு, உடையார்குடிக்கு குடிபெயர்கிறார் இராசராசர். மேலும் சில காலம் கழித்து ஒரு நாள் அமைதியாக அவர் உடலில் இருந்து ஒளிவடிவமாக உயிர் பிரிந்து தஞ்சை கோவில் கோபுரத்திற்கு செல்கிறது. மேலும் சில நாள் கழித்து இராசராசரின் மனைவி பஞ்சவன் மாதேவியார் உயிர் அதேபோல் பிரிகிறது. இராசராசரின் உயிர் வந்து மாதேவியாரின் உயிரையும் அழைத்துக்கொண்டு தஞ்சை பெரு உடையார் கோவிலுக்கு செல்கிறது.

சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட இராசேந்திர சோழர், செயங்கொண்டத்திற்கு அருகில் தஞ்சை பெரிய கோவிலைப்போன்றே ஒரு கோவில் கட்ட ஆரம்பிக்கிறார். தனது தலை நகரத்தையும் அங்கே மாற்றிக்கொள்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையார்_(புதினம்)&oldid=4049848" இலிருந்து மீள்விக்கப்பட்டது