உத்தம வில்லன் (2015 திரைப்படம்)

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(உத்தம வில்லன் (2014 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி, தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஜிப்ரானின் இசையில் கிரேசி மோகனின் வசனத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

உத்தம வில்லன்
இயக்கம்ரமேஷ் அரவிந்த்
தயாரிப்புலிங்குசாமி
கமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
கிரேசி மோகன்
இசைஜிப்ரான்
நடிப்புகமல்ஹாசன்
கே. பாலச்சந்தர்
ஊர்வசி
ஒளிப்பதிவுசியாம் தத்
படத்தொகுப்புவிஜய் சங்கர்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
ராஜ்கமல் பிலிம்ஸ்
வெளியீடுமே 02, 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முகநூல் பக்கம்உத்தம வில்லன்

கதை தொகு

முன்னணி நடிகரான மனோரஞ்சன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர், ஆனால் பல தனிப்பட்ட பிரச்சினைகளால் சூழ்ந்துள்ளார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, யாமினி என்ற பெண்ணுடன் உறவில் இருந்தபோதிலும், பிரபல திரைப்பட இயக்குனர் பூர்ணசந்திர ராவின் மகள் வரலட்சுமியை திருமணம் செய்ய அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். அவரது மகன் மனோகருடனும் மகள் வரலட்சுமியுடனான உறவில் விரிசல் ஏற்படுகிறது. தவிர, யாமினியுடனான உறவின் போது, திருமண பந்தத்தில் பிறந்த மனோன்மணி என்ற மகள் இருப்பதையும், யாமினியின் மரணத்திற்குப் பிறகு யாமினியின் கணவர் ஜேக்கப் சக்காரியாவால் வளர்க்கப்பட்டதும் அவருக்கு தெரியவருகிறது. மேலும், அவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும் இன்னும் சில மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்பதையும் அறிந்துகொள்கிறார், அவரது சொந்த குடும்பத்திற்கே தெரியாமல் சிகிச்சை நடைபெறுகிறது. அவருடன் மறைமுக உறவில் இருந்த அவரது குடும்ப மருத்துவர் டாக்டர் அர்பனா சிகிச்சை அளிக்கிறாள்.

அத்தனை உண்மையும் தெரிந்தவுடன், பூர்ணசந்திர ராவ் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகி, அதற்கு பதிலாக தானே தயாரித்து, தனக்கு வழிகாட்டியாக இருந்த மார்கதர்சி இயக்கும் படத்தில் நடிக்க மனோரஞ்சன் முடிவு செய்கிறார். மனோரஞ்சன் வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டு, மார்கதர்சியின் போட்டியாளரான பூர்ணசந்திர ராவ் இயக்கி தயாரித்த படங்களில் நடிக்கத் தொடங்கியபோது இருவரும் பிரியவேண்டியதாகிறது. தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தான் இறப்பதற்கு முன்பு தனது கடைசி படத்தின் இயக்குநராக மார்கதர்சி இருக்க வேண்டும் என்று மனோரஞ்சன் விரும்புகிறார். ஆரம்பத்தில் மனோரஞ்சனை இயக்க மறுக்கும் மார்கதர்சி, மனோரஞ்சனின் நோயுடைய தீவிரத்தைப் பற்றி அர்பனாவிடம் கேட்கும்போது மனம் நெகிழ்ந்து மனோரஞ்சனை இயக்க ஒப்புக்கொள்கிறார். மனோரஞ்சனின் திட்டத்தை அறிந்த பூர்ணசந்திர ராவும், வரலட்சுமியும் கோபமடைந்து மனோகருடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனம் தளராத மனோரஞ்சன் தனது படத்தைத் தொடர்கிறார்.

மார்கதர்சியுடன் மனோரஞ்சன் நடிக்கும் படத்திற்கு 'உத்தம வில்லன்’ என்று பெயர் வைக்கப்படுகிறது. உத்தமன் என்ற தெருவோரக் கலைஞனின் கதையைச் சொல்லும் கற்பனை நகைச்சுவைப்படம் படம் இது. கற்பகவல்லி என்ற இளவரசியின் உதவியுடன் முழு சாம்ராஜ்ஜியத்தையும் கைப்பற்றும் வெறி கொண்ட தீய மன்னன் முத்தரசனை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மனோரஞ்சனின் உடல்நிலை மோசமடைந்து பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மார்கதர்சி மனோரஞ்சனை தனது குடும்பத்தினரிடம் தனது நிலையை தெரிவிக்க சம்மதிக்க வைக்கிறார். இது பூர்ணசந்திர ராவுடன் சமரசத்திற்கும், அவரது மகன் மனோகருடன் ஒரு பிணைப்பின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. மறுபுறம், வரலட்சுமி இந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ந்து போகிறார். மனோரஞ்சனை யாமினியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து திருமணம் செய்து கொள்ளும் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறாள். பின்னர், அவர்கள் பிரிந்த சிறிது நேரத்திலேயே யாமினிக்கு தான் எழுதிய கடிதம் அவளிடம் கொடுக்கப்படவில்லை என்பதை மனோரஞ்சன் கண்டறிகிறார். திருமண பந்தத்தில் இருந்தும் கர்ப்பமாக இருந்தாலும் கருக்கலைப்பு செய்ய வேண்டாம் என்ற யாமினியின் முடிவுக்கு மனோரஞ்சன் ஆதரவு தெரிவித்ததை கூறும் இந்த கடிதத்தை மனோன்மணி படிக்கும்போது, அவளது தந்தையின் மீதான வெறுப்பு காதலாக மாறி இறுதியாக அவரை தனது தந்தையாக ஏற்றுக்கொள்கிறாள்.

உத்தம வில்லன் திரைப்படத்தின் கடைசி காட்சியை முடித்த தருணத்தில் மனோரஞ்சன் மிகவும் நோய்வாய்ப்பட்டு மயக்கமடைகிறார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மார்கதர்சி படத்தொகுப்பை முடித்து மருத்துவமனையில் காண்பிக்கிறார். மனோரஞ்சனுக்கு நெருக்கமானவர்கள் உட்பட மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தை ரசிக்கிறார்கள். உத்தமன் ஒரு மேடை நாடகத்தில் (இரணிய நாடகம்) முத்தரசனை கொல்வதில் முடிகிறது, இதனால் மீண்டும் மரணத்திலிருந்து தப்பிக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் மனோரஞ்சன் இறந்து விட்டதாக மனோகருக்கும், மனோன்மணிக்கும் தெரிவிக்கிறாள் அர்பனா.

ஒரு திரையரங்கில் உத்தம வில்லன் படம் திரையிடப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி பெறுவதோடு படம் நிறைவடைகிறது.

நடிப்பு தொகு

படப்பிடிப்பு தொகு

2014 பிப்ரவரி மாதத்தின் மத்தியில், கதைக்குப் பொருந்தும் வகையில் கமலஹாசனுக்கு ஒப்பனைகள் செய்து பார்க்கப்பட்டது[1]. இப்படத்தின் இலட்சனை மற்றும் முதல் முன்னோட்ட நிகழ்படம், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் நாள் வெளியிடப்பட்டது.[2].

சர்ச்சை தொகு

படத்தின் முதல் முன்னோட்ட நிகழ்படத்தில் கமல்ஹாசன், கேரளத்தின் பண்டைய கலைகளுள் ஒன்றான தேயத்தின் ஒப்பனையில் காட்சியளிப்பார். இதில் வருவது போன்ற ஒப்பனை மற்றும் காட்சியாக்கம், பிரஞ்சு புகைப்படக் கலைஞர் எரிக் லாஃபர்கியு என்பவரால் முன்பே காட்சியாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது[3]. இப்படத்தில் பதிவாகியுள்ள ஒரு பாடல் வரிகளை மையப்படுத்தி இந்து பரிசத் வழக்குத்தொடுத்தது. அந்த வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[4]

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடலாசிரியர் பாடியவர்(கள்) நீளம்
1 லவ்வா லவ்வா விவேகா கமல்ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா நிவாஸ் 04:42
2 காதலாம் கடவுள்முன் கமல்ஹாசன் பத்மலதா 04:04
3 உத்தம (அறிமுகம்) சுபு ஆறுமுகம் சுபு ஆறுமுகம், கமல்ஹாசன் 02:49
4 சாகாவரம் கமல்ஹாசன் கமல்ஹாசன், யாசின் நிசார், ரஞ்சித் ஐயப்பன், ஜிப்ரான் 02:48
5 இரணியன் நாடகம் கமல்ஹாசன் கமல்ஹாசன், ருக்மணி அசோக்குமார் 04:50
6 முத்தரசன் கதை கமல்ஹாசன் யாசின் நிசார், பத்மலதா, ரஞ்சித் ஐயப்பன் 08:09
7 உத்தமன் கதை கமல்ஹாசன் எம். எஸ். பாஸ்கர், யாசின் நிசார், ரஞ்சித் ஐயப்பன் 07:31
8 உத்தம வில்லன் தீம் Instrumental 01:15
9 குரு சிஷ்யா Instrumental 01:39
10 பாதர் அன்ட் டாட்டர் Instrumental 02:20
11 உத்தமன் & கற்பகவல்லி Instrumental 01:37
12 பாதர் அன்ட் சன் Instrumental 02:31
13 லெட்டர் பிரம் அன்ட் டூ யாமினி Instrumental 02:38
14 டாக்டர் அற்பனா Instrumental 01:25
15 காதலாம் கடவுள்முன் Karaoke 04:04
16 சாகாவரம் Karaoke 02:47
17 இரணியன் நாடகம் Karaoke 04:40

மேற்கோள்கள் தொகு

  1. "படத்தின் நாயகனுக்கு ஒப்பனைச் சோதனைகள்". டைம்ஸ் ஆப் இந்தியா.
  2. "உத்தம வில்லனின் இலட்சனை மற்றும் முதல் நிகழ்படம்". moviegalleri.net. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "முன்னோட்ட காட்சியில் சர்ச்சை". டைம்ஸ் ஆப் இந்தியா.
  4. வில்லனுக்கு எதிரான விஷ்வ இந்து பரிஷத்தின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இந்து தமிழ் 28.ஏப்ரல் 2015

வெளியிணைப்புகள் தொகு