2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு

(எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு (2017 Ennore oil spill) அல்லது எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தாகும். இவ்விபத்து 28 சனவரி 2017 அன்று நடந்தது.[1]

எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து
Map
அமைவிடம்எண்ணூர், சென்னை.
ஆள்கூறுகள்13°13′03″N 80°19′18″E / 13.2175°N 80.32155°E / 13.2175; 80.32155
நாள்28 சனவரி 2017
விபத்து
காரணம்பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் இரண்டு கப்பல்களும் மோதல்.
உயிரிழப்புகள்இல்லை
கசிவுப் பண்புகள்
பருமன்65 டன்

கப்பல்கள் மோதல்

தொகு

ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு பி. டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்தது. இந்த எரிவாயு, லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அத்திப்பட்டு புதுநகரில் உள்ள எண்ணெய் நிறுவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. சமையல் எரிவாயு இறக்கப்பட்ட பிறகு, துறைமுகத்தில் இருந்து அந்தக் கப்பல் 28 சனவரி 2017 அதிகாலை 3 மணிக்கு ஈரானுக்குப் புறப்பட்டது.

அப்போது, மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு எம். டி. டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்தது. துறைமுகத்துக்கு வெளியே ஒரு கடல் மைல் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு கப்பல்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு கப்பல்களும் பலத்த சேதம் அடைந்தன.[2]

எண்ணெய்க் கசிவு

தொகு

துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இரு கப்பல்களும் குறைந்த வேகத்திலேயே வந்தன. அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. கப்பல்களில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆபத்தின்றி தப்பினர். ஆனால், மும்பை கப்பலின் பாகங்கள் உடைந்ததால், அதில் கொண்டு வரப்பட்ட எண்ணெய்ப் பீப்பாய்களில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது.[2]

கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவு எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியது.[3]

உயிரினங்கள் அழிவு

தொகு

இரு கப்பல்கள் மோதியதில் 65 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. கச்சா எண்ணெய் கடலில் கலந்து, கடல் நீர் மாசடைந்தது. கடலில் எண்ணெய் கலந்ததால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.[4]

மீன் வளத்துக்கு பாதிப்பை உண்டாக்கிய இந்த எண்ணெய் படலம், கடல் வாழ் உயிரினமான அரிய வகை ஆமை இனங்கள் உயிர் இழப்பதற்கும் காரணமானதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.[5]

அப்புறப்படுத்தும் பணி

தொகு

கடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்க் கசிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆராய்ச்சித் துறையின் நிபுணர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்ட கழிவுகளை 2000 சதுர மீ அளவுக்கு உருவாக்கப்பட்ட ஆழ் குழியில் புதைத்து அப்புறப்படுத்தினர்.[6]

மேற்கோள்கள்

தொகு