எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லான்
எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லான் (அறிவியல் பெயர்: Cecropis daurica erythropygia) என்பது செம்பிட்டத் தில்லானின் துணையினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஎரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லானின் உடலின் மேற்பகுதி பளபளப்பான ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும். இதன் பிடரியில் செம்புழுப்புக் கறையைக் கொண்டதாகவும், பிட்டம் சிவந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். இப்பறவை பறக்கும்போது இதன் பிட்டத்தில் உள்ள செம்பழுப்பு நன்றாகத் தெரியும். இதன் வால் நன்கு பிளவு பட்டதாக இருக்கும். உடலின் அடிப்பகுதி செம்மை தோய்ந்த வெண்மையாகச் சிறிய கரும் பழுப்புக் கோடுகள் நிறைந்ததாகக் காணப்படும்.[1]
நடத்தை
தொகுஇப்பறவை இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் காணப்படும். குளிர் காலத்தில் மிகுதியாகவும் மற்ற பருவங்களில் ஓரளவும் காண இயலும். இவற்றின் பழக்கவழக்கம் பிற தகைவிலான்களைப் போலவே ஆகும். இது உழவாரக் குருவி, புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான் போன்றவற்றோடு சேர்ந்து மலைப் பள்ளத்தாகுகளில் திரியும்.[1]
இனப்பெருக்கம்
தொகுஎரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லானின் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பாறைகளின் அடிப்பக்கம், பாலங்கள், வீட்டு முற்றம் ஆகியவற்றில் மண் உருண்டைகளைக் கொண்டு கோப்பை போல கூட்டினை அமைத்து அதில் நீண்ட் நுழைவாயிலையும் அமைக்கிறது. கூட்டில் மூன்று அல்லது நான்கு ஐந்து வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டை வெண்மையாக எந்தக் கறைகளும் இன்றிக் காணப்படும். கூடு கட்டுவது, அடைக்காப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது போன்ற்றறை ஆணும் பெண்ணும் இணைந்து மேற்கொள்கின்றன.[1]