எறிபடையியல்
எறிபடையியல் (Ballistics) என்பது, துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றில் இருந்து, சுடப்பட்ட வெடிகுண்டுகளின் இயக்கத்தை அறிவதற்கும், வானூர்தியிலிருந்து, குண்டு வீசினால், அவை சென்று விழும் போக்குகளைக் குறித்து அறிய உதவுகிறது. குண்டு போன்ற எறிபடைகளின் இயக்கத்தில், மூன்று நிலைகள் உள்ளன. சுடப்பட்டது முதல் துப்பாக்கியை விட்டுக் குண்டு வெளிப்படும் நொடி வரையிலுள்ளதை ஆராய்வது, முதல்நிலையாகும். இதனை அகநிலை எறிபடையியல் (Internal B.) என்பர். இரண்டாம் நிலையில், குண்டு, வெளியே கிளம்பியது முதல் குறியில் படும் வரையுள்ளதை ஆராய்வது ஆகும். இதனை புறநிலை எறிபடையியல் என்றழைப்பர். மூன்றால் நிலையில், குண்டு குறியில் பட்டபின்பு, அதில் ஊடுருவும் நிலையை ஆராய்வது துருவுநிலை எறிபடையியல் என்ற அழைப்பர்.[1]
வானூர்தி குண்டு வீச்சு
தொகுமுதல் உலகப் போரில் அதிகமாக, பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்குமே பயன்பட்டன. இரண்டவாது உலகப் போரில், வான்வெளிக் குண்டு வீசுதலும், பறக்கும் குண்டுகளும் வெகுவாய் பயன்படுத்தப் பட்டன. வானூர்தியிலிருந்து குண்டு வீசப்படும் போது, குண்டு இலக்கின் மீது படவில்லை. ஏனெனில் வானூர்தி, கிடைமட்டமாகப் பறந்து செல்லும்போது, குண்டும், அதே வேகத்தோடு செல்கிறது. குண்டு இலக்கு நோக்கு வரும் போது, இந்தக் கிடைமட்ட வேகம் தொடர்ந்து இருக்கிறது. இவ்வேகத்துடன், புவிஈர்ப்புவிசையும் சேர்ந்து, கீழ்நோக்கி வரும் குண்டின் வேகம், மேலும் அதிகமாகிறது. இதனால் இதன் பாதை பரவளையமாகி, இதனால் இலக்கு மாறி, குண்டு வெடிக்கிறது என கண்டறிந்தனர்.[2]
பீரங்கி குண்டு வீச்சு
தொகுபீரங்கிகளைக் கையாளுபவர்கள் முதலாவது வீச்சை மதிப்பீடு செய்தல் வேண்டும். இம்மதிப்பீட்டைக் கொண்டு எந்தக் கோணத்தில் சுட்டால், குண்டு ஒரே இடத்தில் விழாமல், ஒரு குறித்த இடத்தைச் சுற்றி, இங்கொன்றும் அங்கொன்றுமாக விழச் செய்யலாம். அவை விழும் இடத்தின் நடுபகுதிக்கு, குண்டு வீழ்ச்சிப் பகுதி என்று பெயர். வீச்சு மதிப்பீட்டில், முதலாகச் செய்ய வேண்டியது குண்டுகள் குறிக்கு முன்புறமாக விழும் சுடுகோணம் ஒன்றையும், அவை குறியைத் தாண்டி அப்பால் விழும் சுடுகோணம் ஒன்றையும் கண்டு பிடித்தலாகும். இவ்வாறு குண்டுகள் விழும் இடங்களுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளி இருக்கும். இந்த அளவீடுகளைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பர்.[3]
குண்டுகளின் இயக்கம்
தொகுகுண்டுகளின் இயக்கத்தினை[5] ஆராய்வதற்கு அகநிலை எறிபடையியல் என்று பெயர். சுடப்படும் குண்டில் இரண்டு கூறுகள் உள்ளன ஒன்று மருந்து நிறைக்கப்பெற்ற வெடியறை ஆகும். மற்றொன்று, வெளிச்சென்று சேதம் விளைவிக்கும், கனத்த குண்டு பகுதியாகும். குண்டின் பின்பகுதியில் வெடியறை உள்ளது. துப்பாக்கியைச் சுடும்பொழுது, வெடியறையில் இருக்கும் மருந்தில், தீப்பிடிக்கும். எரியும் இம்மருந்திலிருந்து, ஏராளமான ஆவி உண்டாவதாலும், இந்த ஆவி வெளிச் செல்ல முடியாமல், வெடியறையின் உள்ளேயே பெருக முயல்வதாலும், குழாயினுள் அழுத்தம் அதிகரிக்கும். மருந்து எரியும் வேகம், குழாயிலுள்ள அழுத்தத்தைப் பொறுத்திருப்பதால், இவ்வழுத்தம் ஏற ஏற மருந்தும் வேகமாய் எரிந்து, இன்னும் மிகுந்த ஆவியை உண்டாக்கி, அழுத்தத்தை உயர்த்துகிறது.
இவ்வாறு வெடிமருந்து எரியும் வேகமும், ஆவியின் அழுத்தமும் ஒன்றையொன்று உயர்த்துவதால், குழாயினுள் அழுத்தம் எல்லை மிஞ்சி வளர முடியும். வெடியறையோடு அடைத்துக் கொண்டும், குண்டின் அடிப்புறத்தை வளைத்துக் கொண்டும், ஒரு செப்புக் காப்புப் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறித்த அளவினை விட, அழுத்தம் அதிகமானவுடன், இச் செப்புக் காப்பின் பிடிப்பு விலகி, குண்டு முன்னே உந்தப்படுகிறது. இந்நிலையிலும் துப்பாக்கியின் குழாயை, இச்சிறு செப்புக் காப்பு அடைத்துக் கொண்டுதான் இருக்கும். துப்பாக்கியினுடைய குழாயின் வெடிவாயிலிருந்து வெளி வாய் வரையிலும், நீள் சுருள் வடிவமான கோடுகள் கடையப்பட்டிருக்கின்றன. குழாயை அடைத்திருக்கும் செப்புக்காப்பு இவ்வரிகளால் கீறப்பட்டு முன்னேறும்போது இவற்றில் சுழலுவதால், குண்டும் சுழலுகிறது.
குண்டு முன்னே செல்லச் செல்ல, ஆவி பெருகி நிரம்புவதற்கு இடம் ஏற்படுவதால், உந்தத்தின் காரணமான அழுத்தம் குறைய நேரும். இதனால் மருந்து எரியும் வேக வளர்ச்சியும் நின்று விடுகிறது. ஆகவே, உள்ளேன உள்ள ஆவியின் அழுத்தம், ஓர் எல்லையில் நின்று, பிறகு குழாயில் சிறிது தூரம் குண்டு சென்ற பின்பு, குறையத் தொடங்கும். இந்நிலையிலும் மருந்து இன்னும் எரிந்து, ஆவி மிகுந்து வருவதால், தொடக்கத்தில் அழுத்தம் அதிவேகமாகக் குறைவதில்லை. இதனால் குண்டின் வேகம், அதிகமாகத் தொடங்குகிறது.
புவியின் சுழற்சித் தாக்கம்
தொகுகாற்றின் தடையினால், குண்டுகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் போல, பூமி சுழல்வதாலும் குண்டுகள் குறி தவறுகின்றன.[6] ஒரு துப்பாக்கியைப் புவியின் வடபாதியில் இருக்கும், ஓர் இடத்திலிருந்து நேர் வடக்கே சுட்டால், குண்டு துப்பாக்கியிலிருக்கும் வரை அதற்குப் புவி மேலிருக்கும் மற்றப் பொருள்கள் போலவே, கிழக்காகச் செல்லும் வேக உறுப்பு ஒன்று இருக்கிறது. துப்பாக்கியை விட்டு வெளி வந்ததனால் மட்டும் குண்டு, இவ் வேகத்தை இழந்து விடுவதில்லை. துப்பாக்கியின் விசையினால் குண்டு வடக்கு நோக்கியும், புவியின் சுழற்சியால் கிழக்கு நோக்கியும் செல்கிறது. ஆனால், இலக்கு இன்னும் வடக்கே இருப்பதால், அது கிழக்கு நோக்கிச் செல்லும் வேகம், சிறிது குறைவாக இருக்கும். இதனால் குண்டு குறியை விட்டுச் சிறிது வலப்புறமாகப் பிறழ்ந்து பாய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிரிட்டானிகாவின் எறிபடையியல் ஆங்கிலக் கட்டுரை
- ↑ https://demonstrations.wolfram.com/TrajectoryOfABomb/
- ↑ https://www.arc.id.au/CannonBallistics.html
- ↑ https://www.worldcat.org/title/german-explosive-ordnance-bombs-fuzes-rockets-land-mines-grenades-and-igniters/oclc/713755660
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
- ↑ http://bulletin.accurateshooter.com/2015/12/shooting-science-the-coriolis-effect-explained/
.