எலு சுகை (சூலை 24, 1190 – சூன் 20, 1244[1]) என்பவர் ஒரு கிதான் அரசியல் மேதை ஆவார். இவர் லியாவோ அரசமரபின் ஏகாதிபத்திய இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். கன்பூசியப் பாரம்பரியத்தில் ஆரம்ப மங்கோலியப் பேரரசின் ஆற்றல் மிக்க ஆலோசகர் மற்றும் நிர்வாகியாக இவர் திகழ்ந்தார். மங்கோலியப் படையெடுப்புகள் மற்றும் வெற்றிகளின் போது கொள்கைகளை உருவாக்கிய செங்கிஸ் கானின் உதவியாளர்களில் இவர் முதல் நபராகக் கருதப்படுகிறார். செங்கிஸ் கான் மற்றும் அவருக்குப் பின் வந்த ஒக்தாயி ஆகியோரது ஆட்சியின்போது வடக்கு சீனாவில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களையும் இவர் அறிமுகப்படுத்தினார்.

எலு சுகை
Yelü Chucai
சீனாவில் நான்பின்னில் வூயி மலைகளில் உள்ள எலு சுகையின் சிலை
பிறப்பு24 சூலை 1190
யான்சின், சின்
இறப்பு20 சூன் 1244 (அகவை 53)
கரகோரம், யுவான் அரசமரபு (மங்கோலியப் பேரரசு)
குழந்தைகளின்
பெயர்கள்
எலு தாவோ
பெயர்கள்
குடும்பப் பெயர்: எலு, Yēlǜ 耶律
இயற்பெயர்: சுகை, Chǔcái 楚材
வேறு பெயர்: சின்கின்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
குவாங்னின்
தந்தைஎலு லூ
தாய்யான்
எலு சுகை

சுயசரிதை தொகு

சின் அரச மரபின் ஆட்சிக் காலத்தின்போது பெய்ஜிங்கிற்கு அருகில் பிறந்த ஒரு கன்பூசிய அறிஞர் தான் இந்த எலு சுகை.[2] பௌத்தத் திருமறை நூல்களை இவர் நன்றாக அறிந்திருந்தார். இவர் தாவோயியத்தைப் பின்பற்றினார். செங்கிஸ் கானின் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றியதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரது தந்தை எலு லு, சுரசன்களால் ஆளப்பட்ட சின் அரச மரபில் சேவையாற்றினார். சின் அரச மரபினர் 1125ஆம் ஆண்டு லியாவோ அரசமரபைத் தோற்கடித்தனர். 1211ஆம் ஆண்டு சின் அரசமரபுக்கு எதிராக ஒன்றிணைக்கப்பட்ட மங்கோலிய இராணுவமானது செங்கிஸ் கானுக்குக் கீழ் போர்ப் படையெடுப்பைத் தொடங்கிய போது சின் அரச மரபுக்கு எதிரான சண்டையில் சுரசன் மற்றும் கிதான் கிளர்ச்சியாளர்கள் மங்கோலியர்கள் பக்கம் இணைந்தனர். இதன் பிறகு 1218ஆம் ஆண்டு தனது 28வது வயதில் எலு சுகை செங்கிஸ் கானின் நிர்வாகத்தில் இணைந்தார்.

கிதான்கள் மற்றும் மங்கோலியர்கள், மேலும் தெற்கு சாங் ஆகியோர் தங்களது பொதுவான எதிரியான சின் அரச மரபுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். செங்கிஸ் கானால் பேசப்பட்ட பரவலாக அறியப்பட்ட வார்த்தைகளில் இது தெரிகிறது. சூலையின் முடிவில் சாரி புல் வெளியில் (கெருலன் ஆற்றின் பெரிய வளைவின் மேற்குப் பகுதி) ஓர்டோஸில் முதல் முதலாகச் செங்கிஸ் கான் எலு சுகையைச் சந்தித்தார், "லியாவோ மற்றும் சின், தலைமுறைகளாக எதிரிகளாக இருந்துள்ளனர். நான் உனக்காகப் பழி தீர்த்துள்ளேன்." இதற்கு எலு சுகை பின்வருமாறு பதிலளித்தார், "எனது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவருமே சின்களிடம் மரியாதையுடன் சேவையாற்றினர். ஒரு குடிமகனாக, ஒரு மகனாக நான் எப்படி என் மனதில் வாய்மையின்றி எனது மன்னன் மற்றும் எனது தந்தையை எதிரிகளாகக் கருத முடியும்." அவரது இந்த எளிமையான பதிலைச் செங்கிஸ் கான் பாராட்டினார். மேலும் எலு சுகையின் உருவமைப்பு (எலு சுகை நல்ல உயரமான மனிதனாகவும், அவரது பிரமிக்கத்தக்க தாடியானது அவரது இடுப்பைத் தொடும் அளவுக்கும் இருந்தது) மற்றும் திடமான குரலைக் கண்டும் அவர் பாராட்டினார். செங்கிஸ் கான் இவருக்கு "உர்து சகல்" (நீளத் தாடி) என்று செல்லப் பெயர் வைத்தார். தன்னுடைய பரி வாரத்தில் ஆலோசகராக இணைத்துக் கொண்டார். எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவராகவும், நிலையான சமூகங்களின் சட்டங்களை அறிந்திருந்த காரணத்தினாலும் பேரரசுக்குப் பயனுள்ளவராக எலு சுகை திகழ்ந்தார்.[3]

மங்கோலியர்கள் வெல்லப்பட்ட மக்களைக் கொல்வதைத் தவிர்த்து மக்களிடம் வரி வசூலிக்கச் செய்யுமாறு இவர் தன்னால் முடிந்தவரை இணங்க வைத்தார். புல்வெளிகளின் பேரரசு என்ற தன் நூலில் வரலாற்றாளர் கிரவுசட் குறிப்பிட்டுள்ளபடி, "நீ மக்களுக்காக மீண்டும் அழுகப் போகிறாயா?" என்று ஒக்தாயி இவரைக் கிண்டலடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மங்கோலியப் பழக்க வழக்கங்களின் காட்டுமிராண்டி முறைகளைச் சாந்தப்படுத்த இந்தப் புத்திசாலி வேந்தரிடம் பெரும் வார்த்தைகள் இருந்தன. செங்கிஸ்கானின் மகனும் அவருக்குப் பின் அரியணைக்கு வந்த ஒக்தாயியிடம் எலு சுகை கூறியதாவது, "பேரரசுகளைக் குதிரையின் மேலிருந்து வெல்லலாம். ஆனால் குதிரையின் மேலிருந்து கொண்டே ஆள முடியாது" என்றார். எலு சுகை தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி மற்ற சக கன்பூசிய அறிஞர்களை மங்கோலிய ஆட்சியாளர்களின் தண்டனை மற்றும் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றினார்.[4] மங்கோலிய இளவரசர்களுக்கு அதிகாரிகளாகவும், தனி ஆசிரியர்களாகவும் பதவிகளைப் பெற அவர்களுக்கு எலு சுகை உதவி செய்தார்.[5]

வட சீனாவானது மங்கோலியக் கடுந்தாக்குதலுக்குப் பணிந்து கொண்டிருந்த பொழுது எலு சுகை, பொது நிர்வாக மற்றும் இராணுவ சக்திகளைப் பிரித்தல் போன்ற பல நிர்வாகச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார். பல விதமான வரிகளை அறிமுகப்படுத்தினார். சுரசன் சின்களின் தெற்குத் தலைநகரமான கைபேங்கைக் கைப்பற்ற முயற்சித்த போது மங்கோலிய இராணுவம் எதிர்கொண்ட கடுமையான எதிர்ப்புக்குப் பதிலாக, உயர் பதவியில் இருந்த சில மங்கோலிய அதிகாரிகள் கைபேங்கை முழுவதுமாகத் தரை மட்டமாக்கி அங்கு வாழ்ந்த அனைவரையும் கொல்ல வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். ஆனால் மக்களை ஆட்சி செய்து வரி வசூலிக்கச் செங்கிஸ் கானை எலு சுகை இணங்க வைத்தார். அனைவரையும் கொல்வதற்குப் பதிலாக அம்மக்களின் அசாதாரண திறமைகளைப் பயன்படுத்திச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என இணங்க வைத்தார்.[6] எலு சுகை 6 அடி 8 அங்குலம் உயரமும், இடுப்பு வரை நீண்ட தாடியையும் கொண்டிருந்தார்.[7] பெய்ஜிங்கில் உள்ள குன்மிங் ஏரியில் இவர் புதைக்கப்பட்டார். இவரது நினைவாகக் கட்டப்பட்ட ஒரு கோயிலானது 1966ஆம் ஆண்டு வரை நிலைத்திருந்தது. பண்பாட்டுப் புரட்சியின் ஒரு பகுதியாக பொதுவுடமைவாத சிவப்புக் காவலர்களால் கோடைக்கால அரண்மனையானது சூறையாடப்பட்டபோது இவரது நினைவிடம் தரைமட்டமாக்கப்பட்டது.[8] கிதான் மொழியைக் கடைசியாகப் பேசிய, மற்றும் பெரிய மற்றும் சிறிய கிதான் எழுத்துக்களைப் படிக்க மற்றும் எழுதத் தெரிந்த கடைசிப் பதிவு செய்யப்பட்ட நபர் எலு சுகை தான்.[9]

 
சின்சோவுவிலுள்ள குதா பூங்காவின் தென்மேற்கு மூலையிலுள்ள எலு சுகையின் சிலை.

மேற்கோள்கள் தொகு

  1. 宋子贞:《中书令耶律公神道碑》,节选自苏天爵编集的《元文类》卷五七
  2. Jerry Bentley, Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times (New York: Oxford University Press, 1993), 142.
  3. Jack Weatherford, Genghis Khan and the Making of the Modern World (New York: Three Rivers Press, 2004), 90.
  4. Jerry Bentley, Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times (New York: Oxford University Press, 1993), 143.
  5. Jerry Bentley, Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times (New York: Oxford University Press, 1993), 143.
  6. Biography of Yelü Chucai
  7. John Man (author) (2004). "The Muslim Holocaust". Genghis Khan: Life, Death, and Resurrection. Bantam Book. 
  8. Pierre Ryckmans (writer) (1979). Chinese Shadows. Penguin Books. பக். 61. 
  9. Kane, Daniel (2009). The Kitan Language and Script. Brill. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-16829-9. https://books.google.com/books?id=BnsZjpIa-cYC. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலு_சுகை&oldid=3681908" இலிருந்து மீள்விக்கப்பட்டது