ஏதெனியன் புரட்சி கிமு 411

பண்டைய ஏதென்ஸின் சனநாயக அரசாங்கமானது தூக்கியெறியப்பட்டு, நானூறு என அழைக்கப்படும் சிலவர் ஆட்

ஏதெனியன் புரட்சி (Athenian coup of 411 BC) என்பது கிமு 411 ஏதென்சில் சனநாயக ஆட்சிக்கு எதிராக பிரப்புக்களால் நடத்தப்பட்ட ஒரு புரட்சி ஆகும். ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையே நடந்த பெலோபொன்னேசியப் போரின் போது இந்த புரட்சி நடந்தது. இந்தப் புரட்சியின்போது பண்டைய ஏதென்சின் சனநாயக அரசாங்கத்தை தூக்கியெறியப்பட்டு, நானூறு என்று அழைக்கப்படும் சிலவர் ஆட்சியினர் குறுகிய காலம் ஆண்டனர்.

ஏதெனியன் புரட்சி
நாள்9, சூன் 411 கிமு
அமைவிடம்ஏதென்சு
வகைபுரட்சி
காரணம்சிசிலியன் படையெடுப்பில் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு ஏதெனியன் பிரபுக்களால் நடத்தபட்ட ஒரு புரட்சி கவிழ்ப்பு
ஏற்பாடு செய்தோர்Alcibiades
விளைவுபண்டைய ஏதென்சின் சனநாயக அரசாங்கத்தை தூக்கி எறிந்து, நானூறு என்று அழைக்கப்படும் குறுகிய கால சிலவர் ஆட்சிக்குழுவினர் ஆட்சியைக் கைப்பற்றினர்

கிமு 413 இல் சிசிலியன் படையெடுப்பில் ஏதெனியன் இராணுவம் தோல்வியுற்றதை அடுத்து நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. இச்சமயத்தில் நகர அரசில் பரவலான சனநாயகத்தை விரும்பாத பணக்காரப் பிரிவினர் சிறிது செல்வாக்குப் பெற்றனர். அவர்கள் சிலவர் ஆட்சியை ஏற்படுத்த முயன்றனர். நடப்பில் இருந்தத சனநாயக அரசாங்கத்தின் வெளிநாடு, நிதி, போர்க் கொள்கை போன்றவற்றை விட தங்களால் சிறப்பாக கையாள முடியும் என்று நம்பினர். [1]

சிலவர் ஆட்சி ஆதரவு இயக்கமானது பல முக்கிய பணக்கார ஏதெனியர்களால் வழிநடத்தப்பட்டது. அவர்கள் அல்சிபியாட்சுடன் ஒருங்கிணைந்து சமோசில் உள்ள ஏதெனியன் இராணுவத்தில் அதிகாரப் பதவிகளை வகித்தனர்.

பின்னணி தொகு

பெலோபொன்னேசியன் போரின் போது, ஏதென்சின் சனநாயகம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக இருந்தது. [2] பெரும்பாலான மேல்தட்டு வர்க்கத்தினர் இந்த அரசு வடிவத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த மேல்தட்டு வர்கத்தினரில் அதன் தலைமைப் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களும், அதிலிருந்து ஒதுங்கி இருப்பவர்களும் இருந்தனர். போர் காலம் வரை, முன்னணி ஏதெனிய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் மேல்தட்டு குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருந்தனர். [3] ஏதென்சு நகர அரசில் சனநாயக ஆட்சி முறை இயல்பற்ற ஒன்றாக இருந்தது. ஏனெனில், மற்ற கிரேக்க நகர-அரசுகள் சர்வாதிகார ஆட்சியாகவோ அல்லது சிலவர் ஆட்சிக்குழுக்களால் நடத்தப்பட்டதாகவோ இருந்தது. [3] துசிடிடீஸ் மற்றும் அரிசுட்டாட்டில் இருவரும் "சிசிலியில் ஏற்பட்ட தோல்வியே புரட்சிக்கு தூண்டுகோலாக ஆனது" என்று எழுதினர். [4]

ஆட்சிக் கவிழ்ப்பு தொகு

சிலவர் ஆட்சிக்குழுக்கள் இரண்டு ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு திட்டமிட்டனர்: ஒன்று ஏதென்சில் அடுத்தது ஏதெனியன் கடற்படை தளமாக இருந்த சமோசில். சாமோசில் புரட்சிக்கு திட்டமிட்டவர் ஏதென்சிலிருந்து நாடுகபட்டதப்பட்டிருந்த ஆல்சிபியாடீசு ஆவார்.

ஏதென்ஸில் ஆட்சிக்கவிழ்ப்பு திட்டமிட்டபடி முன்னேற்றம் கண்டது. கி.மு 411 ஆம் ஆண்டு சிலவர் ஆட்சிக் குழுவினர் புரட்சியில் ஈடுபட்டு ஏதென்சின் சனநாயக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினர்.[5] நகரம் நானூறு சிலவர் ஆட்சிக்குழு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஏதென்சைப் போலல்லாமல், சமோசில் இருந்த சதிகாரர்களை ஏதெனியன் கடற்படையில் இருந்த சாமியான் சனநாயக மற்றும் சனநாயக சார்பு தலைவர்களால் முறியடிக்கப்பட்டனர்.

ஏதெனிய கடற்படையின் போர்கள் தொகு

ஏதென்சுக்கு எதிராக கியாஸ் முதலிய நகர அரசுகள் கலகம் செய்துவந்த நிலையில் அவர்களை அடக்க கப்பற்படை புறப்பட்டுச் சென்றது. அது சாமோஸ் தீவை மையமாக கொண்டு செயல்பட்டனர். அங்கு சனநாயகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மாலுமிகளாகவும், வீரர்களாகவும் என சென்றிருந்தனர். இந்நிலையில்தால் ஏதென்சில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. கடற்படையில் இருந்த ஏதெனிய வீரர்கள், ஏதென்சில் ஆட்சி கவிழ்ப்பு பற்றி அறிந்ததும், தங்கள் தளபதிகளை பதவி நீக்கம் செய்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். நகரம் தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்கள் அறிவித்தனர். கடற்படையின் புதிய தலைவர்கள் நாடுகடத்தபட்டிருந்த ஆல்சிபியடீசை சமோசுக்கு அழைக்க ஏற்பாடு செய்தனர். மேலும் ஒன்றாக இணைந்த இந்த சனநாயகவாதிகள் எசுபார்த்தாவுக்கு எதிராக தொடர்ந்து போரை நடத்துவது என்றும், ஏதென்சில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பணக்காரப் பிரிவினரை வீழ்த்துவது என்று முடிவு செய்தனர். சாமோசில் புரட்சிக்கு தூண்டிவிட்ட ஆல்சிபியாடீசு அது தோல்வியடைந்ததால் கடைசியில் சனநாயக பிரிவினருடனே சேர்ந்து கொண்டார். அவர்களும் சிவர் ஆட்சியை வீத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் சாமோசில் தங்கி இருந்த ஏதென்சின் கடற்படை ஏதென்சுக்கு எதிராக எழுந்த அரசுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடக்கத் தொடங்கியது. இவ்வாறு ஏதென்சுக்கு எதிராக கி.மு 411 இல் எழுந்த சிஜிகஸ் நகர அரசை ஏதெனிய கடற்படை ஒடுக்கியது. சிஜிகசுக்கு ஆதரவாக வந்த எசுபார்த்தா கடற்படைக்கும் ஏதெனிய படைகளுக்கும் இடையில் கி.மு 410 இல் சிஜிக்கசில் நடந்த சமரில் எசுபார்த்தாவின் கடற்படை அடியோடு நாசமுற்றது.

உட்பிளவும், வீழ்ச்சியும் தொகு

சிலவர் ஆட்சியில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே விரைவில் மோதல் எழுந்தது. இதனால் ஏதென்சில் நானூறு அரசாங்கம் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டது. தெரமென்ஸ் மற்றும் உயர்குடியினர் தலைமையிலான மிதவாதிகள், நானூறுக்கு பதிலாக "5,000" என்ற பரந்த அளவிளான சிலவர் ஆட்சியைக் கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீவிரவாதத் தலைவர்கள் எசுபார்த்தாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். சாமோஸ் தீவில் சனநாயகவாதிகள் போருக்கான ஏற்படுகளை செய்துவருவதை அறிந்த ஏதென்சின் சிலவர் ஆட்சியாளர்கள் எசுபார்த்தாவின் உதவியை எதிர்பார்த்தனர். மேலும் பைரேயஸ் துறைமுகத்தில் ஒரு கோட்டை கட்டத் தொடங்கினர். இது எசுபார்த்தன் படைகளை ஏதென்சுக்கு கொண்டுவர பயன்படுத்த திட்டமிட்டடுள்ளது என்று மிதவாதிகள் நம்பினர்.[6] இதன்பிறகு எதிர்புரட்சி நடத்தி மிதவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர்.இவர்களுக்கு தலைமை ஏற்றவர் தொமெனீஸ் என்பவராவார். அவர் ஆட்சிக்கு பொறுப்பாக இருந்த நானூற்றுவர் அவையைக் கலைத்துவிட்டு அதற்கு பதில் ஐயாயிரம் பேர்கொண்ட ஒரு அவையை உருவாக்கினார். இதன் வழியாக சிலவர் ஆட்சி, சனநாயக ஆட்சி என ஒரு கலப்புத் தன்மைகொண்ட ஆட்சியை உருவாக்கினார். அவர்கள் சிசிகசில் ஏதெனியன் கடற்படையின் வெற்றி வரை பல மாதங்கள் ஆட்சி செய்தனர்.

குறிப்புகள் தொகு

  1. "Thomas R. Martin, An Overview of Classical Greek History from Mycenae to Alexander". Perseus Digital Library, Tufts University.
  2. Kagan (1991), p. 253.
  3. 3.0 3.1 Donald Kagan (1987). The Fall of the Athenian Empire. Cornell University Press.
  4. Osborne, R., Athens and Athenian Democracy, Cambridge University Press, 2010, p. 273.
  5. Kagan, Donald, The Fall of the Athenian Empire, p. 147. Cornell University Press, 1991. ISBN 0-8014-9984-4.
  6. Kagan, Donald, The Fall of the Athenian Empire, p. 190. Cornell University Press, 1991. ISBN 0-8014-9984-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதெனியன்_புரட்சி_கிமு_411&oldid=3499845" இலிருந்து மீள்விக்கப்பட்டது