ஓரை (விளையாட்டு)

ஓரை என்பது சங்ககால மகளிரில் இளையோர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று. ஓரை என்னும் சொல்லை விளையாட்டைக் குறிக்கும் பொதுசொல்லாகவே கொள்ளவேண்டியுள்ளது.ஓரை ஒலித்தல் தொழிலைக் குறிக்கும். அது, ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் இது விளையாடப்பட்டதைச் சங்கநூல் பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்த விளையாட்டுக்கு முன்னோ பின்னோ வண்டல்-விளையாட்டு, பாவை-விளையாட்டு, அலவன்-ஆட்டல் பான்ற விளையாட்டுகள் விளையாடப்படுவது உண்டு.
ஓரை விளையாடும்போது மகளிர் தம் காற்சிலம்பு ஒலிக்க ஓடுவர். கடலலை மணலில் விளையாடும்போது மகளிர் கூந்தல் நனைந்து நீர் சொட்டும். ஆற்றில் ஓரை விளையாடும் மகளிரொடு மைந்தர் சேர்ந்துகொள்வதும் உண்டு.

ஓரை இள-மகளிர் விளையாட்டு
மகளிர் தம் விளையாட்டுத் தோழிமாருடன் சிலம்பொலி கேட்க ஓடி விளையாடப்படுவது ஓரை. [1]
சேற்று-நிலத்தில் ஓரை
ஓரை சேற்று நிலத்திலும் விளையாடப்படும். [2]
நாள்தோறும் கிழவன் (இளைஞன்) ஓரை விளையாடுவான்.
இதனைத் தொல்காப்பியம் ‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை’ எனக் குறிப்பிடுகிறது. [3]
(அடுத்து வரும் செய்தி தொல்காப்பியம் குறிப்பிடும் ‘ஓரை’ ராசி என்னும் வடசொல்லின் திரிபு அன்று என்பதைத் தெளிவுபடுத்தும். உரையாசிரியர்கள் ஓரை= ,ராசி எனக் காட்டுதல் அவர்களது கருத்து. தொல்காப்பியர் காலச் சமுதாயத்தோடு தொடர்புடையது அன்று)
ஓரை விளையாடுதல் அறம்
மகளிர் ஆற்று வெள்ளத்தில் இளையரோடு ஆடுவர். இப்படி ஆடாவிட்டால் மகளிரின் ஆக்கம் (உடல்வளம்) தேயும் என சங்ககால மக்கள் உணர்ந்திருந்தனர். [4] [5]
ஓரையில் மைந்தர்
மைந்தர் மகளிரொடு கூடி ஓரையாடுதல் அவர்களது அடக்கமின்மையைக் காட்டும். [6]
மணல் முற்றத்தில் ஓரை
வீட்டு முற்றத்தில் பரப்பப்பட்ட மணலில் ‘ஒய்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு மகளிர் ஓரை ஆடுவர். [7]
மாலையில் ஓரை
கூந்தலில் நீர் வடிய ஓரை
ஓரை விளையாடும் மகளிர் பொழுது இறங்கும் வேளையில் கூந்தலில் நீர் வடிய இல்லம் திரும்புவர். [8]
ஓரை விளையாட்டின் ஒரு பகுதி பாவை விளையாட்டு
ஓரை விளையாடும்போது பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்துப் பாவை செய்து விளையாடுவர். [9]
ஓரையும் நண்டும் 1
கடற்கரை நண்டுகள் ஓடும்படி ஓரை விளையாடுவர். [10]
ஓரையும் நண்டும் 2
அடும்பு-மலர் சூடிய மகளிரின் ஓரை [11]
ஓரையில் சிலம்பொலி
நீர்ப்பறவைகள் சிலம்பொலி கேட்டு ஓட ஓரை [12]
ஓரையும் பந்தும்
ஓரை-விளையாட்டும், பந்தாட்டமும் சிலம்பொலி வீட்டில் கேட்க விளையாடப்படும். [13]
ஓரையும் வண்டலும்
வாடைக்காற்று குவித்த மணலில் ஓரையும் வண்டலும் விளையாடப்படும். [14]

கருவிநூல்

தொகு
  1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
  2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)

அடிக்குறிப்பு

தொகு
  1. கோதை ஆயமொடு ஓரை தழீஇ தோடமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் ஆடுவழி - அகம் 49-16
  2. ஒரை ஆயத்து ஒண்தொடி மகளிர் கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின் யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் பெருமாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் செம்மலை நல்லியக்கோடன் – நன்னாகனார் பாடல் புறநானூறு 176
  3. தொல்காப்பியம் 3-133-1
  4. விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற் செறிந்து இருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் எனக் குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி பொங்கிவரு புதுநீர் நெஞ்சு உண ஆடுகம் - நற்றிணை 68
  5. ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் - நற்றிணை 155
  6. மடக்குறு மாக்களொடு ஓரை அயரும் அடக்கமில் போழ்து - கலித்தொகை 82-9
  7. ஒய் எனத் தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் --- தாய் தன் மகளின் நினைவு வரக் கலங்கினாளாம் - நற்றிணை 143
  8. ஞாயிறும் குடக்கு வாங்கும்மே நீரலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ்வயிறு அலைப்ப, உடன் இயைந்து ஓரை மகளிரும் ஊர் எய்தினரே - நற்றிணை 398
  9. தாதின் செய்த தண்பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என ஓரை ஆயம் கூறக் கேட்டு - குறுந்தொகை 48
  10. விளியாது உரவுக்கடல் பொருத விரவுமணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட வாய்ந்த அலவன் துன்புறு துனைபரி ஒருங்குவரல் விரிதிரை களையும் - குறுந்தொகை 316
  11. அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401
  12. நீர் ஆர் செறுவின் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார் சீரார் நேரிழை ஒலிப்ப ஓடும் ஓரை மகளிர் ஓதை வெறீஇ எழுந்து ஆரல் ஆர்கை அம் சிறைத் தோ.ழுதி உழர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய் தமக்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் - கலித்தொகை 75-4
  13. சீர் கெழு வாயனகர் சிலம்பு நக இயலி ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் - அகம் 219-2
  14. ஊதை ஊட்டிய உயர்மணல் அடைகரை கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி - அகம் 60-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரை_(விளையாட்டு)&oldid=3208417" இலிருந்து மீள்விக்கப்பட்டது