கட்டுமானப் பொறி
கட்டுமானப் பொறி என்பது, கட்டுமானம் மற்றும் அது தொடர்பான தேவைகளுக்குப் பயன்படும் பல வகையான கனரகப் பொறிகளுள் ஒன்றைக் குறிக்கும். இவை குடிசார் பொறியியல் மற்றும் அமைப்புப் பொறியியல் சார்ந்த கட்டுமானத் தேவைகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டனவாகும்.
கட்டிடம் கட்டுவதற்கு முன் இடம்பெறுகின்ற நிலநுட்பச் சோதனைகள் செய்வதிலிருந்து, கட்டிட நிலங்களை மட்டப்படுத்தல், நிலத்தை அகழ்தல், அத்திவாரம் இடுதல், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்துச் செல்லல், அவற்றையும் வேலையாட்களையும் பல்வேறு தளங்களுக்கு உயர்த்துதல், காங்கிறீட்டுத் தயாரித்தல், வீதிகள் அமைத்தல், கட்டிமுடித்த கட்டிடங்களைப் பேணுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குக் கட்டுமானப் பொறிகள் பயன்படுகின்றன. மனித அல்லது விலங்குகளின் வலுவைப் பயன்படுத்திப் பல வாரங்கள் அல்லது மாதங்களில் செய்ய வேண்டிய பணிகளை இப் பொறிகள் சில மணி நேரங்களிலேயே செய்து முடித்துவிடுகின்றன. மனித வலுவைப் பயன்படுத்திச் செய்யவே முடியாத பல வேலைகளைக் கூடக் கட்டுமானப் பொறிகளின் உதவியுடன் மிக இலகுவாகச் செய்துவிட முடியும். பல கட்டுமானப் பொறிகள் ஊர்திகளாக இருக்கின்றன. இதனால் இவற்றைப் பொறியியல் ஊர்திகள் என்றும் அழைப்பதுண்டு.
சில கட்டுமானப் பொறிகள்
தொகு- உயர்த்து மேடை (Lift table)
- புல்டோசர் (Bulldozer)
- போர்ப் பொறியியல் ஊர்தி (Combat engineering vehicle)
- குறு அகழ்பொறி (Compact excavator)
- பாரந்தூக்கி (Crane)
- இழுவைக் கயிற்று அகழ்பொறி (Dragline excavator)
- துளை பொறி (Drilling machine)
- அகழ்பொறி (Excavator)
- கவருயர்த்தி (Forklift truck)
- பாவுபொறி (Paver)
- இழுபொறி (Tractor)