கருத்தரிப்பு

கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது.

கருத்தரிப்பு
கருத்தரித்திருக்கும் ஒரு பெண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமருத்துவ உதவியாளர்
ஐ.சி.டி.-10Z33.
ஐ.சி.டி.-9650
நோய்களின் தரவுத்தளம்10545
மெரிசின்பிளசு002398
ஈமெடிசின்article/259724
ம.பா.தD011247
குழந்தை பிறக்கும் காலத்தை அண்மித்திருக்கும் ஒரு கருத்தரித்த பெண்ணின் தோற்றம்

மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் கருக்கட்டத் தேவையான ஆணினது விந்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய் எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை முறையாலும், அதாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது செயற்கை விந்தூட்டல் மூலமும் பெண் கருத்தரிக்க முடியும்.

கருக்கட்டல் நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், இயக்குநீர் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய் ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். எனவே இறுதி மாதவிடாய் நிகழ்ந்து 14 நாட்களில், அதாவது 2 கிழமைகளில் கருக்கட்டல் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகின்றது. பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். எனவே மாதவிடாய் ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இறுதி மாதவிடாய் வந்த காலத்தைக் கருத்தில் கொண்டே, குழந்தை பிறப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுவதனால், இந்தக் காலமே, அதாவது 40 கிழமைகளே முழுமையான கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.

கர்ப்பமுற்றதைத் தீர்மானித்தல்

தொகு
 
22 வார கருத்தரிப்பில் பெண்களின் வயிற்றில் காணப்படும் Linea nigra என்றழைக்கப்படும் கருமையான கோடு

ஒரு பெண் கருப்பமுற்றிருப்பதைப் பல வழிகளில் கண்டுபிடிக்கலாம். மருத்துவ பரிசோதனகள் மூலமாகவோ, அல்லது அவ்வாறில்லாமலோ கருப்பத்தைக் கண்டறியலாம். மருத்துவ பரிசோதனையில் மருத்துவ தொழிலில் உள்ளவர்களின் உதவியுடன் கண்டறிய முடியும்.

உடல்சார்ந்த அறிகுறிகள்

தொகு

கருத்தரித்திருக்கும் பெண்களில், அதற்கான பல அறிகுறிகள் தோன்றும்[1]. அவற்றில் குமட்டல், வாந்தி, அளவுக்கு மீறிய அசதி, களைப்பு போன்றன கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில் தோன்றும் முக்கியமான அறிகுறிகளாகும்[2]. அதோடு மசக்கை ஏற்படும். இதை ஆங்கிலத்தில் morning sickness என்பார்கள். இது காலை வேளையிலே ஏற்படும் பிறகு போக போக குறைந்துவிடும். கருவுற்ற பெரும்பாலான பெண்களுக்கு இது ஏற்படும் என்று கூறப்படுகிறது.[3] இது தவிர அடிக்கடி, அனேகமாக இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளில் விருப்பம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பொதுவாக கருத்தரிப்பின்போது மாதவிடாய் நிகழ்வு நின்றுவிடும். ஆனாலும் சிலருக்கு, கருப்பையில் கரு பதியும்போது குருதிப்போக்கு ஏற்படக்கூடும். இது பொதுவாக இறுதி மாதவிடாய் வந்து 3ஆம், 4ஆம் கிழமைகளில் நடக்கக் கூடும். சூல் முட்டை வெளியேறும்போது அடிநிலை உடல் வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பு வெளியேற்றம் நடந்து 2 வாரங்களின் பின்னரும் தொடர்ந்திருக்கும். கருப்பை வாய், யோனி, பெண்குறி போன்ற பகுதிகள் கருநிறமடையும். கருப்பை வாய், கருப்பையின் ஒடுங்கிய பகுதி, போன்றன மென்மையாகும். இயக்குநீர்களில் ஏற்படும் மாற்றத்தால் நிகழும் நிறமூட்டலினால் வயிற்றின் நடுக்கோட்டில் கருமையான கோடு தோன்றும். இந்தக் கோடு பொதுவாக கருத்தரிப்பின் நடுப்பகுதியில் பார்க்கக் கூடியதாக இருக்கும்[4][5]. முலைகள் மிருதுத்தன்மையை அடையும். இது பொதுவாக இளமையான பெண்களில் தெளிவாகத் தெரியும்[6]. இவையெல்லாம் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், ஒரு சிலருக்கு, குழந்தைப்பிறப்பு நிகழவிருக்கும் நேரம்வரையில் கூட தான் கர்ப்பமுற்றிருப்பது தெரியாமல் இருந்திருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மாதவிடாய் ஒழுங்கற்று வரும் பெண்களுக்கு (பொதுவாக இளம்பெண்களுக்கு) மாதவிடாய் நின்றுபோவது கருத்தில் வராமல் போகலாம். உடற் பருமன் அதிகம் கொண்ட பெண்கள், தமது நிறை அதிகரிப்பை கருத்தில் கொள்ளாமல் போகலாம். சில மருந்துகளும் இந்நிலைக்குக் காரணமாகலாம்.

உயிரியல் குறியீடுகள்

தொகு

இவை தவிர பல ஆரம்ப மருத்துவ அறிகுறிகள் தென்படும்[4][5]. பொதுவாக அவை கருத்தரித்து சில கிழமைகளில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும். இவற்றில் மிக முக்கியமானது குருதியிலும், சிறுநீரிலும் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (HCG) என்னும் இயக்குநீர் காணப்படுதல். இதனை இலகுவாக மருத்துவச் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

கருத்தரிப்பானது கருத்தரிப்பு பரிசோதனைகள்[7] மூலம் உறுதி செய்யப்படும். பொதுவாக இது புதிதாக கருப்பையினுள் உருவாகும் சூல்வித்தகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் இயக்குநீரைக் கண்டறியும் சோதனையாக இருக்கும். குருதி, சிறுநீர் ஆகியவற்றில் செய்யப்படும் இந்த மருத்துவ சோதனையானது பொதுவாக கருப்பதிந்து 12 நாட்களின் பின்னர் செய்யப்படும்.[8]. சிறுநீரில் செய்யப்படும் சோதனையை விடவும் குருதியில் செய்யப்படும் சோதனையே நம்பகத்தன்மை கூடியதாக இருக்கும்[9]. வீட்டில் செய்யப்படும் சோதனையான சிறுநீர்ச் சோதனை மூலம் கருக்கட்டலின் பின்னர் 12-15 நாட்களின் பின்னரே முடிவைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஒரு அளவறி குருதிச் சோதனை மூலம் முளையம் பதிந்த நாளை அண்ணளவாக நிர்ணயிக்கலாம்.

கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் குருதிப்போக்கு இருக்கும் பெண்களில் செய்யப்படும் புரோஜெஸ்தரோன் இயக்குநீர்ச் சோதனையானது, கருவின் உயிர்வாழ்வதற்கான நிலைப்பாட்டைக் கூறும்[10].

மீயொலிப் பரிசோதனை

தொகு

கர்ப்பமுற்றிருப்பதைத் தீர்மானிக்கவும், வேறு பல பயனுள்ள தகவல்களைப் பெறவும் இந்த மீயொலிப் பரிசோதனை செய்யப்படுகின்றது. மீயொலிப் பரிசோதனையில், கர்ப்பகாலத்தில் சிசுவிற்கு இருக்கக்கூடிய சில நோய்நிலைகளை அறியவும், குழந்தை பிறக்கும் நாளைத் தீர்மானிக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகியிருப்பின் அதனை அறிந்துகொள்ளவும் முடியும்[11]. இறுதியான மாதவிடாய் நாளைக்கொண்டு கணக்கிடப்படும் குழந்தை பிறக்கும் நாளை விட, இம்முறையால் பெறப்படும் நாள் கூடியளவு திருத்தமாக இருப்பது அறியப்பட்டுள்ளது[12].

இடர் எதுவுமில்லாத கருத்தரிப்பில், 24 கிழமைகளுக்கு முன்னர் செய்யப்படும் மீயொலிப் பரிசோதனை விளைவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை[13]. சாதாரண நிலமைகளில், 28 கிழமைக்குப் பின்னர் தொடர்ந்து செய்யப்படும் மீயொலிப் பரிசோதனையால் தாய்க்கோ, குழந்தைக்கோ எந்த விதமான நன்மையும் விளைவதில்லை என்றும், அறுவைச் சிகிச்சைக்கான சூழிடரைக் கூட்டக்கூடும் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன[14]. அதனால் அவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படுவதில்லை[13]. நவீன முப்பரிமாண மீயொலிப் பிம்பங்கள், முன்னைய இருபரிமாணப் படங்களைவிடவும் திருத்தமான, விளக்கமான பிறப்புக்கு முந்திய நிலையறிதல்களைத் தருகின்றன[15]. பெற்றோர் தமது மகிழ்வான நினைவுக்காக முப்பரிமாணப் படங்களைச் சேகரிக்க விரும்புகின்றார்களாயினும்[16], முப்பரிமாண அல்லது இருபரிமாண மீயொலிப் படங்களை, மருத்துவத் தேவைக்கல்லாது பெறப்படுவதை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஊக்கப்படுத்துவதில்லை[17]. ஆனாலும், மீயொலிப் பரிசோதனைகளுக்கும், மருத்துவம் தொடர்பில் தீங்குதரும் விளைவுகள் எதற்குமிடையிலான தொடர்பைக் காட்டும்படி எந்த இறுதியான ஆய்வுகளும் இல்லை[18].

உடற்கூற்றியல்

தொகு

கருத்தரிப்பு நிகழ்வின் ஆரம்பம்

தொகு
 
மனிதரில் கருக்கட்டலும், அதன் பின்னர் கருப்பையில் கரு பதிதலும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. வெளி வந்து ஒரு நாள் அது உயிரோடு இருக்கும்.[19] அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டால், ஆணின் விந்துக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினூடாக நீந்தி கருமுட்டையைச் சென்றடைகின்றன. கலவியின்போது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்புகும் விந்தானது, யோனி, அதைத் தொடர்ந்து கருப்பை வாய், கருப்பை வழியாக நீந்திச் சென்று பாலோப்பியன் குழாயை அடையும். அதேவேளை சூலகத்தில் இருந்து வெளியேறும் முட்டையும் பாலோப்பியன் குழாயை அடையுமாயின், விந்தானது அங்கே கருமுட்டையுடன் இணையும். அந்த விந்துக்களில் ஏதாவது ஒன்று சூல்முட்டைக்குள் உள்புகுந்தால் கருக்கட்டல் நிகழ்ந்து கருத்தரிக்கும். ஒரு விந்து சூல்முட்டைக்குள் போன பின்னர், வேறு விந்துக்கள் அந்த முட்டைக்குள் உள்ளே போக முடியாது.

வெளியேறும் விந்தானது உடனேயே கருக்கட்டக் கூடிய இயல்பை முழுமையாகக் கொண்டிருப்பதில்லை[20]. அவை நீந்திச் செல்லும்போது, பல மணித்தியாலங்களுக்கு அவற்றில் நிகழும் சில மாற்றங்களே, அவற்றைக் கருக்கட்டலுக்குத் தயார்ப்படுத்துகின்றன. கருக்கட்டலின்போது ஒருமடிய விந்தும், ஒருமடிய கருமுட்டையும் இணைந்து இருமடிய நிலையிலுள்ள கருவணுவை உருவாக்குகின்றது. கருவணுவானது பின்னர் கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். அது கருப்பையை வந்தடைய 4-7 நாட்கள் எடுக்கும். அதேவேளை கருவணு தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்படும்.

ஆனாலும் கலவி நிகழாமலேயே செயற்கை விந்தூட்டல், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் போன்ற முறைகள் மூலம் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இம்முறைகள் ஏதாவது காரணங்களால் மலட்டுத்தன்மை இருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படும்.

செயற்கை விந்தூட்டல் மூலம் சூல்முட்டை வெளிவரும் காலத்தில் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தப்படுவதன் மூலம், கருக்கட்டல் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அங்கே கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின் கருத்தரிப்பு நிகழும்.

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் ஆயின், வெளிவரும் முட்டைகள் பெண்ணின் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, வெளிச் சூழலில், அதாவது பரிசோதனைக் கூடத்தில், விந்துடன் கலக்கப்படும்போது, கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின், கருக்கட்டப்பட்ட கருவணு அல்லது, முளைய விருத்திக்கு உட்படும் முளையம் மீண்டும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் வைக்கப்பட்டு, கருத்தரிப்பு நிகழும்.

கரு வளர்ச்சி நிலைகள்

தொகு
 
மனித முளைய விருத்தியின் ஆரம்ப நிலைகள்

கருக்கட்டல் நிகழ்ந்த பின்னர், தோன்றும் கருவணுவானது கிட்டத்தட்ட 24-36 மணித்தியாலங்களில் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவுக்குள்ளாகும். கலப்பிரிவின்போது, உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும், இரட்டிப்படைந்து கொண்டும் அதிகரித்துச் செல்லும். கிட்டத்தட்ட 70-100 உயிரணுக்களைக் கொண்ட நிலையில், இளம்கருவளர் பருவம் (Blastocyst) என அழைக்கப்படும். பொதுவாக கருக்கட்டல் நிகழ்ந்து 5 நாட்களில் இவ்வாறு அழைக்கப்படும். இந்நிலையில் இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம் (mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும். வளர்ச்சியுற்ற நிலையில் புறப்படலம் தோல், நரம்புத் தொகுதியையும், இடைப்படலம் தசை, எலும்புத் தொகுதியையும், அகப்படலம் சமிபாடு, சுவாசத் தொகுதி போன்றவற்றையும் உருவாக்க வல்லன. கருப்பையை வந்தடையும் இளம் கருவளர் பருவமானது கருப்பைச் சுவரில் பதிந்து உறுதியாக இருக்கும்.

இது மேலும் விருத்தியடைந்து செல்லும் நிலையில், அது முளையம் எனப்படும். அப்படி உயிரணுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்போது உயிரணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, உயிரணு வேற்றுமைப்பாடு மூலம், வெவ்வேறு இழையங்கள் உருவாகும். இது முளைய விருத்தி எனப்படும். கருவின் வளர்ச்சிக்கு ஆதாரத்தைக் கொடுக்கும் சூல்வித்தகம், தொப்புள்கொடி போன்றனவும் விருத்தியடையும். இந்த விருத்தி நிலைகளின்போது உருவாகும் குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்காக, கருவை அல்லது முதிர்கருவைச் சுற்றி பனிக்குட நீர் அல்லது பனிக்குடப்பாய்மம் என்னும் திரவத்தைக் கொண்ட, பனிக்குடப்பை எனப்படும் ஒரு பையும் உருவாகியிருக்கும். தொடரும் விருத்தியின்போது கண், விரல்கள், வாய், காது போன்ற உடல் உறுப்புக்கள் தெரிய ஆரம்பிக்கும். உயிரணு வேற்றுமைப்பாடு கிட்டத்தட்ட 8 கிழமைகளில் நிறைவடைந்துவிடும். அந்நிலையில் முதிர்கரு என அழைக்கப்படும்.

முளைய விருத்தியில் விருத்தியடையத் தொடங்கிய உடல் உறுப்புக்கள், மற்றும் உடலியக்கத் தொகுதிகள் முதிர்கருவில் தொடர்ந்தும் விருத்தியடையும். கருத்திரிப்பின் மூன்றாவது மாதத்தில் பால் உறுப்புக்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்தும் முதிர்கருவானது நீளம், நிறை அதிகரித்துச் செல்லும். அதிகளவு நிறை அதிகரிப்பு கருத்தரிப்பின் இறுதி நிலைகளிலேயே ஏற்படும்.

தாயில் நிகழும் மாற்றங்கள்

தொகு

பெண்ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் முளையம், அல்லது முதிர்கருவைச் சிறந்த முறையில் உடலினுள் வைத்துப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாதாரணமான உடற்கூற்றியல் மாற்றங்களே. இவை சுற்றோட்டத் தொகுதி, வளர்சிதைமாற்றம், சிறுநீர்த்தொகுதி, மூச்சியக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய மாற்றங்களாக இருப்பதுடன், மகப்பேற்றுச் சிக்கல்கள் ஏதாவது ஏற்படுகையில், அப்போது மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. கருத்தரிப்புக் காலமானது மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது.

மூன்று பருவங்களில் நிகழும் மாற்றங்கள்

தொகு

கருத்தரிப்புக் காலமானது கிட்டத்தட்ட மூன்று மாதங்களைக் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. பிரசவ மருத்துவர்கள், 14 கிழமைகள் கொண்ட முப்பருவங்களாகப் பிரிக்கின்றபோது, மொத்தமாக 42 கிழமைகளைக் கருத்தில் கொள்கின்றனர்[25][26]. உண்மையில் சராசரியான கருத்தரிப்புக் காலமானது 40 கிழமைகளாக இருக்கின்றது[27]. இந்த முப்பருவங்களையும் தெளிவாக வேறுபடுத்தும் எந்த விதிகளும் இல்லாவிட்டாலும், இந்த பிரிவுகளானது, குறிப்பிட்ட காலத்தில் நிகழும் மாற்றங்களைக் காட்ட மிகவும் உதவியாக இருக்கும்.

முப்பருவத்தின் முதலாவது பகுதி
தொகு

மூச்சியக்கத்தில் ஒரு நிமிடத்தில் உள்ளெடுக்கும், வெளிவிடும் வளிமத்தின் கனவளவு 40% ஆல் அதிகரிக்கும்[28]. 8 கிழமைகளில் கருப்பையின் அளவானது ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்து காணப்படும். கருத்தரிப்பிற்கான அறிகுறிகளும், அதிலுள்ள பல சங்கடங்களும் இந்தக் காலத்திலேயே காணப்படும்[29].

முப்பருவத்தின் இரண்டாவது பகுதி
தொகு
 

கருத்தருப்பில் 13 தொடக்கம் 28 கிழமைக்கிடையிலான காலமே இந்த இரண்டாவது பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. இந்தக் காலத்தில் பொதுவாக தாய்மாரில் மசக்கை என்று அறியப்படும் காலை நேர அசெளகரியங்கள் குறைந்து, நின்றுபோவதனால் நிறை அதிகரிப்பு ஏற்படுவதுடன் அதிகரித்த ஆற்றலைப் பெறுவதாக உணர்வார்கள். கருப்பையானது தனது சாதாரண அளவைவிட 20 மடங்கு அதிகரிக்கும்.

முதலாவது பகுதியிலேயே முதிர்கருவானது மனித உருவத்தை ஓரளவு பெற்று அசைய ஆரம்பித்தாலும், இந்த இரண்டாம் பகுதியிலேயே அசைவை தாய்மார் உணரத் தொடங்குவார்கள். நாலாவது மாதத்திலேயே, குறிப்பாக 20ஆம், 21 ஆம் கிழமைகளில் அசைவுகள் உணர ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே கருத்தரித்த பெண்களாயின், 19 கிழமையிலேயே இதனை உணர ஆரம்பிக்கக்கூடும். இருப்பினும் சிலர் இந்த அசைவை பிந்திய நிலைகளிலேயே உணர்வார்கள்.

முப்பருவத்தின் மூன்றாவது பகுதி
தொகு

கருத்தரிப்பின்போது, இந்த மூன்றாவது பகுதியிலேயே மிக அதிகளவில் நிறை அதிகரிப்பு ஏற்படுகின்றது. முதிர்கருவின் தலைப் பகுதி கீழ்நோக்கித் திரும்புவதனால், வயிற்றின் கீழ்ப்புறம் தொங்குவது போன்ற தோற்றத்தைத் தரும். இக் காலத்தில் முதிர்கருவின் அசைவு மிக இலகுவாக தாயினால் உணரப்படும். இந்த அசைவானது வலிமையானதாக இருப்பதனால், தாயின் இயல்புநிலையைக் குழப்புவதாகவும் இருக்கக் கூடும். வயிற்ருப் பகுதி தொடர்ந்து விரிவடைந்து செல்வதனால், தொப்புள் வெளியே துருத்திக்கொண்டு இருப்பது போல் தெரியும்.

குழந்தை பிறப்பிற்கான காலம் அண்மிப்பதனால், குழந்தையின் தலை கீழ்நோக்கி நகர்ந்து இடுப்புப் பகுதிக்கு வரும். இதனால், சிறுநீர்ப்பையின் கொள்ளளவு குறைவதுடன், இடுப்புப் பகுதி, குதம் போன்ற இடங்களில் ஒரு அழுத்தம் உணரப்படும். அத்துடன் இந்தக் காலப்பகுதியில் தாய் படுத்திருக்கும் நிலைகள் முதிர்கருவிற்கான குருதியோட்டத்தினைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றமையால், விருத்தியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.[30]

கருப்பகாலத் தொந்தரவுகள்

தொகு

கருத்தரிப்பின்போது தாயில் பல உடற்கூற்றியல், உடலியங்கியல், உளவியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. உடற்கூற்றியலில் மற்றும் உடலியங்கியலில் நிகழும் மாற்றங்களே கூட உளவியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். கருப்பகாலம் முழுமைக்கும் ஒரு பெண் பல்வேறுபட்ட சங்கடங்களை எதிர்நோக்க வேண்டி வரும். தூக்கமின்மை, உட்கார்வதில் ஏற்படும் சிரமம், உணர்ச்சி பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் என்று பல்வேறுபட்ட சூழ்நிலைகள் ஏற்படும். சிலசமயம் ஒருவகை அரிப்பு, சூடாக உணர்தல், தலைமுடி, தோலில் மாற்றங்கள் ஏற்படல் போன்றனவும் நிகழும்[31].
முக்கியமான சில தொந்தரவுகள்/சங்கடங்கள்:

 • குமட்டல், வாந்தி - கருத்தரிப்பின் ஆரம்ப காலங்களில் மனித இரையகக் குடற்பாதையில் ஏற்படும் சில மாற்றங்களால் குமட்டல், வாந்தி போன்ற சங்கடங்கள் தோன்றும். பொதுவாக மூன்றாம் மாதம் முடிந்து 4ஆம் மாதம் ஆரம்பிக்கையில் இந்த சங்கடங்கள் இல்லாமல் போகின்றது. குமட்டல் 50-90% மான பெண்களிலும், வாந்தி 25-55% மான பெண்களிலும் ஏற்படும்.[32] இதற்குக் காரணம் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி என்னும் இயக்குநீர் அதிகரிப்பாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இதில், மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.[33]. இந்தத் தொந்தரவு மிக அதிகமாக இருக்குமானால் சில Antihistamine மருந்துகள் மருத்துவரால் வழங்கப்படும். இஞ்சி பயன்படுத்துவதனால் நன்மையுண்டா என்பது பற்றி மிகச் சரியாக அறியப்படாவிடினும், இதன்போது குமட்டல், வாந்தி குறைவதனால் இஞ்சிப் பயன்பாடும் பரிந்துரைக்கப்படுகின்றது.[2]
 • நெஞ்செரிவு - தொண்டையில் அல்லது மார்புப் பகுதியில் அல்லது இரு பகுதியிலும் எரிவதுபோன்ற ஒரு உணர்வு, அல்லது ஒருவித அசௌகரியம் உணரப்படும். இதனுடன் சேர்ந்து அமிலச் சுரப்பும் வாயினுள் வருவதனால் ஒருவகை கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வார்கள். இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லை என்பதனால் மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. இருக்கும்பொழுதும், படுக்கும்பொழுதும் சரியான நிலையைப் பேணுதல், குறைந்தளவு உணவை சிறிய இடைவெளிகளில் உண்ணுதல், கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள், கோப்பி போன்றவற்றைத் தவிர்த்தல் போன்றன இதச் சங்கடத்திலிருந்து விடுபட உதவும். இவற்றினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொந்தரவு இருக்குமானால் மட்டும் Antacid வகை மருந்து மருத்துவரால் வழங்கப்படும்[2].
இது 22% மான பெண்களில் முதலாவது பருவத்திலும், 39% மான பெண்களில் இரண்டாவது பருவத்திலும், 72% மானோரில் மூன்றாவது பருவத்திலும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகின்றது[34].
 • மலச்சிக்கல் - கர்ப்ப காலத்தில் வரும் மலச்சிக்கலானது உணவில் நார்ப்பொருள்குறைபாட்டால் மட்டுமன்றி, Progesterone இயக்குநீரின் அளவு அதிகரிப்பதனாலும் ஏற்படும். அவ்வேளையில் அதிகரித்த நார்ப்பொருள்கொண்ட உணவுகளை உண்பதன்மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.[2] ஆய்வொன்றில் 39% மான கர்ப்பிணிகளில் கருப்பகாலத்தின் 14 கிழமைகளிலும், 30% மானோரில் 28 கிழமைகளிலும், 20% மானோரில் 36 கிழமைகளிலும் மலச்சிக்கல் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது.[35]
 • மூலநோய் - 8% மான கர்ப்பிணிப் பெண்களில் கருப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் மூலநோய்ப் பிரச்சனை இருப்பதாக ஆய்வொன்று கூறுகின்றது.[36] இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லையென்பதனால் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுதலே பரிந்துரைக்கப்படுகின்றது. தொந்தரவு தொடர்ந்தும் அதிகமாக இருப்பின், வழமையாக மூலநோய்க்கு வழங்கப்படும் களிம்புகள் வழங்கப்படலாம்.[2]
 • காலில் புடைசிரைகள் (en:Varicose veins) - காலிலுள்ள சிரைகள் வீங்கி, நீலநிறமாகிக் காணப்படல். இது பொதுவாக கருப்பகாலத்தில் அவதானிக்கப்படுவது என்பதனால், இந்த அறிகுறியை மட்டுப்படுத்த சில வகை பாதவுறைகள் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகின்றது[2]
 • யோனியூடான வெளியேற்றம் - கருப்பகாலத்தில் பொதுவாகவே யோனியூடாக சிலவகைப் பதார்த்தங்களின் வெளியேற்றம் அவதானிக்கப்படலாம். ஆனால் இவ்வகை வெளியேற்றத்தின்போது அரிப்பு, புண், வலி, துர்நாற்றம் என்பன இருப்பின், அதற்குக் காரணம் ஏதாவது தொற்றாக இருக்கலாம். மருத்துவரை நாடி, அவரின் ஆலோசனையின்பேரில் தகுந்த சிகிச்சையைப் பெறலாம்.[2]
 • முதுகு வலி - 35-60% மான கர்ப்பிணிப் பெண்கள் முதுகு வலிப் பிரச்சனைக்கு உள்ளாவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பகாலத்தின் 5-7 மாதங்களில் இது அதிகளவில் காணப்படுகின்றது. இந்தத் தொந்தரவைக் குறைக்க சரியான உடற் பயிற்சிகள், உடல் பிடித்துவிடல் என்பன செய்யலாம்.[2]
 • இடுப்பு செயல் பிறழ்ச்சி (Symphysis pubis dysfuntion) - இடுப்புப்பகுதியில் ஏற்படும் அனைத்துவகை பிரச்சனைகளையும் சேர்த்து இடுப்பு செயல் பிறழ்ச்சி எனக் கூறலாம். இடுப்பெலும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான தொடை, ஏனைய பகுதிகளிலும் வலி ஏற்படலாம். வலி அதிகமாக இருப்பின் நடத்தலில் சிரமம் ஏற்படலாம். 1/36 கருப்பத்தரிப்பில் இந்தப் பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டுள்ளது.[37] எலும்பு வலி, மூட்டு வலிகளுக்குப் பயன்படுத்தும் அனேகமான மருந்துகள் கருப்ப காலத்தில் பயன்படுத்தக் கூடாதவை ஆகும்.[2] பயிற்சிகள், உடம்பு பிடித்துவிடல் போன்றவற்றால் வலியைக் குறைக்க முயலலாம்.
 • en:Carpal tunnel syndrome - கைகளில் விறைப்பு, எரிவு போன்ற வலி, வீங்கியிருக்கும் உணர்வு ஏற்படுதலைக் குறிக்கும். ஒரு நரம்பில் ஏற்படும் அழுத்தத்தால் இவ்வகையான அறிகுறி தோன்றலாம்.[2]

கருத்தரிப்புக் காலம்

தொகு
 
கருவளர் நிலைகள்
கருக்காலம் (கிழமை/நாட்களில்) வகைப்பாடு
37/0 க்கு முன்னர் குறைப்பிரசவம்
37/0 - 38/6 தவணைக்கு முன்னதான பிரசவம்[38]
39/0 - 40/6 சரியான தவணையில் பிரசவம்[38]
41/0 - 41/6 தவணைக்குப் பிந்திய பிரசவம்[38]
42/0 - க்குப் பின்னர் முதிர் பிறப்பு[38]

இயற்கையான கருத்தரிப்பில், கருக்கட்டல் நிகழ்ந்த நாளை மிகச் சரியாகக் கணித்தல் கடினமாகும். எனவே இறுதியாக ஏற்பட்ட மாதவிடாயின் முதல் நாளைக் கருத்தில்கொண்டே குழந்தை பிறப்பிற்கான நாள் பொதுவில் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தக் கணிப்பீடானது, கருக்கட்டலுக்கும், குழந்தை பிறப்பிற்கும் இடையிலான காலத்தை விட 2 கிழமைகள் அதிகமாக இருக்கும். இறுதியான மாதவிடாயின் ஆரம்ப நாளிலிருந்து 2 கிழமைகளிலேயே கருக்கட்டலுக்கான சாத்தியம் அதிகமாக இருப்பதுவே இத்தகைய கணிப்பீட்டிற்குக் காரணமாகும். பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். இதனால் பொதுவான கருத்தரிப்புக் காலம் 40 கிழமைகளாகக் கொள்ளப்படுகின்றது[39].

மீயொலிப் பரிசோதனையின்போது முதிர்கருவை அளந்து பார்த்து, எப்போது கருக்கட்டல் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைக் கணித்தும் குழந்தை பிறப்பிற்கான நாள் தீர்மானிக்கப்படும். இந்தக் கணிப்பானது கருக்கட்டல் நிகழ்ந்த நாளிலிருந்து, குழந்தையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. குழந்தைப் பிறப்பிற்கான மிகச் சரியான நாளைத் தீர்மானிக்க முடியாத போதிலும் 8 - 18 கிழமைகளில் எடுக்கப்படும் அளவீடானது ஓரளவு திருத்தமான கணிப்பீடாக இருக்குமென கூறப்படுகின்றது[39].

இந்தக் கணிப்பீட்டின்படி 40 கிழமை கருக்காலத்திற்கு 2 கிழமைகள் முன்னராகவோ, 2 கிழமைகள் பின்னராகவோ, அதாவது (38-42 கிழமைகளில்), பொதுவாக குழந்தைப் பிறப்பு நிகழும். குழந்தை பிறப்பு 38 கிழமைக்கு முன்னர் நிகழுமாயின் அது குறைப்பிரசவம் அல்லது தவணைக்கு முன்னான பிறப்பு என்றும், 42 கிழமைகளின் பின்னர் நிகழுமாயின் முதிர் பிறப்பு அல்லது தவணைக்குப் பின்னான பிறப்பு எனவும் அழைக்கப்படும்.

அமெரிக்க பிரசவ மருத்துவர், பெண் நோயியலாளர் குழுவின்[40] (ACOG) அறிக்கையின்படி, கருத்தரிப்புக் காலத்தை அளவிடுவதற்கான முக்கிய மூன்று முறைகள்[41]:

 • இறுதி மாதவிடாயின் ஆரம்ப நாளிலிருந்து (LMP) கணக்கிடல்
 • மாதவிடாய் வந்த நாள் தெரிந்திராவிட்டால், ஆரம்பகால மீயொலிப் பரிசோதனை மூலம்
 • செயற்கை கருத்தரிப்பு முறையால் கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பின், கருக்கட்டல் நிகழ்ந்த நாளுடன் 14 நாட்களைக் கூட்டல்[42].

வாழ்முறையில் கவனிக்க வேண்டியவை

தொகு

கருத்தரிப்பின்போது பல உடலியங்கியல், உளவியல், உணர்வெழுச்சி தொடர்பான மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் கருத்தரிப்பின்போது தாயின் உடலில் இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களாலோ, அல்லது பிறக்கப்போகும் குழந்தையையிட்டு மகிழ்ச்சியோ, குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பான அக்கறை, கவலை போன்ற உணர்வுகளாலோ ஏற்படலாம்.[43] பெண்களில் இக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படியான பிரச்சனைகளை முடிந்தளவு தவிர்க்க தமது வாழ்முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வது நல்லது.

தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு

தொகு

கருத்தரிப்பில் உருவாகியிருக்கும் முளையம் அல்லது முதிர்கருவானது தாயின் மரபியல் கூறுகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால், இந்த கருத்தரிப்பானது, மரபுக் கூறுகள் வேறுபட்ட இருவரிடையே வெற்றிகரமாகச் செய்யப்படும், உயிரணு, இழைய அல்லது உறுப்பு மாற்றல் (cell, tissue or organ transplantation) போன்று கருதப்படும்[44]. இத்தகைய வெற்றிக்குக் காரணம், கருத்தரிப்பின்போது, தாய்வழி நோயெதிர்ப்புத் தாங்குதிறன் (Maternal immune tolerance) அதிகரிப்பதாகும். ஆனால் வெளி இழையத்தை ஏற்கும் இந்த இயல்பானது, தாயில் நோய்த் தொற்றுக்களின்போது, நோயை ஏற்கும் தன்மைக்கும், நோயின் தீவிரம் அதிகரிக்கவும் காரணமாகிவிடுகின்றது. இதனால் தொற்றுநோய்களை ஏற்படத்தக்கூடிய நோய்க்காரணிகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

சிறுநீர்வழித் தொற்று (:en:Urinary Tract Infection]]) பெண்களிலேயே அதிகளவில் ஏற்படுவதாகவும், அதில் கர்ப்பிணிப் பெண்கள் மிக அதிகளவில் இத்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருப்பவர்களாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது[45].[46] கர்ப்பிணிப் பெண்களில் ஏற்படும் இயக்குநீர் மாற்றமும், கருப்பை பெரிதாவதனால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக் சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் உள்ளே தங்குவதும், இவர்களில் இத்தொற்றுக்கான வாய்ப்பைக் கூட்டுகின்றது. சுகாதாரமாக இருத்தல், அதிகளவு நீர் அருந்துதல் என்பன நோயிலிருந்து பாதுகாக்க உதவும். நோய் தீவிரமடைந்தால் அது சிறுநீரகத்திற்கும் பரவி, சிறுநீரகத் தொற்றாக (en:Pyelonephritis) மாறும் வாய்ப்பிருப்பதனால் அவதானமாக இருத்தல் அவசியம்.[46][47] அவசியமெனில் மருத்துவர், நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைப்பார்.[47]

உணவு மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் பொதுவான சனத்தொகையைவிட, கர்ப்பிணிப் பெண்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்ஃபுளுவென்சாவை ஒத்த நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா ஒன்றினால் ஏற்படும் en:Listerosis[48] என்னும் நோய் தீவிரத்தன்மையைக் காட்டினால், கருச்சிதைவு, செத்துப்பிறப்பு, அல்லது பிறக்கும் குழந்தை தீவிரமான உடல்நலக் குறைவுடன் இருத்தல் போன்ற நிலைகள் தோன்றும். சரியாக பாச்சர்முறைக்கு உட்படுத்தப்படாத பால், மென்மையான-முதிர்ந்த பாற்கட்டி (soft-ripened cheese), விலங்குகளின் கழிவுகள் உள்ள மண் போன்றவற்றில் இந்த பாக்டீரியா காணப்படும். இதேபோல் கொல்லைபடுத்தப்பட்ட பறவை இனங்கள், முட்டை, சரிவரச் சமைக்காத இறைச்சி, பதனிடப்படாத பால் போன்றவற்றில் இருக்கும் சல்மனல்லா (en:Salmonella) என்னும் பாக்டீரியாத் தொற்றும் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்படுவதாக அறியப்படாவிடினும், தாய்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் தோன்றும். உடல், சூழலைச் சுத்தமாகப் பேணல், பதனிடப்படாத பால் அருந்துவதைத் தவிர்த்தல், பழுதடையாத உணவை உண்ணல், இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு சமைத்து உண்ணல் போன்றன இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.[43] அவசியமெனில் மருத்துவரின் உதவியை நாடலாம்.

குழந்தை பிறப்பு

தொகு

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம்.

குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்

தொகு
 
புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தாய்

குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் குழந்தை பிறப்பு என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலம் குழந்தை பிறப்புக்குப் பின்னரான குறிப்பிடத்தக்க காலமாக இருக்கின்றது[49][50]. குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் தாயின் உடல்நலம் நன்றாக இருப்பதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளக் கூடியவாறு தாயின் உடல், உள நலம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தாய்ப்பாலூட்டல், இனப்பெருக்க உறுப்புக்களின் நலப் பராமரிப்பு, இனப்பெருக்க செயற்பாடுகள், குறித்த சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

கருத்தரிப்பு முறைகள்

தொகு

இயற்கை கருத்தரிப்பு முறை

தொகு

இயற்கையில் பெண்ணினது சூல்முட்டையும், ஆணினது விந்தும் கலவியினால் இணையும் போதே கருவணு அல்லது நுகம் உருவாகி அவைகள் 2-4-8-16-32 என கருவணுவை நூறு சதவீத ஒத்த பிரதிகளாக தொடர்ந்து பெருக்கமடைந்து முளையமாகிறது. கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருக்காலத்தின் 11 ஆவது கிழமையின் பின்னர், இம்முளையமானது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முதிர்கருவானது ஒன்பது மாதங்கள் கருவறையில் வளர்ச்சியடைந்த பின்னர், இறுதியில் முழு உயிராக அல்லது குழந்தையாக குழந்தை பிறப்பு நிகழ்வின் மூலம் பிரசவிக்கின்றது.

செயற்கை கருத்தரிப்பு முறை

தொகு

பரிசோதனைக்குழாய் குழந்தை

தொகு

சில காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருவணு உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish எனப்படும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவணுவை உருவாக்கி பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை பரீட்சிக்கப்பட்டு எண்பதுகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக்குழாய் குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.

செயற்கை விந்தூட்டல் முறை

தொகு

செயற்கையான முறையில் விந்தை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.

படியெடுப்பு

தொகு

கருவணு உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவையென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த முக்கிய கட்டமான படியெடுப்பு இனப்பெருக்கமாகும். இதன் படி பெண்ணினது முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செலுத்தப்பட்டு கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின்னர் கருவறையினுள் வளரச்செய்து பிரசவிக்கும் முறையாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.

மனிதரில் படியெடுப்பு என்பது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஒரு விடயமாகும்]].[51][52][53]

Panayiotis Zavos என்ற கருக்கட்டல் செயல்முறையில் நிபுணத்துவம் பெற்ற, சர்ச்சைகளுக்கு உள்ளாகும், ஒரு அமெரிக்க மருத்துவர், புதிதாகப் படியெடுக்கப்பட்ட முளையம் ஒன்றை, தான் 35 வயது பெண்ணிற்கு மாற்றி இருப்பதாக 2004 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், அந்தப் பெண் கருத்தரிக்கவில்லை என்றும் அறியக் கிடைத்தது[54][55].

ஒத்த குழந்தைகள்

தொகு

பரிசோதனைக்குழாய் குழந்தைகளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கருவணுவை உருவாக்கி அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும் போது முதல் ஓரிரு நாட்களில் 2, 4, 8, 16, 32 என உருவாகும் முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக்களை மீண்டும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து பரீட்சிக்கப்பட்ட போது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணுவாகச் செயற்பட்டுத் தனித்தனி முளையங்களைத் தோற்றுவித்தது. அவைகளை வெவ்வேறு பெண்கள் மூலமாகக் கருத்தரிக்கச்செய்ய வைக்க முடியும் என்பது உறுதிசெய்யப்பட்டது(சான்று தேவை). இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும் தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூலமாகப் பிரசவிக்கச்செய்ய முடியும் என்ற புரட்சியை அறிவியல் கொள்கையளவில் நிரூபித்தது. இக் குருத்தணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என அழைக்கப்பட்டன. முளையக் குருத்தணு வளர்ப்பு தாவரவியலிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரட்டைக் குழந்தைகள்

தொகு

ஒன்று போலிருக்கும் இரட்டை (Identical Twins)

தொகு

கருக்கட்டலின் பின்னர் தோன்றும் கருவணு, பிளவின் பொது (Clevage) சில சமயங்களில் இயல்புக்கு மாறாக, முழுமையாக இரண்டாகப் பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப் பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டை இரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை கருவுயிர்க்கப்பட்ட முட்டை சரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும் குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்கு ஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே இரு குழந்தைகளுக்கும் காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக்கூறும் ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புகளிலும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் சூழ்நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படலாம். சில சமயம் கருத்தரிப்புக் காலத்தில் தாயின் கருப்பையினுள் இருக்கும்போதே, அவர்களுக்கு கிடைக்கும் வேறுபட்ட அளவிலான ஊட்டச்சத்து காரணமாக இரு குழந்தைகளிடையேயும் வேறுபாடுகள் ஏற்படலாம்.

வேறுபாடுள்ள இரட்டை (Non Identical twins)

தொகு

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல்முட்டை வெளிப்படும். அபூர்வமாக சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளிப்படும். அல்லது ஏதாவது காரணங்களால் சூல்முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடும். இந்தச் சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேறு விந்துக்களால் கருவுயிர்க்கப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு எப்போதுமே விந்துக்களும் முட்டைகளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும் குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கிடையில் உருவ ஒற்றுமையோ, பிற பண்புகளில் ஒற்றுமையோ, ஒன்று போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்று, குறிப்பிடத்தக்கதாய் இருப்பதில்லை.

சமூக விளைவுகள்

தொகு

கருத்தடை

தொகு

முதன்மைக் கட்டுரை: கருத்தடை

கருக்கலைப்பும், கருச்சிதைவும்

தொகு

கருக்கலைப்பு என்பது முளையத்தை அல்லது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். வன்கலவி போன்ற சில காரணங்களினாலும், பொருளாதாரச் சிக்கல், சமூகப்பழி, மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களாலும் கருக்கலைப்பு செய்யப்படுவதுண்டு. இது பெரும்பாலான நாடுகளில் சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது. எனினும் ஒரு கருவை அழிப்பது ஒரு உயிரைக் கொல்வதாகும் என்பது பலரின் நிலைப்பாடு. சிலசமயம் சில தாயின் உடல்நலத்தைக் காக்கும் நோக்கிலும், பிறக்கப்போகும் குழந்தை உடல்நலக் குறைபாட்டுடன் பிறக்கும் என்பது தெரியவந்தால், அதனைத் தவிர்ப்பதற்கும் கூட இவ்வாறாக கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.

கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படுவது உண்டு. இது பொதுவாகக் கருச்சிதைவு எனப்படும்.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Pregnancy Symptoms". National Health Service (NHS). 11 March 2010. பார்க்கப்பட்ட நாள் 11 March 2010. {{cite web}}: External link in |publisher= (help)
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 National Collaborating Centre for Women’s and Children’s Health, Commissioned by the National Institute for Health and Clinical Excellence, Funded to produce guidelines for the NHS by NICE (March 2008). "Antenatal care routine care for the healthy pregnant woman" (PDF). Clinical Guideline. RCOG Press. pp. 106–113. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 3. "Karpam Symptoms in Tamil". Dheivegam.
 4. 4.0 4.1 "Early symptoms of pregnancy: What happens right away". Mayo Clinic. 22 February 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-22. {{cite web}}: External link in |publisher= (help)
 5. 5.0 5.1 "Pregnancy Symptoms – Early Signs of Pregnancy : American Pregnancy Association". Archived from the original on 2008-01-15. பார்க்கப்பட்ட நாள் 2008-01-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 6. MedlinePlus > Breast pain Update Date: 12/31/2008. Updated by: David C. Dugdale, Susan Storck. Also reviewed by David Zieve.
 7. "NHS Pregnancy Planner". National Health Service (NHS). 19 March 2010. Archived from the original on 29 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |publisher= (help)
 8. Qasim SM, Callan C, Choe JK (1996). "The predictive value of an initial serum beta human chorionic gonadotropin level for pregnancy outcome following in vitro fertilization.". Journal of Assisted Reproduction and Genetics 13 (9): 705–8. doi:10.1007/BF02066422. பப்மெட்:8947817. https://archive.org/details/sim_journal-of-assisted-reproduction-and-genetics_1996-10_13_9/page/705. 
 9. "BestBets: Serum or Urine beta-hCG?".
 10. Verhaegen, J; Gallos, ID; van Mello, NM; Abdel-Aziz, M; Takwoingi, Y; Harb, H; Deeks, JJ; Mol, BW; Coomarasamy, A (Sep 27, 2012). "Accuracy of single progesterone test to predict early pregnancy outcome in women with pain or bleeding: meta-analysis of cohort studies". BMJ (Clinical research ed.) 345: e6077. doi:10.1136/bmj.e6077. பப்மெட்:23045257. 
 11. Whitworth, M; Bricker, L; Neilson, JP; Dowswell, T (Apr 14, 2010). Whitworth, Melissa. ed. "Ultrasound for fetal assessment in early pregnancy". Cochrane database of systematic reviews (Online) (4): CD007058. doi:10.1002/14651858.CD007058.pub2. பப்மெட்:20393955. 
 12. Nguyen, T.H.; et al. (1999). "Evaluation of ultrasound-estimated date of delivery in 17 450 spontaneous singleton births: do we need to modify Naegele's rule?" (abstract). Ultrasound in Obstetrics and Gynecology 14 (1): 23–28. doi:10.1046/j.1469-0705.1999.14010023.x. பப்மெட்:10461334. http://doi.org/10.1046/j.1469-0705.1999.14010023.x. பார்த்த நாள்: 18 August 2007. 
 13. 13.0 13.1 "Screening for Ultrasonography in Pregnancy". U.S. Preventive Services Task Force. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 14. Bricker, L; Neilson, JP; Dowswell, T (Oct 8, 2008). Bricker, Leanne. ed. "Routine ultrasound in late pregnancy (after 24 weeks' gestation)". Cochrane database of systematic reviews (Online) (4): CD001451. doi:10.1002/14651858.CD001451.pub3. பப்மெட்:18843617. 
 15. Dimitrova V, Markov D, Dimitrov R (2007). "[3D and 4D ultrasonography in obstetrics]" (in Bulgarian). Akush Ginekol (Sofiia) 46 (2): 31–40. பப்மெட்:17469450. 
 16. Sheiner E, Hackmon R, Shoham-Vardi I, et al. (2007). "A comparison between acoustic output indices in 2D and 3D/4D ultrasound in obstetrics". Ultrasound Obstet Gynecol 29 (3): 326–8. doi:10.1002/uog.3933. பப்மெட்:17265534. 
 17. Rados C (January–February 2004). "FDA Cautions Against Ultrasound 'Keepsake' Images". FDA Consumer Magazine. Archived from the original on 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
 18. Kempley R (9 August 2003). "The Grin Before They Bear It; Peek-a-Boo: Prenatal Portraits for the Ultrasound Set". Washington Post இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102233803/http://www.highbeam.com/doc/1P2-279063.html. 
 19. பிரேமா கிருஷணசாமி. (2004). கருத்தரித்தல். உச்சி முதல் உள்ளங்காள் வரை. சென்னை: ஆனந்த விகடன்.
 20. "Fertilization". பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.
 21. 3D Pregnancy பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (Image from gestational age of 6 weeks). A rotatable 3D version of this photo is available here பரணிடப்பட்டது 2007-09-14 at the வந்தவழி இயந்திரம், and a sketch is available here பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
 22. 3D Pregnancy பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (Image from gestational age of 10 weeks). A rotatable 3D version of this photo is available here பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம், and a sketch is available here பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
 23. 3D Pregnancy பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (Image from gestational age of 20 weeks). A rotatable 3D version of this photo is available here பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம், and a sketch is available here பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
 24. 3D Pregnancy பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (Image from gestational age of 40 weeks). A rotatable 3D version of this photo is available here பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம், and a sketch is available here பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
 25. trimester. CollinsDictionary.com. Collins English Dictionary – Complete & Unabridged 11th Edition. Retrieved 26 November 2012.
 26. thefreedictionary.com > trimester Citing:
  • The American Heritage® Dictionary of the English Language, Fourth Edition, copyright 2000
 27. Cunningham, et al., (2010). Williams Textbook of Obstetrics, chapter 8.
 28. Campbell, LA; Klocke, RA (April 2001). "Implications for the pregnant patient". American Journal of Respiratory and Critical Care Medicine 163 (5): 1051–54. doi:10.1164/ajrccm.163.5.16353. பப்மெட்:11316633. 
 29. "You and your baby at 0-8 weeks pregnant". NHS,UK].
 30. Stacey, T; Thompson, JM; Mitchell, EA; Ekeroma, AJ; Zuccollo, JM; McCowan, LM (Jun 14, 2011). "Association between maternal sleep practices and risk of late stillbirth: a case-control study". BMJ (Clinical research ed.) 342: d3403. doi:10.1136/bmj.d3403. பப்மெட்:21673002. 
 31. The Pregnancy Book 2001. National Health Service, London: Health Promotion England. 2001.
 32. Baron TH, Ramirez B, Richter JE (March 1 1993). http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8257464 "Gastrointestinal motility disorders during pregnancy. .". Annals of Internal Medicine 118 (5): 366–75. http://annals.org/article.aspx?articleid=706161; http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8257464. [தொடர்பிழந்த இணைப்பு]
 33. Noel M. Lee, M.D., Sumona Saha, M.D. (June 2011). "Nausea and Vomiting of Pregnancy". Gastroenterol Clin North Am 40 (2): 309-vii. doi:10.1016/j.gtc.2011.03.009. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3676933/. 
 34. Marrero JM1, Goggin PM, de Caestecker JS, Pearce JM, Maxwell JD. (Sep. 1992). "Determinants of pregnancy heartburn". British Journal of Obstetrics and Gynaecology 99 (9): 731–4. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/1420011. 
 35. Meyer LC, Peacock JL, Bland JM, Anderson HR. (Apr 1994). "Symptoms and health problems in pregnancy: their association with social factors, smoking, alcohol, caffeine and attitude to pregnancy.". Paediatr Perinat Epidemiol. 8 (2): 145-55. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8047482. 
 36. Abramowitz L, Sobhani I, Benifla JL, Vuagnat A, Darai E, Mignon M, et al . (45 2002). "Anal fissure and thrombosed external hemorrhoids before and after delivery.". Diseases of the Colon and Rectum (650–5.). http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12004215. 
 37. Owens K, Pearson A, Mason G. (Nov 2002). "Symphysis pubis dysfunction: a cause of significant obstetric morbidity". European Journal of Obstetrics Gynecology and Reproductive Biology 105 (2): 143–6. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12381476. 
 38. 38.0 38.1 38.2 38.3 Ob-Gyns Redefine Meaning of "Term Pregnancy", from American College of Obstetricians and Gynecologists May 22, 2014
 39. 39.0 39.1 "Calculating Conception". American Pregnancy Association. pp. Last Updated: 07/2007. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2014.
 40. "Ob-Gyns Redefine Meaning of "Term Pregnancy"". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2014.
 41. "Gastational Age & Term" (PDF). ACOG. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2014.
 42. Tunon, K.; Eik-Nes, S. H.; Grøttum, P.; Von Düring, V.; Kahn, J. A. (2000). "Gestational age in pregnancies conceived after in vitro fertilization: A comparison between age assessed from oocyte retrieval, crown-rump length and biparietal diameter". Ultrasound in Obstetrics and Gynecology 15 (1): 41–46. doi:10.1046/j.1469-0705.2000.00004.x. பப்மெட்:10776011. 
 43. 43.0 43.1 National Collaborating Centre for Women’s and Children’s Health, Commissioned by the National Institute for Health and Clinical Excellence, Funded to produce guidelines for the NHS by NICE (March 2008). "Antenatal care routine care for the healthy pregnant woman" (PDF). Clinical Guideline. RCOG Press. pp. 82–105. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 44. Clark DA, Chaput A, Tutton D (March 1986). "Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity". J. Immunol. 136 (5): 1668–75. பப்மெட்:2936806. http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806. 
 45. "Urinary tract infection in women". University of Maryland Medical Center (UMMC). last updated: June 24, 2013. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 46. 46.0 46.1 "Urinary Tract Infections: From Prevention to Cure, Pregnancy and Urinary Tract Infections". WebMD. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2014.
 47. 47.0 47.1 "Urinary Tract Infections in Pregnancy Treatment & Management". WebMD LLC. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.
 48. Southwick FS , Purich DL. (March 21 1996). "Intracellular pathogenesis of listeriosis". New England Journal of Medicine 334 (12): 770–6. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8592552. 
 49. "Postnatal Care (Puerperium)". Patient.co.uk. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2014.
 50. Charlotte Warren, Pat Daly, Lalla Toure, Pyande Mongi. "Postnatal Care" (PDF). World Health Organization. pp. Chapter 4. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 51. Joshua Lederberg. (1966). Experimental Genetics and Human Evolution. The American Naturalist 100, 915, pp. 519-531
 52. Watson, James. "Moving Toward a Clonal Man: Is This What We Want?" The Atlantic Monthly (1971)
 53. Lewis D. Eigen (2010). "Scriptamus, Human Clones May Be Among Us Now! Who Is Ready?".
 54. "Human clone attempt fails". Daily Mail (London). http://www.dailymail.co.uk/health/article-207372/Human-clone-attempt-fails.html. 
 55. "Human cloning attempt has failed". BBC News. 4 February 2004. http://news.bbc.co.uk/2/hi/health/3459009.stm. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தரிப்பு&oldid=3707006" இலிருந்து மீள்விக்கப்பட்டது