கறிவேம்பு

(கறிவேப்பிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கறிவேம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
தரப்படுத்தப்படாத:
Rosids
வகுப்பு:
வரிசை:
Sapindales
குடும்பம்:
Rutaceae
பேரினம்:
Murraya
இனம்:
M. koenigii
இருசொற் பெயரீடு
Murraya koenigii
(லி.) Sprengel[1]

கறிவேம்பு (ஒலிப்பு), கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை (ஒலிப்பு) (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும்[சான்று தேவை]. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும்.[2] கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.[3]

தோற்றம்

தொகு

வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.

சொல் விளக்கம்

தொகு

கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.

"கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.

இலங்கை மற்றும் பிறநாடுகளில்

தொகு
 
கறிவேப்பிலைப் பழம்

கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.

இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.

பேச்சு வழக்கில்

தொகு

"கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறிப்பில்லை, கருவேப்பிலை, கறிவேம்பு, கரிப்பிலை, காட்டு வேப்பிலை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.

ஆதாரங்கள்

தொகு
  1. "Murraya koenigii information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived from the original on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  2. "கறிவேப்பிலை". periyarpannai.in (பெரியார் பண்ணை(தமிழ்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. கா.சு. வேலாயுதன் (9 திசம்பர் 2017). "காசு தரும் கறிவேப்பிலை!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறிவேம்பு&oldid=3871081" இலிருந்து மீள்விக்கப்பட்டது