கஸ்வின் மாகாணம்

ஈரானின் ஒரு மாகாணம்

கஸ்வின் மாகாணம் (Qazvin Province, பாரசீக மொழி : استان قزوین‎, Ostān-e Qazvīn) என்பது ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடமேற்கில் உள்ளது. அதன் தலைநகராக காஸ்வின் நகரம் உள்ளது. தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு பகுதியை பிரித்து 1993 ஆம் ஆண்டில் இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. கஸ்வின் மாகாணத்தின் மாவட்டங்களாக காஸ்வின் கவுண்டி, தாகெஸ்தான் கவுண்டி, அபேக் கவுண்டி, புயின் ஸஹ்ரா கவுண்டி, மொபராகே கவுண்டி, அல்போர்ஸ் கவுண்டி மற்றும் அவாஜ் கவுண்டி ஆகியவை உள்ளன. இந்த மாகாணத்தின் பெரிய நகரங்களாக கஸ்வின், தாகெஸ்தான், அபேக், அல்வாண்ட், ஈரான், பிடெஸ்தான், மொபராகே, முகமதியே மற்றும் எக்பாலியே ஆகியவை உள்ளன.

2014 ஜூன் 22, அன்று ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக ஈரானின் மாகாணங்களை ஐந்து பகுதிகளாகப் பிரித்ததன் பின்னர் இந்த மாகாணம் பகுதி ஒன்றின் ஒரு பகுதியாக உள்ளது.[1]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாகாணத்தில் 1.2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். அவர்களில் 68.05% பேர் நகரங்களிலும், 31.95% கிராமங்களிலும் வாழ்பவர்களாவர். பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதமானது 50.7 மற்றும் 49.3% ஆகும். மாகாண மக்களில் 99.61% பேர் முஸ்லிம்கள், மீதமுள்ளவர்களில் 0.39% பேர் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள். கல்வியறிவு விகிதம் 82% க்கும் அதிகமாக உள்ளது. இந்த மாகாணம் கல்வியறிவில் ஈரானில் ஏழாவது இடத்தை வகிக்கிறது.[ மேற்கோள் தேவை ]

புவியியல், காலநிலை மற்றும் மக்கள்தொகு

 
ஓவன் ஏரி, அலமுட்
 
பரஜின்

இந்த மாகாணமானது 15821 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது கிரீன்விச் நெடுவரைக் கோட்டுக்கு கிழக்கே 48-45 முதல் 50-50 வரையிலும், பூமத்திய ரேகையின் 35–37 முதல் 36-45 வரையிலான வடக்கு அட்சரேகையிலும் உள்ளது. இந்த மாகாணம் வடக்கே மாசாந்தரான் மாகாணம் மற்றும் கீலான் மாகாணம், மேற்கில் ஹமேடன் மாகாணம் மற்றும் சஞ்சன் மாகாணம், தெற்கில் மர்கசி மாகாணம் மற்றும் கிழக்கில் தெஹ்ரான் மாகாணம் போன்ற மாகாணங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் புகழ்பெற்ற மலைகளாக சியாலன், ஷா அல்போர்ஸ், காஷ்சால், செபித்கோத், ஷோஜீ தின், அலெஹ்தரே, ரமண்ட், ஆக் டாக், கராகான், சாரிதாக், சொல்தான் பார், மற்றும் சியோகல் போன்ற மலைகள் உள்ளன. இதில் 4175 மீ உயரமுள்ள சியாலன் மற்றும் 4056 மீட்டர் உயரமுள்ள ஷா ஆல்போர்ஸ் ஆகிய மலைகள் மிக உயர்ந்தவை. இந்த மலைகள் அனைத்தும் அல்போர்சு மலைத்தொடரின் நடுத் தொடர் பகுதிகளுக்கு உட்பட்டவை. மாகாணத்தின் மிகுந்த தாழ் நிலப்பகுதியானது தரோம் ஈ சோஃப்ளாவில் உள்ளது.

மாகாணத்தின் வடக்கு பகுதிகளின் காலநிலையானது குளிர்காலத்தில் குளிர் மிகுந்ததாகவும், பனி பொழியக்கூடியதாகவும், கோடைகாலத்தில் மிதமான வெப்பம் கொண்ட காலநிலை நிலவக்கூடியதாக இருக்கும். மாகாணத்தின் தெற்கு பகுதிகளின் காலநிலையானது ஒப்பீட்டளவில் குளிர்காலத்தில் குளிர்ந்தும் மற்றும் கோடைக்காத்தில் லேசான வெப்ப நிலையைக் கொண்டதாக இருக்கும்.

மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களும், கஸ்வின் நகர மக்களும் பாரசீக மற்றும் காஸ்வின் மக்களாவர். இங்கு முக்கியமாக பேசப்படும் மொழியானது கஸ்வினி உச்சரிப்புடன்கூடிய பாரசீக மொழி ஆகும்.[2] மேலும் பிற சிறுபான்மை மொழிகளான அஸெரி, டாடி, குர்திஷ், லூரி மற்றும் ரோமானி ஆகியவையும் பேசப்படுகின்றன.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்தொகு

குறிப்புகள்தொகு

  1. همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند
  2. The official Media from Qazvin- February 10-2010 "Archived copy". மூல முகவரியிலிருந்து November 2, 2013 அன்று பரணிடப்பட்டது..
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்வின்_மாகாணம்&oldid=3069968" இருந்து மீள்விக்கப்பட்டது