கா. காளிமுத்து

(கா.காளிமுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கா.காளிமுத்து(K. Kalimuthu ) அதிமுக அரசியல்வாதியும் தமிழக முன்னாள் அமைச்சரும் ஆவார். தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்.[1][2]

கா.காளிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-07-14)சூலை 14, 1942
ராமுத்தேவன்பட்டி, விருதுநகர்
இறப்புநவம்பர் 8, 2006(2006-11-08) (அகவை 64)
மதுரை
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்(கள்)நிர்மலா, மனோகரி
பிள்ளைகள்4 மகன், 5 மகள்
வாழிடம்மதுரை
As of நவம்பர் 8, 2006
மூலம்: [1]

குடும்பம்

தொகு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி கிராமத்தில் 14-7-1942 ந்தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள்.காளிமுத்துவுக்கு 10 சகோதரர்களும், 1 சகோதரியும் உள்ளனர்.காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அமுதா, கயல் விழி என்ற மகள்களும் உள்ளனர்.

மதுரை தியாகராஜ கல்லூரியில் எம்.ஏ.தமிழ் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலக்கியபணி

தொகு

தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி' என்றும் பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக்கிய-அரசியல் பேச்சாளர்களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.

படைப்புகள்

தொகு

100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார்.[சான்று தேவை]

  1. செல்வபுரியில் சீரழியும் இளைஞர்கள்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை - 98.

அரசியல்பணி

தொகு

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவரணி அமைப்பாளராகவும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மாணவரணி அமைப்பாளராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும், அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்ததால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.

வகித்தபொறுப்புகள்

தொகு

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டபேரவை உறுப்பினர் ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ஆனார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு

1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

தமிழக அமைச்சராக

தொகு

1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை தமிழ்நாடு விவசாய துறை அமைச்சராகவும் , 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

தமிழக சட்டபேரவை தலைவராக

தொகு

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார். இதையடுத்து அவர் தமிழக சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவராக காளிமுத்து இருந்து வந்தார். நவம்பர் 8, 2006 அன்று காளிமுத்து மரணமடைந்தார்.

வழக்கு

தொகு

இவர் 1982 ஆம் ஆண்டு தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது இவரின் நண்பர்களான ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல் ஆகியோருக்கு வங்கியில் கடன் பெற பரிந்துரை செய்து லஞ்சம் பெற்றார் என்ற காரணத்தினால் இவர் உட்பட மோட்டார் ஆய்வாளார், வாகன மதிப்பீட்டாளர் என 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 16 பேர் வழக்கு நடக்கும்போதே இறந்துவிட்டார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு 29 சனவரி 2016 ஆம் ஆண்டு 32 ஆண்டுகள் கழித்து 5 பேருக்கு மட்டும் சிறைதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

குறிப்புகள்

தொகு
  1. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-10-23.
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
  3. பரபரப்பை ஏற்படுத்திய ராபின் மெயின் வழக்கில் 32 ஆண்டுக்கு பின் தீர்ப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு சிறை தண்டனை 30 சனவரி 2016 தி இந்து தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._காளிமுத்து&oldid=3943386" இலிருந்து மீள்விக்கப்பட்டது