கிளை விளக்கு

கிளை விளக்கு பல கிளைகளுடன் கூடிய குத்து விளக்கின் வடிவம் கொண்டது. இவ்வகை விளக்குகளைக் கோயில்களிலும், வீடுகளில் சிறப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். பெரிய அளவிலான இவ்வகை விளக்குகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.

அ. இராகவனின் நூலில் சோடச அன்னச் சங்கிலிக் கிளை விளக்கு எனக் குறிப்பிட்டுள்ள கிளை விளக்கு.[1]

அமைப்பு தொகு

இவ்விளக்குகளில் நடுவில் ஒரு உயரமான தண்டும், அதிலிருந்து பல அடுக்குகளில் கிளைத்துச் செல்லும் பல விளக்குகளும் அமைந்திருக்கும். கீழுள்ள கிளைகள் அகன்றும் அடுக்குகளில் மேல்நோக்கிச் செல்லும்போது மேல் அடுக்குகள் பெரும்பாலும் ஒடுங்கிச் செல்லும். இவ்விளக்குகள் பித்தளை முதலிய உலோகங்களால் செய்யப்படுகின்றன. இவ்விளக்குகள் கூடிய ஒளியைப் பெறுவதற்காகவும் அலங்காரத்துக்காகவும் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு உயரங்களில் உருவாக்கப்படும் இவ்விளக்குகளிற் பெரியவை ஆறடி வரை உயரம் கொண்டவையாக இருக்கலாம். நடுத்தண்டின் உச்சியில் குத்து விளக்குகளில் இருப்பதைப் போலவே அன்னப் பறவை அல்லது வேறு உருவங்கள் இருக்கும். இவ்வகை விளக்குகளில் இந்த உருவங்கள் சிக்கலான உருவங்களைக் கொண்டவையாகவும், நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடியவையாகவும் அமைந்திருக்கும்.

கிளை விளக்குகள் சில தொகு

அ. இராகவன் தனது நூலில் தமிழ்நாட்டில் காணப்படும் பின்வரும் கிளை விளக்குகளைப் பட்டியல் இட்டு அவற்றை விளக்கியுள்ளார்.[2]

  • சோடச அன்னச் சங்கிலிக் கிளை விளக்கு
  • திருப்பதி கிளை விளக்கு
  • அன்னலட்சுமி கிளை விளக்கு
  • கின்னரிக் கிளை விளக்கு
  • தாமரைக் கிளை விளக்கு

மேற்கோள்கள் தொகு

  1. இராகவன், அ., தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 2014. பக். 143, 147, 148
  2. இராகவன், அ., 2014. பக். 142 - 156
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளை_விளக்கு&oldid=2163042" இலிருந்து மீள்விக்கப்பட்டது