குன்னுவர்

பழங்குடி மக்கள்

குன்னுவர் என்பவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைகளில், கொடைக்கானலிலிருந்து 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் காடுகளின் ஊடே வாழும் பழங்குடிமக்கள் ஆவர்.[1]

இவர்களுடைய தாய்மொழி தமிழ் மொழி ஆகும். இவர்கள் தங்களைக் குன்னுவ வேளாளர் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்களின் முதன்மைத் தொழில் உழவுத் தொழில் ஆகும். சிலர் காடுகளில் கிடைக்கும் கிழங்கு, தேன், சிறு விலங்குகளை உண்டும் வாழ்கின்றனர் போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு இல்லை. [2]

வரலாறு தொகு

கொங்கு நாட்டத்திலுள்ள தாராபுரம், காங்கேயம் பகுதிகளே தங்கள் முன்னோர் வாழ்ந்த இடமென்று இவர்கள் கூறுகின்றனர். போரும் பஞ்சமும் மிகுந்திருந்த காரணத்தால், ஐந்தாறு நூற்றாண்டுகட்கு முன் இவர்களின் முன்னோர்கள் சமவெளியிலிருந்து இங்குக் குடிபுகுந்தார்களாம். விஜயநகர மன்னர், மராட்டிய மன்னர், திப்புசுல்தான் ஆகியோரின் ஆட்சியில், வரிச்சுமை தாளாமலும் வேறு பல துன்பங் களுக்கு ஆட்பட்டும் வருந்தியவர்கள் பலர் இங்குக் குடி புகுந்தார்கள். ஒரு சமயம் காலரா என்னும் வாந்திபேதி நோய் பரவலின்போது அதற்கு அஞ்சிய சமவெளி மக்களும் இங்குக் குடி. புகுந்ததாகக் கூறப்படுகிறது. பழைய கோவை மாவட்டத்திலுள்ள குன்னூர் என்ற சிற்றூரின் பெயரே தங்கள் குடிப்பெயராக அமைந்ததென்று காரணம் கூறுகின்றனர். மேலும் விரூபாட்சி, ஆயக்குடி ஆகிய இடங்களில் வாழ்ந்த போலிகர் என்னும் வகுப்பார் மலைமீதுள்ள தங்களுடைய நிலங்களில் பணிபுரிவதற்காக இவர்களை இங்குக் குடியேற்றினார்கள் என்றும் கூறப்படுகிறது.[3]

பண்பாடு தொகு

குன்னுவர் வாழும் ஒவ்வோர் ஊரிலும் அவர்களுடைய சமூகவியலை மேற்பார்க்க ‘மண்ணாடி' என்ற ஒரு தலைவருண்டு. இவ்வினத்தார், குன்னுவர், பெரிய குன்னுவர், சின்னக் குன்னுவர் என முப்பிரிவாகப் பிரிந்து வாழ்கின்றனர். இப்பிரிவுகளுக்கு 'வகுப்பு'க்கள் என்று பெயர். ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரோடு மண உறவு கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனால் ஒன்றாக அமர்ந்து உண்ணுவர்.[3]

இவர்கள் திருமணத்திற்கு தந்தையோடு பிறந்த அத்தையின் மகளே பெரும்பாலும் மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறனர். சில சமயங்களில் மணமகனைவிட மணமகள் மிகவும் வயதில் மூத்தவளாக இருப்பதுண்டு. சிறுவனான ஒருவனுக்கு ஒன்றுவிட்ட அத்தைமார்களின் வீட்டிலிருந்து, இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்து வைப்பதுண்டு. பருவமடையாத அச்சிறுவனைவிட, வயதில் மூத்திருக்கும் மனைவியர், அவர்கள் குலத்திலே விருப்பமுள்ள வேறு ஆடவர்களோடு தொடர்பு கொள்ளுவார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படி கணவனுக்கே பிறந்தவைகளாகக் கருதப்படுவர். இவர்களுடைய திருமணம் சடங்குகளற்றது. மணமகனின் பெற்றோர் மணமகளுக்குப் பரிசம் வழங்குவர். மணமகனின் தமக்கை பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவாள். பிறகு எல்லோரும் விருந்துண்பர். இத்துடன் திருமணம் முடிவடைகிறது.[3]

‘வீட்டு வைப்பு' என்ற முறையொன்று இவர்களால் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஆண் சந்ததியில்லாமல் ஒரு பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணை யாருக்கும் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அவ்வாறு திருமணம் செய்து கொடுத்தால் அத்தோடு அவர்கள் குடி அருகிவிட்டதாக எண்ணினார்கள். அப்பெண்ணை அவளுடைய வீட்டின் வாயிலிலுள்ள ஒரு கம்பத்திற்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்குப் பதிலாக, அவளுடைய வலது கையில் வெள்ளியினாற் செய்த வளையல் ஒன்றை அணிவிப்பார்கள். அதன் பிறகு அப்பெண் அவள் குலத்தைச் சார்ந்த எந்த ஆடவனுடனும் தொடர்பு கொள்ளலாம். அவளுடைய வருமானம் பெற்றோரையே சேரும். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அக்குடும்பத்திற்குரிய சொத்து முழுவதும் அதையே சாரும், மேற்கு பெல்லாரியிலும், தர்வார், மைசூர் ஆகிய நாடுகளுக்கு அண்மையிலும் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் 'பசவிமுறை'யோடு இவ் வீட்டு வைப்பு முறை ஒத்துள்ளது.[3]

மேற்கோள் தொகு

  1. The Kunnuvans or Mannadis, a Hill-Tribe of the Palnis, South India -Father Dahmen, Anthropos ,Bd. 5, H. 2. (1910), pp. 320-327-Published by: Anthropos Institute
  2. மலைக் கிராமத்தில் 2 மாதத்தில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் மரணம்
  3. 3.0 3.1 3.2 3.3 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னுவர்&oldid=3064490" இலிருந்து மீள்விக்கப்பட்டது