கும்பகோணம்

இது தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.

கும்பகோணம் (Kumbakonam) தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம் மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கும்பகோணம்
குடந்தை, கும்பேஸ்வரம்
சிறப்பு நிலை நகராட்சி
Town Hall Kumbakonam.jpg
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிசோழ நாடு
மாவட்டம்தஞ்சாவூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்12.58 km2 (4.86 sq mi)
ஏற்றம்24 m (79 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,54,237
 • அடர்த்தி12,000/km2 (32,000/sq mi)
மொழிகள்
 • ஆட்சிமொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அ.சு.எ612001-6
Telephone code(91) 435
வாகனப் பதிவுTN 68

காவேரி கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 270 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவம் மற்றும் வைணவம் கோயில்கள் உள்ளன. சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று கும்பேஸ்வரர் கோயிலில் உள்ளது. கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும் பாக்கும் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.

கும்பகோணம் நகராட்சிதொகு

கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 45 உறுப்பினர்களை கொண்ட நகராட்சி ஆகும்.

மக்கள்தொகை பரவல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.[1]

குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்தொகு

சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல். கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே – குடவாயிற் கீரத்தனார் – அகநானூறு 60.

நகரின் ஆன்மீகப் பெருமைதொகு

கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.

இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன. [2]

யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.

 
மகாமக திருவிழாவில் பக்தர்கள் குளத்தில் நீராடுகின்றனர்

தல வரலாறுதொகு

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".

சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.[3] திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. [4] சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.

பெயர்க் காரணம்தொகு

பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவிய தலம் குடமூக்கு என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.[3]

கும்பகோணம் தல புராணங்கள்தொகு

கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு தலபுராணங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை : 1) கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 2) கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு). 3) கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு). 4) திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது. 1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத் திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.[5]

கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.[6]

குடந்தைதொகு

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது. [7] பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

குடமூக்குதொகு

நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. [7] நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

கும்பகோணம்தொகு

கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது. [8]

பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் குடமூக்கு என்றும் குடந்தை என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

 • பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
 • குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.

மகாமகக் குளம்தொகு

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 5 ஏக்கர் பரப்புடையது.

1992-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலின் போது மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காலமானார்கள்.

சப்தஸ்தானம்தொகு

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [2]

கும்பகோணம் தல தமிழ் இலக்கியங்கள்தொகு

கும்பகோணம் தலம் தொடர்பாக பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன.[9] அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.

பஞ்சகுரோசத்தலங்கள்தொகு

சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தலங்களைப் போற்றும் பாடல் திருக்குடந்தைப் புராணத்தில் காணலாம்.[4]

“கற்றவர் புகழும் கும்பகோணத்தைக் கலந்து போற்றும்
பெற்றியரைங் குரோச யாத்திரை பேணல் வேண்டும்
உற்றவத் தலமோரைந்துள் ஒவ்வொன்று றொரு நான்மேவிற்
பெற்ற புண்ணியம் பயக்கும் என்மனார் புலமைசான்றோர்“

பள்ளிக்கூட தீ விபத்துதொகு

2004-ம் ஆண்டு சூலை 16-ம் தேதி அன்று கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி சாம்பலாகினர். 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிகக் குறுகிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டிருந்ததே இத்தனை பேர் உயிர் பறிபோனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.[10] இந்த வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று கூறப்பட்டது. இதில் 8 பேருக்கு ஐந்து ஆண்டுகளும், இரண்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டார்கள். இப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.[11]

போக்குவரத்து வசதிகள்தொகு

பேருந்து வசதிகள்தொகு

கும்பகோணம் நகரில் பேருந்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் செயல்பட்டு வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், சேலம், பெங்களூரு, காஞ்சிபுரம், திண்டிவனம், புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, கடலூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

ரயில் சேவைகள்தொகு

கும்பகோணம் நகரில் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இராமேஸ்வரம், ஹைதராபாத், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருச்சி, சென்னை, நாகர்கோவில், தாம்பரம், மைசூரு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை, சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. [ https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 கும்பகோணத்தின் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]
 2. 2.0 2.1 திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
 3. 3.0 3.1 புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
 4. 4.0 4.1 திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
 5. முனைவர் வே.இரா.மாதவன், திருக்குடந்தைப்புராணம், மகாமகம் 2004 சிறப்பு மலர்
 6. புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 2004 சிறப்பு மலர்
 7. 7.0 7.1 குடந்தையும் குடமூக்கும், மகாமகம் 1992 சிறப்பு மலர்
 8. குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்
 9. மகாமகம் 1992 சிறப்பு மலர்
 10. http://dinamani.com/india/article712415.ece
 11. 'கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை'

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்&oldid=3112965" இருந்து மீள்விக்கப்பட்டது