குறிப்புப்பொருள்

குறிப்புப்பொருள் என்பது கருத்துகள் வெளிப்படையாக அமையாமல் குறிப்பால் பொருளை வெளிப்படுத்தும் இலக்கிய உத்தியாகும். அதாவது ஒரு கருத்தை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு கருத்துடன் ஒப்பிட்டும், ஒரு காட்சியை மற்றொரு காட்சியுடன் ஒப்பிட்டும் பாடலைப் பாடுவதாகும். தமிழில் குறிப்புப் பொருளாக பாடும் முறையில் உள்ளுறை, இறைச்சி என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளைக் கொண்டு பாடப்படும்பொழுது இலக்கியமானது எல்லையில்லா இன்பத்தை வழங்குகின்றன என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

"அந்தமில் சிறப்பின் ஆக்கிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே" (தொல். 1189)

என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.

உள்ளுறை உவமம் தொகு

1. பாடலின் உள்ளே ஒரு பொருளையும், வெளிப்பட மற்றொரு பொருளையும் வைத்து பாடப்படுவது உள்ளுறை உவமம் ஆகும்.

2. உள்ளுறை உவமம் வழி திணையை உணர முடியும்.

3. உள்ளுறை உவமம் தெய்வம் தவிர்த்த பிற கருப்பொருட்கள் இடமாகக் கொண்டு தோன்றும்.

4. உள்ளுறை உவமத்தால் காட்சிப்படுத்தப்படும் கருப்பொருட்கள், வெளிப்படப் புலப்படுத்தப்படும் பாடற்பொருளோடு ஒத்துப் பொருள் முடியும்.

இறைச்சி தொகு

தமிழ் இலக்கியங்களில் இறைச்சி என்ற சொல் 'அன்பு தங்குமிடம்', 'அன்பு ஒன்று சேருமிடம்'என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறைச்சி என்பதற்குப் பறவை, விலங்கு, ஆகிய கருப்பொருட்கள் என்று தமிழண்ணல் பொருள் காண்கிறார். தம் கருத்துக்குச் சான்றாக 'ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்' (தொல். 1116) என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தை எடுத்தியம்புகிறார்.

  • இறைச்சியால் தோன்றும் உட்பொருள் திறம் அறிந்து தெளிவோர்க்கே புலப்படும்.
  • இறைச்சிப்பொருள் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தோன்றுமிடத்து, அஃறிணை உயிர்களுக்கு உயர்திணை ஈறு காணப்பட்டாலும் அது உயர்திணையைக் குறிக்காது.

தொனி தொகு

குறிப்புப் பொருளை வடமொழியில் 'தொனிப்பொருள்' எனலாம். த்வனி என்ற வடசொல்லின் திரிபே தொனி ஆகும். தொனி எனும் இலக்கிய அழகு பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே வடமொழியில் காணப்படுகிறது. இதனை ஓர் அற்புத இலக்கியக் கொள்கையாக முதன் முதலில் எடுத்துச் சொன்னவர் ஆனந்தவர்தனர் என்ற காசுமீரத்துப் பண்டிதர் ஆவார்.

சான்று தொகு

1.கி.இராசா,ஒப்பிலக்கியம்,பார்த்திபன் பதிப்பகம்தி,ருச்சி,பதிப்பாண்டு-2006

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்புப்பொருள்&oldid=3743282" இலிருந்து மீள்விக்கப்பட்டது