குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்

குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் (Postpartum period) என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் குழந்தை பிறப்பு என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்[1][2]. உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 2013 இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும், இக் காலத்திலேயே தாய், மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது[2][3]. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பெண்களும், 870,000 புதிதாகப் பிறந்த குழந்தைகளும், குழந்தை பிறந்து முதலாவது கிழமைக்குள் இறப்பதாகவும், குழந்தை பிறப்பின் பின்னரான முதலாவது நாளிலேயே இவ்வகையான இறப்பு அதிகம் நிகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது[2]. உலகம் முழுவதுமாக ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் பிறந்து ஒரு மாத காலத்திற்குள், இவற்றில் அநேகமானவை ஒரு கிழமைக்குள் இறப்பதாகவும், தாயின் நலக் குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும், தாய்க்கு கருத்தரிப்பின்போதும், குழந்தை பிறப்பின் போதும், அதற்குப் பின்னரான காலத்திலும் சரியான பராமரிப்பு வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது[4].

புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தாய்

பராமரிப்பு

தொகு

குழந்தைக்கு தாயின் உடலினுள் இருக்கும்போது ஆக்சிசன், ஊட்டச்சத்து போன்ற அத்தியாவசியமான தேவைகள் தொப்புள்கொடியினூடாக நேரடியாகக் கிடைக்கும். தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் அந்தக் கணத்திலிருந்து, அந்தத் தேவைகள் வெளிச் சூழலிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதனால், குழந்தையானது அந்த புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடைய வேண்டும். இக்காலத்திலேயே தாயின் உடலானது கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீளும் காலமாகும். இயக்குநீர்களில் மாற்றம் ஏற்படுவதுடன், கருப்பையானது சுருங்கி தனது பழைய நிலையை அடையும் காலமாகும். இக் காலத்தில் குழந்தைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் வழங்கப்படுவதுடன், தாய்மாருக்கு பிரசவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.
குழந்தை பிறப்பானது மருத்துவமனையொன்றில் நிகழ்வதாகவும், யோனியினூடான குழந்தை பிறப்பாகவும் இருப்பின், சராசரியாக 1-2 நாட்களில் தாயும் சேயும் வீடு செல்வார்கள் எனினும், பொதுவாக குழந்தையும் தாயும் மிகவும் நலத்துடன் இருப்பதுடன் வீடு செல்ல விரும்பின், சில மணித்தியாலங்களிலேயே கூட வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். குழந்தை பிறப்பானது அறுவைச் சிகிச்சை மூலமான அறுவைவழி குழந்தை பிறப்பாயின் (en:Caesarean section), தாயும், சேயும் உடல் நலத்துடன் இருப்பின் பொதுவாக 3-4 நாட்களில் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த நாட்களில், தாய், சேய்க்கான பராமரிப்புடன், குழந்தையின் நலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், தாயின் உடலில் ஏற்படும் குருதிப்பெருக்கு, மனித இரையகக் குடற்பாதையிலான மாற்றங்கள், சிறுநீர்ப்பையின் தொழிற்பாடு போன்றனவும் கண்காணிக்கப்படும்.[5].
குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் தாயின் உடல்நலம் நன்றாக இருப்பதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளக் கூடியவாறு தாயின் உடல், உள நலம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தாய்ப்பாலூட்டல், இனப்பெருக்க உறுப்புக்களின் நலப் பராமரிப்பு, இனப்பெருக்க செயற்பாடுகள், கருத்தடை குறித்த சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைக்கான பராமரிப்பு

தொகு

கருப்பையினுள் மிகவும் பாதுகாப்புடன், தாயின் தொப்புள்கொடியினூடாக அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்ட குழந்தை கருப்பையை விட்டு வெளியேறியதும், அதற்கான பராமரிப்பும், அனைத்து தேவைகளும் வெளிச் சூழலில் வைத்து வழங்கப்பட வேண்டும்.

தாய்க்கான பராமரிப்பு

தொகு

உடலியங்கியல்

தொகு

அறுவைச் சிகிச்சை மூலமான குழந்தைப் பிறப்பாயின், தாயின் உடலிலிருக்கும் அறுவைத் தையல் (en:Surgical Suture) அவதானிக்கப்படுவதுடன், தாயின் குருதிப்பெருக்கு, சிறுநீர்வழியில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள், மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படக்கூடிய சிக்கலினால் சிறுநீர் தங்கல் (en:Urinary retention), தொடர்பான தசைகளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், மலச்சிக்கல், மூல நோய்ப் பிரச்சனைகள் போன்றனவும் தொடர்ந்த அவதானிப்புக்கு உட்படுத்தப்படும். கருத்தரிப்பின்போது, கருப்பையில் இருக்கும் குழந்தையினால் ஏற்படும் அழுத்தமும், இதனால் குறிப்பிட்ட தசைகளில் ஏற்படும் மாற்றங்களுமே சிறுநீர் கழித்தல், மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கலுக்குக் காரணமாகின்றது.
பெண்களில் கருத்தரிப்பின்போதும், குழந்தை பிறப்பின் பின்னரும் கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு அவதானிக்கப்படுகின்றது. கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கானது கருத்தரிப்புக்கு முன்னர் 3.6% ஆகவும், கருத்தரிப்பின்போது 43.7% ஆகவும், குழந்தை பிறப்பிற்குப் பின்னர் 14.6% ஆகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாடிழந்த மலப்போக்கும் சிறியளவில் காணப்படுகின்றது. இது கருத்தரிப்புக்கு முன்னர் 0.7% ஆகவும், கருத்தரிப்பின்போது 6.0% ஆகவும், குழந்தை பிறப்பிற்குப் பின்னர் 5.5% ஆகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.[6]

உளவியல்

தொகு

25% - 85% மான பெண்களில், குழந்தை பிறந்த சில நாட்களுக்கு வேறுபட்ட உளவியல் பிரச்சனைகள் வேறுபட்ட அளவில் காணப்படுகின்றது. இதனை உடனடியாகக் கண்டுபிடித்து, சிகிச்சையளித்தல் அவசியமாகும்.

மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வான குழந்தை பிறப்பின் பின்னர், 70% மான பெண்கள் குழந்தை பிறப்பின் பின்னரான 10 நாட்களில் சில மனநிலை மாற்றங்களை உணர்வதாகக் கூறப்படுகின்றது. இவை ஒரு வகையான சஞ்சலம், சோர்வு, கவலை, அமைதியின்மை போன்ற மாற்றங்களாகும்.[7]

en:Postpartum depression, en:Posttraumatic stress disorder, en:Postpartum psycosis (Puerperal psychosis) என்பன சில குறிப்பிடத்தக்க உளவியல் பிரச்சனைகளாகும். 9-16% மான பெண்களில் PPD (Postpartum depression) ஏற்படுவதாகவும், ஏற்கனவே ஒரு கருத்தரிப்பில் PPD ஏற்பட்ட பெண்களாயின், இந்த வீதம் 41 ஆக அதிகரிப்பதாகவும் அறியப்படுகின்றது[8].

கலாச்சாரம்

தொகு

வெவ்வேறு நாட்டு கலாச்சாரத்தில் குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் பராமரிப்பானது வேறுபட்டுக் காணப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் தாய்மார் குழந்தை பிறப்பு நிகழ்ந்த அன்றே குளித்து, வழமையான உணவை உண்பதுடன், தமது உடல்நிலை இடம்கொடுக்கும் நிலையில் தமது வழமையான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.[9] ஆனால் பல நாடுகளில் இந்த நடைமுறையில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளல்லாத நாடுகளில், தனிப்பட்ட பராமரிப்பு முறைகள் காணப்படினும், அவற்றில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிட்ட காலத்திற்கு தாயையும் குழந்தையையும் வெளியே எங்கும் செல்லவிடாமல், வீட்டிலேயே வைத்திருந்து பராமரித்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.[10] இத்தகைய சம்பிரதாய முறையானது தாய்க்கு குழந்தை பிறப்பினால் ஏற்பட்ட களைப்பிலிருந்து மீண்டு கொள்ள காலத்தை வழங்குவதுடன், தாய்க்கும் சேய்க்கும் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் உதவுவதாக நம்பப்படுகின்றது[11]. இவ்வகையான பராமரிப்பு முறைகள், மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் சில சமுதாய அமைப்புக்கள் பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.[12] அவையாவன:

 • குழந்தை பிறப்புக்குப் பின்னரான கட்டுப்பாடான காலத்தை கொண்டிருத்தல்
 • இலகுவில் நோய்த் தொற்றுக்கு உட்படக்கூடிய, அல்லது காயப்படக்கூடிய நிலையிலிருக்கும் தாய்க்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருத்தல்
 • தாயும் சேயும் பலருடனும் தொடர்பு கொள்ளாமல் ஓரளவு தனிமைப்படுத்தப்படுவதன் மூலம், கட்டாய ஓய்வில் இருத்தல்
 • தாய் தனது வழமையான வேலைகளைச் செய்யாமல் ஓய்விலிருப்பதற்காக உதவிகள் அனைத்தும் வழங்கப்படல்
 • தாய்க்கு சமூகத்தில் முக்கியத்துவம், மதிப்பு வழங்கப்படல்

இவ்வாறான பராமரிப்பு முறைகளால், அந்த நாடுகளில் தாய்மாரில் உளவியல் பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுவதில்லை என்று குறிப்பிடப்படுகின்றது[12]. தொழில்வள நாடுகளில் 50 - 85% மான தாய்மாரில் இக்காலத்தில் Baby Blues[13] என அழைக்கப்படும் ஒருவகை உளவியல் பிரச்சனை காணப்படுவதாகவும், 15 - 25% மான தாய்மாரில் குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் வரும் மனத்தளர்ச்சி (Postpartum depression) ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது[12].

தாய்மாருக்கு பராமரிப்பின்போது சிறப்பான உணவு தயாரித்து வழங்கப்படுகின்றது. சிலசமயம் குழந்தை பிறந்த தாய்மாருக்கு வழங்கப்படும் உணவில் மதுவும் சேர்க்கப்படுகின்றது. சீனாவில் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவானது மதுவானது, தாயின் குருதி மற்றும் குழந்தைக்கான பாலிலுள்ள கூறுகளை மாற்றுவதாகவும், பாலூட்டல் செயல்முறையைப் பாதிப்பதாகவும், அதனால், பாலூட்டல் காலத்தில் மது கலந்த உணவு வழங்கலைத் தவிர்ப்பது நல்லது என்றும் கூறுகின்றது[14].

இலங்கைத் தமிழர்கள்

தொகு

இலங்கைத் தமிழர்களின் கலாச்சாரத்தில் குழந்தை பிறந்து 31 நாட்களுக்கு தாய்க்கும் குழந்தைக்குமான தனித்துவமான பராமரிப்பு வீட்டில் வழங்கப்படும். தாயையும் சேயையும் ஒரு தனிப்பட்ட அறையில் வைத்து, முழுப் பராமரிப்பு வழங்கப்படும் இந்தக் காலத்தில் வீட்டில் துடக்கு இருப்பதாகக் கூறுவார்கள். இக்காலத்தில் பத்திய உணவு என அழைக்கப்படும் விசேட உணவு தாய்க்கு வழங்கப்படும். இந்த உணவு அதிகமான உறைப்பு சேர்க்கப்படாத, வெவ்வேறு மசாலாப் பொருட்கள் கலந்த உணவாக இருக்கும்.[15] தாய்க்கு மருத்துவ குணங்கள் கொண்ட சில தாவர இலைகள் சேர்ந்த சுடுநீர் குளிப்பதற்கு அளிக்கப்படும்.

குழ்ந்தை பிறந்து 41 ஆவது நாளில் தாயும் சேயும் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்தப் பராமரிப்புடன் சில பாரம்பரிய சம்பிரதாய வழக்கங்கள் கைக்கொள்ளப்படும். 6-7 மாதங்களில் குழந்தைக்குச் சோறூட்டல், முதல் பல் முளைக்கும்போது கொழுக்கட்டை அவித்து குழந்தைக்குக் கொடுக்கும் நிகழ்வான பல்லுக் கொழுக்கட்டை, 6-8 மாதங்களில் காது குத்தல் போன்ற நிகழ்வுகளைச் செய்தல் அவற்றில் சில.[15]

இந்தியா

தொகு

இந்தியாவிலும் பல பகுதிகளிலும், குழந்தை பிறப்புக்குப் பின்னர் தாய்க்கான கட்டுப்பாடான பராமரிப்புக் காலம் உண்டு. இது வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கால அளவாக உள்ளது. வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் பொதுவாக இது 40 நாட்களாகவும், தெற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இது 60 நாட்களாகவும் இருக்கின்றது. கிழக்கு, அதிகமாக வடகிழக்கு மாநிலங்களில் இவ்வகை சம்பிரதாயம் மிகவும் கண்டிப்பாக இல்லாதிருப்பதுடன், மிகவும் குறுகியதாகவும் இருக்கின்றது. இருந்தாலும் தற்போதைய காலத்தில் இத்தகைய நடை முறைகள் குறைந்து வருகின்றது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு விடுமுறை எடுக்க முடியாமல் இருப்பதாலோ, அல்லது தமக்கு இத்தகைய ஓய்வு அவசியமில்லை என்று எண்ணுவதனாலோ இந்தக் காலக் கட்டுப்பாடு குறைந்து வருகின்றது. தாய்க்கு வழங்கப்படும் உணவானது வெவ்வேறு பகுதிகளில் அந்த அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு அமைகின்றது. குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் தாயின் உடல் குளிர்மையாக இருக்குமென நம்பப்படுவதனால், உடலை சூடாக்கக் கூடிய உணவுகள் வழங்கப்படுகின்றது. அத்துடன் தாயின் உடலைப் பிடித்து விட்டு, உடல் தசைகளை இலகுவாக்குவார்கள்.[11]

கிழக்கு ஆசிய நாட்கள்

தொகு

சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகளிலும் குழந்தை பிறப்புக்குப் பின்னரான கட்டுப்பாடான காலம் உண்டு. சீனாவில் இந்தக் காலம் 30 நாட்களாகவும்[14], வியட்நாமில் 100 நாட்களாகவும்[16], ஜப்பானில் 2-4 கிழமைகளாகவும்[17], கொரியாவில் 3 கிழமைகளாகவும் இருக்கின்றது[9].

மேற்கோள்கள்

தொகு
 1. "Postnatal Care (Puerperium)". Patient.co.uk. பார்க்கப்பட்ட நாள் மே 22, 2014.
 2. 2.0 2.1 2.2 Charlotte Warren, Pat Daly, Lalla Toure, Pyande Mongi. "Postnatal Care" (PDF). World Health Organization. pp. Chapter 4. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 92 4 150664 9. "WHO recommendations on Postnatal care of the mother and newborn" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92 4 159084 X (World Health Organization Geneva 2006). "Integrated Management of Pregnancy and Childbirth, Pregnancy, Childbirth, Postpartum and Newborn Care: A guide for essential practice" (PDF). WHO, UNICEF, UNFPA, The World Bank Group. World Health Organization. pp. 2nd Edition. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2014, For updates, visit www.who.int/making_pregnancy_safer. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: numeric names: authors list (link)
 5. "With Women, Midwives Experiences: from Shiftwork to Continuity of Care, David Vernon, Australian College of Midwives, Canberra, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9751674-5-8, p17f
 6. CHALIHA, CHARLOTTE MA, MBBChir; KALIA, VEENA PhD; STANTON, STUART L. FRCS, FRCOG; MONGA, ASH MRCOG; SULTAN, ABDUL H. MD, MRCOG (November 1999). "Antenatal Prediction of Postpartum Urinary and Fecal Incontinence". Obstetrics & Gynecology Volume 94 (Issue 5, Part 1): p 689–694. doi:The American College of Obstetricians and Gynecologists. http://journals.lww.com/greenjournal/Abstract/1999/11000/Antenatal_Prediction_of_Postpartum_Urinary_and.9.aspx. 
 7. "Pregnancy / Postpartum Wellness Emotional and Psychological Issues during Pregnancy". The Center for Individual, Family, and Community Wellness. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2014.
 8. "Postpartum depression". American Psychological Association. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2014.
 9. 9.0 9.1 By Lee Hye-jun. "Korean postpartum care is special". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.
 10. Yeoun Soo Kim-Godwin (April 2003). "Postpartum Beliefs and Practices Among Non-Western Cultures". Wolters Kluwer Health LWW. MCN, The American Journal of Maternal/Child Nursing. pp. Volume 28 Number 2 Pages 74 - 78. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. 11.0 11.1 "Post delivery confinement practices in India". BabyCenter,. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
 12. 12.0 12.1 12.2 Kathleen Kendall-Tackett,. "How Other Cultures Prevent Postpartum Depression Social Structures that Protect New Mothers' Mental Health" (PDF). UppityScienceChick.com. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
 13. "The baby blues". BabyCenter. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.
 14. 14.0 14.1 Yeh-Chung Chien 1 , Ya-Jing Huang 2 , Chun-Sen Hsu 3 , Jane C-J Chao 2 and Jen-Fang Liu 2 (March 2009). "Maternal lactation characteristics after consumption of an alcoholic soup during the postpartum ‘doing-the-month’ ritual". Public Health Nutrition 12 (3): 382–388. doi:10.1017/S1368980008002152. http://journals.cambridge.org/action/displayFulltext?type=1&fid=3824708&jid=PHN&volumeId=12&issueId=03&aid=3824700. 
 15. 15.0 15.1 "Traditions & Customs - Childhood". www.Yarlcuisine.Com. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2014.
 16. SgMummy, For Welness in Motherhood. http://sgmummy.com/vietnamese-confinement/. பார்த்த நாள்: 2014-06-05. 
 17. JAPANESE CULTURE, Beliefs and Practices During Pregnancy, Birth, and Postpregnancy. http://www.hawcc.hawaii.edu/nursing/RNJapanese03.html. பார்த்த நாள்: 2014-06-05.