கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பறவைகள் காப்பகமாகும்
(கூத்தன்குளம் பறவைகள் காப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் (Koonthankulam Bird Sanctuary) தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி வட்டத்தில் உள்ளது. இக்காப்பகம் கூந்தன்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. இதன் பரப்பு 1.2933 ச.கிமீ. இது 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

பூநாரை

இக்காப்பகத்திற்கு 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வலசை வருகின்றன[1]

அமைவிடம் தொகு

கூந்தன்குளத்தில் பட்டைத்தலை வாத்துகள்
கூந்தன்குளத்தில் நெடுங்கால் உள்ளான் பறவைகள்

திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளம், 1994-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும் இடமாகும். கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில், பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு, குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்கின்றன.

பூநாரைகள் தொகு

நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் உள்ள ரன்-கட்ச் பகுதியில் லட்சக்கணக்கில் இனப் பெருக்கம் செய்யும் பூநாரைகளை கண்ட பறவையியல் அறிஞர் சலீம் அலி அவ்விடத்தை ஆசியாவின் மிகப் பெரிய பூநாரைகள் பகுதியாக அறிவித்தார். தமிழகத்தின் பருவநிலையை விரும்பி ஆண்டுதோறும் திசம்பர், சனவரி மாதங்களில் பூநாரைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் கூந்தன் குளம் தவிர, பழவேற்காடு, கோடியக்கரை பறவைகள் சரணாலயங்களுக்கும் வருகை தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற பறவைகள் தொகு

சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிவது கணக்கிடப்பட்டுள்ளது.

ஓராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத்து 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அக்டோபர் இறுதியில் கூந்தன் குளம் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல், மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன. பறவைகளைக் காண சனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு