கொடிசியா வளாகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொடிசியா வளாகம் தமிழ்நாட்டின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் அமைந்துள்ள பன்னாட்டு வணிகக் கண்காட்சிகள் நிகழ்த்தக்கூடிய ஓர் காட்சிக்கூட வளாகம். கொடிசியா என்பது கோவை மாவட்ட சிறுதொழிலதிபர் சங்கம்(COimbatore DIstrict Small Scale Industry Association) என்பதன் ஆங்கிலச்சொல்லின் சுருக்கமாகும்CODISSIA.இந்தச் சங்கம் 40 உறுப்பினர்களுடன் 1969ஆம் ஆண்டு தொடங்கி இந்நாளில் 5200 பேராக வளர்ந்துள்ளது.சிறுதொழில் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் வழிகோலிட துவக்கப்பட்ட இச்சங்கம் கோயம்புத்தூரின் தொழிற்துறை உறுதியாக அமையக் காரணமாக இருந்து வருகிறது. தொழில் முனைவோரின் தேவைகளை ஒட்டி பல கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் தொழிற்துறை கண்காட்சிகளும் நடத்தி வருகிறது. 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிறுதொழிலக சோதனை மற்றும் ஆய்வு மையம் (SiTARC) நாட்டின் சிறப்பான சோதனைக்கூடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
1988 முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு தொழில் கண்காட்சியினை நடத்தி வருகிறது. துவக்கத்தில் பி. எஸ். ஜி மைதானத்தில் நடந்து வந்த இந்தக் கண்காட்சி 2000ஆம் ஆண்டு முதல் புதியதாகக் கட்டப்பட்ட சங்கத்தின் கொடிசியா வளாகத்தில் நடத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் நகரம் வணிகக் கண்காட்சிகள் நடத்த மிகத் தோதான இடமாக விளங்கியதைப் பயன்படுத்தும் வகையில் கோவையை அடுத்த விளாங்குறிச்சியில் 40 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. கோவை தொழில்நுட்பக் கழகத்தின் எதிரே அவினாசி சாலையின் வடக்குப்புறத்தில் ரூ.11 கோடி செலவில் 1,60,000 ச.அடிகள் பூசப்பட்ட பரப்பளவு கொண்ட மாபெரும் கட்டிடத்தைக் கட்டியுள்ளது.
இந்தக் கட்டிடம் இடையே யாதொரு தூணும் இன்றி கட்டப்பட்டுள்ளது ஓர் குடிசார் பொறியியல் சாதனையாகும். தவிர,சூலை 1999 இலிருந்து திசம்பர் 1999க்குள் 160 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதும் திட்ட மேலாண்மையின் திறனை விளக்குகிறது. இக்கட்டிடம் கொடிசியா உறுப்பினர்களின் குழுத்திறனுக்கும் கூட்டுறவிற்கும் சான்றாக விளங்குகிறது. உலகத்தர கண்காட்சிகளை நடத்திட வேண்டிய அனைத்து வசதிகளையும் தன்னகத்தேக் கொண்டு புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்திற்கு அடுத்ததாகவும் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்துறை வணிகக் காட்சிக்கூடமாகவும் இது விளங்குகிறது.