சங்கு வளையல்
சங்கு வளையல் (Conch Bangle) என்பது பண்டையத் தமிழ் மகளிர் அணிந்த வளையல்களில் ஒரு வகையாகும். தமிழர் வரலாற்றுக் காலம் முதல் சங்கு வளையல்களை அணிந்து வந்துள்ளனர். பழந்தமிழ்ப் பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்தது குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிடபட்டுள்ளன.
சங்கினை அக்காலத்தில் அரம் போன்ற சிறு கருவி கொண்டு அறுத்து செய்யப்பட்டது. சங்கை அறுத்து வளையல் செய்பவர்கள் வேளாப் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டது அகநானூறால் அறியவருகிறது. நக்கீரர் அக்குடியைச் சேர்ந்தவர்.[1] பண்டையத் தமிழ்நாட்டில் இருந்து சங்கு வளையல்கள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெம்பக்கோட்டை போன்ற பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன.[2]
அரச குடும்பத்துப் பெண்களும், செல்வ மகளிரும் வலம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்திருந்தனர். நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியான பாண்டிமாதேவி பொன் வளையல்களுடன் வலம்புரிச் சங்கினாலான வளையல்களையும் அணிந்திருந்தாள் என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. சாதாரண மகளிர் இடம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தனர். கணவனை இழந்த பெண்களின் கைகளில் அணியப்பட்ட வளையல்கள் அகற்றப்படும் அல்லது உடைக்கப்படும். கோவலனை இழந்த கண்ணகி கொற்றவை கோயிலின் முன் தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டாள். சங்கு வளையல் அணியும் வழக்கம் மிகப் பிற்காலத்தில் அற்றுப்போய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இசுலாமியர் வருகைக்குப் பிறகு இந்த மாறுதல் உண்டாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3] மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்றும் சங்கு வளையல்கள் பயன்பாட்டில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ கி.ஸ்ரீதரன் (2022-02-13). "சிறப்புமிக்க 'சங்கு வளையல்'". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-15.
- ↑ Din (2024-08-30). "வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-15.
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி, கொங்கு நாட்டு வரலாறு, 1978, பக்கம்: 158-159 [1]