சத்யஸ்ரீ சர்மிளா
சத்யஸ்ரீ சர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நயினார்கோவில் பகுதியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பரமக்குடியில் முடித்தவர்.
பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்யஸ்ரீ, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தவுடன், குடும்பத்தை விட்டு விலகி, செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் திருநங்கை சர்மிளா என்பவரின் ஆதரவில் வாழத்துவங்கினார். 2007ல் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்த சத்யஸ்ரீ சர்மிளா, 11 ஆண்டுகள் கழித்து 30 சூன் 2018 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் மன்றத்தில் தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுள்ளார்.[1][2][3]