சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். குறவஞ்சி என்பது பிற்காலத்தில் எழுந்த பல்வேறு வகைப்பட்ட பிரபந்தங்களில் ஒன்றாகும்.
இயற்றியவர்
தொகுஇதனை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் பெரும் புலவர் ஆவார். இவர் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
பாட்டுடைத்தலைவன்
தொகுசரபோஜி மன்னரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல், கற்போர் இலக்கியச் சுவை பெறும் வகையில் அமைந்துள்ளது. [1]
அமைப்பு
தொகுஇடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கொண்டு கீர்த்தன வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. எளிய நடையில் அமைந்த இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்ததால், இஃது ”அஷ்டக்கொடிக் குறவஞ்சி” என்றும் அழைக்கப்படுகிறது.[1]
நூலின் முதற் பகுதியில் சிறப்புப் பாயிரம், காப்புச் செய்யுள், கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை ஆகியன இடம்பெறுகின்றன.
பின்னர், பாட்டுடைத் தலைவராகிய சரபேந்திரர் உலா வருகின்றார். அவ்வுலாவைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த மதனவல்லி என்ற பெண் பார்க்கிறாள். தலைவர் மேல் காதல் கொள்கிறாள். உலா மதனவல்லியைக் கடந்து செல்கின்றது. மதனவல்லி காதல் துன்பத்தால் வருந்துகின்றாள். தன் காதலைத் தெரிவித்துத் தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகின்றாள். அப்போது குறத்தி வருகின்றாள். குறத்தியை அழைத்துத் தலைவி குறி கேட்கின்றாள். அப்போது குறத்தியைத் தேடி அவள் கணவன் ஆகிய சிங்கன் என்பவன் வருகின்றான். அவன் குறத்தியைக் காணாது வருந்துகின்றான். இறுதியில் குறத்தியைத் தேடிக் கண்டுபிடிக்கின்றான். மகிழ்ச்சி அடைகின்றான். இறுதியில் மங்களம் என்ற பகுதி இடம்பெறுகின்றது.
சிறப்பு
தொகுகுறவஞ்சி இலக்கியங்களுள் குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாகக் கருதப்படுகிறது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். இது நாடகத் தமிழ் வகையைச் சேர்ந்தது என்பதால், அவ்வச்சாதியார், இடம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேசும் முறையில் சில சொற்களும், சொற்றொடர்களும் மரூஉ மொழிகளாகவும், கொச்சை மொழிகளாகவும், காணப்படுகின்றன. வதைக்குது, உதைக்குது, இருக்குது, பதறுதடி, கட்டலையோ, குத்தலையோ, வருகுது, நாலுகால், நாப்புக்காட்டி, பெருகுது, கேளடையே, தேடலை என்பன அவற்றுள் சிலவாகும்.[1]