சாவித்திரிபாய் புலே

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
(சாவித்ரிபாய் புலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே
சாவித்திரிபாய் புலே, ஜோதிராவ் புலே இருவரின் சிலை-பூனா
பிறப்புசனவரி 3, 1831
இறப்புமார்ச்சு 10, 1897(1897-03-10) (அகவை 66)

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.[3][4]

வாழ்க்கை தொகு

இவர் 1831 இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[5] அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.[6]

கல்விப் பணிகள் தொகு

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், தலித் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப் பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள் தொகு

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

இறப்பு தொகு

1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இறந்தார்.[7]

கவிதை நூல் தொகு

1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

சிறப்பு தொகு

 
சாவித்திரிபாய் புலே நினைவு அஞ்சற்தலை

பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயின் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள் தொகு

  1. http://archives.peoplesdemocracy.in/2014/0112_pd/01122014_mariam.html
  2. Mariam Dhawale. "AIDWA Observes Savitribai Phule Birth Anniversary". பார்க்கப்பட்ட நாள் 3 March 2014.
  3. "Google doodle pays tribute to social reformer Savitribai Phule". The Hindu. 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. "Savitribai Phule, Google Doodle Tribute To Social Reformer". NDTV.com. 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
  5. Wayne, Tiffany K., ed. (2011). Feminist Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. ABC-CLIO. p. 243. ISBN 978-0-31334-581-4.
  6. O'Hanlon, Rosalind (2002). Caste, Conflict and Ideology: Mahatma Jotirao Phule and Low Caste Protest in Nineteenth-Century Western India (Revised ed.). Cambridge University Press. p. 135. ISBN 978-0-52152-308-0.
  7. Wayne, Tiffany K., தொகுப்பாசிரியர் (2011). Feminist Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. ABC-CLIO. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-31334-581-4. 
  8. Kothari, Vishwas (8 July 2014). "Pune university to be renamed after Savitribai Phule". Times of India. http://timesofindia.indiatimes.com/city/pune/Pune-university-to-be-renamed-after-Savitribai-Phule/articleshow/37989022.cms. பார்த்த நாள்: 10 July 2014. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரிபாய்_புலே&oldid=3824142" இலிருந்து மீள்விக்கப்பட்டது