சா. தருமாம்பாள்

சா. தருமாம்பாள் (இயற்பெயர்: சரஸ்வதி, அக்டோபர் 1890-20 மே 1959) என்பவர் நீதிக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளராகவும், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். சமூகச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றில் நாட்டம் கொண்டு ஈடுபட்ட பெண்மணி ஆவார்.

இளமைக் காலம்தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டம், கருந்திட்டைக்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார் மற்றும் பாப்பம்மாள் இணையருக்கு மகளாக 1890ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் திருவையாறில் பிறந்தார். இளமையிலேயே தாய் தந்தையை இழந்தவரை இலக்குமி என்பவர் வளர்த்தார். இவர் நாடகத்தில் ஈடுபாடும் நாட்டமும் கொண்டவர். எனவே சிறந்த நாடக நடிகரான குடியேற்றம் முனுசாமி நாயுடு என்பவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். தனி முயற்சியினால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். அவையன்றி ஆங்கிலம், மலையாளம் மொழிகளிலும் பேசக் கற்றுக் கொண்டார். பின்னர் சித்த மருத்துவத்தைப் பயின்று மருத்துவர் ஆனார். மருத்துவப் பணியோடு ஏழை மக்களுக்கும் உதவிகள் பல செய்தார்.

பொதுப் பணிகள்தொகு

வாழ வழி தெரியாமல் வாடிய பெண்களுக்கு வேலைகள் பெற்றுத் தந்தார். கல்வி கற்கவும் கற்ற பின் நல்ல வேலைகள் பெறவும் ஏழைகளுக்கு உதவி செய்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். சாதி மறுப்புத் திருமணங்களும் செய்து வைத்தார்.

பெண்கள் மாநாடுதொகு

மறைமலை அடிகளின் மகளான தி. நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னையில் 1938- நவம்பர் 13 இல் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராக தருமாம்பாள் இருந்தார். அம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஈ. வெ. இராமசாமிக்குப் பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தொகு

1938இல் கட்டாய இந்தியைத் தமிழ் நாட்டு அரசு கொண்டு வந்த நிலையில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அதைக் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தருமாம்பாள் தலைமையில் பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்; போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பட்டு அம்மாள், தருமாம்பாள் மருமகள் சீதம்மாள் (தன் குழந்தைகளான 3 வயது நச்சினார்க்கினியன், 1 வயது மங்கயற்கரசி) ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றார். இந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வந்த 100 பேர் கொண்ட தமிழர் படையைச் சென்னையில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வரவேற்றார்.

நீதிக்கட்சி ஈடுபாடுதொகு

தஞ்சை மாவட்டத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தலைமைப் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்த நிலையில் தருமாம்பாள் ஈடுபட்டு பட்டுக்கோட்டை அழகிரிசாமி துணையுடன் சமாதானம் பேசி நீதிக் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுத்தார்.

இல்லத்தை கொடையாக அளித்தல்தொகு

தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு கொடையாக அளித்தார்.[1]

நினைவு கூர்தல்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. மரு. க. சோமாஸ்கந்தன் (ஆகத்து 2018). "வீரத் தமிழன்னை டாக்டர் எஸ். தருமாம்பாள்". சிந்தனையாளன். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._தருமாம்பாள்&oldid=2984382" இருந்து மீள்விக்கப்பட்டது