சித்ரமுத்து அடிகள்


சித்ரமுத்து அடிகள் (தவத்திரு சித்ரமுத்து அடிகளார்) சேதுநாட்டுச் சித்தர்களுள் ஒருவராகக் கருதிப் போற்றப் பெறுகிறார். இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் [[தொடர்பிழந்த இணைப்பு] சுபாஷ் சந்திரபோஸின்] தலைமையில் அமைந்த இந்திய தேசியப் இராணுவத்தில் (Indian National Army - INA) பணியாற்றிய விடுதலை வீரருமாவார். தவவாழ்வையும் யோகவாழ்வையும் மக்களுக்கு உபதேசிப்பதற்காகத் தோன்றியவர் என்று சீடர்கள் இவரை வழிபடுகின்றனர்.

தோற்றம் தொகு

இவர் 1900 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மானாங்குடி என்னும் கிரமத்தில் தனுக்கோடி கருப்பாயி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். சார்வாரி வருடத்துச் சித்திரை மாதத்தில் பிறந்ததனாலும் இவர் பிறந்த காலத்தில் ஊரிலுள்ள குடிசைகள் பற்றி எரிந்ததாலும் இவருக்குச் சித்திரைச் சுழியன் என்ற பெயர் ஊரார் இட்ட பட்டப்பெயராக அமைந்தது. ஆனால் இவருடைய தாயார் இவருக்குச் சித்ரமுத்து என்றே பெயரிட்டு அழைத்தார்.

இளம்பருவமும் கல்வியும் தொகு

இவரது இளம்பருவத்திலேயே தாயை இழந்த அவரைப் பாட்டி பாலூட்டி வளர்த்தார். பின்னர் பாட்டியும் உயிரிழந்தார். அதே பருவத்தில் பல சித்து அற்புதங்களைத் தரிசிக்கும் பேறு இவருக்குக் கிடைத்தது. அதனால் இளவயதிலேயே பாடல் இயற்றும் ஆற்றலும் பெற்றார். இவர்தம் ஏழாவது வயதில் தில்லாங்குண்டு எனும் கிராமத்தில் கிடுகு முடைந்து வாழ்ந்திருக்கிறார். பின்னர் முடிவீரன் பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அடிப்படைக் கல்வி கற்றிருக்கிறார். ஆனால் அந்தக் கல்வியும் இவரது சிற்றன்னையாரின் கொடுமையால் பாதியோடு நின்று போனது. அதனைத் தொடர்ந்து அத்தியூத்து என்னும் கிராமத்தில் உள்ள கள்ளுக்கடையில் மதுபானக் குடம் சுமக்கும் பணியைச் செய்து வந்தார். வயது வளர்ந்த வேளையில் பனைமரத்தில் ஏறிப் பழகிப் பதனீர் இறக்கவும் கற்றுக் கொண்டார். வறுமையும் பசியுமாகவே இவருடைய இளமைக்காலம் கழிந்தது.

அயல்நாட்டுப் பயணம் தொகு

சித்ரமுத்து அடிகள் இளவயதில் பல குறும்புகளைச் செய்திருக்கிறார். இதனைக் கண்ட ஊரார் அவருக்குத் திருமணம் செய்வித்தால் திருந்த வாய்ப்புண்டு எனக் கருதி அவருடைய தாய்மாமன் மகளாகிய ஆராயம்மாள் என்பவரைப் பேசி முடிக்கக் கருதினர். ஆனால் இவரது வறுமையையும் வாலிபச் சேட்டைகளையும் நன்கறிந்த அந்தக் குடும்பத்தார் பெண்தர மறுத்து விட்டனர். அதன்பின்னர் இரண்டு ஆண்டு காலம் மரிக்கோவில் என்னும் ஊரில் மரமேறித் தனது வாழ்க்கையைத் தொடந்தார். இந்தத் தருணத்தில் 1922ஆம் ஆண்டில் இவரது அக்காள் கணவர் இவரை மலேசிய நாட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கோலக்கங்சார் என்னும் நகரத்தில் தொழில் செய்து செல்வம் சேர்த்தார்.

திருமணம் தொகு

1928ஆம் ஆண்டு பத்துரூபாய் செல்வம் சேர்த்துத் தாய்நாடு திரும்பிய சித்ரமுத்து அடிகள் பகட்டான வாழ்க்கையைத் தொடங்கினார். குறிப்பாகத் தனக்குப் பெண் தருவதற்கு உறவினர்களைத் தூண்டுவதற்காக இந்த வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டார். ஆனாலும் இவரது நிலையைக் கண்ட பலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அவ்வேளையில் அதே ஊரைச் சேர்ந்த காளையப்பர் என்பவர் தனது நான்கு மகள்களில் இளையவராகிய சிவாகமி அம்மை என்பவரை 1929ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.

இல்லற வாழ்வு தொகு

திருணம் முடிந்தும் வாலிபச் சேட்டைகள் குறையாதவராகவே சித்ரமுத்து அடிகள் விளங்கினார். உள்ளூர் மதுபானக் கடையில் திருடியும் மாமிச உணவு உட்கொள்ளப் பெருஞ்செலவு செய்தும் இலாகிரி வகைகளை உட்கொண்டும் மனைவியைத் துன்புறுத்தியும் பொழுதைக் கழித்து வந்தார். இந்தக் காலத்தில் அவருக்கு ஆண்குழந்தையொன்று பிறந்து மூன்றே நாட்களில் இறந்து போயிற்று. வறுமையும் கொடுமையும் வாழ்க்கையில் அதிகமாயிற்று. கடன்பெற்று உண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார். அழகன்குளத்தில் உள்ள அய்யாவு என்பவரிடத்தில் 100 ரூபாய் வட்டிக்குக் கடன் பெற்று வாழ்வைக் கழித்து வந்தார்.

இந்திய தேசப் படையில் சேர்தல் தொகு

வறுமையிலிருந்து தப்பிக்க எண்ணிச் சித்ரமுத்து அடிகள் மீண்டும் மலேசிய நாட்டிக்குப் பயணம் மேற்கொண்டார். தைப்பிங் என்னும் நகரத்தில் ஸ்ரீ பன்ரோட்டில் 22ஆம் எண் வீட்டில் தங்கி பனைமரமேறிப் பொருளீட்டி வாழ்ந்தார். இக்காலத்தில் அந்நகரத்தில் வசித்து வந்த சிங்கப்பூர்த் தமிழ்ப்பாடசாலைப் போதகராகிய இருசப்பர் என்பவரோடு நட்பு ஏற்பட்டது. தென்காசி ரங்கூன் சடகோப ஆச்சாரியின் பிரதம சீடராவார்.

வித்தைப் பயிற்சியும் தீக்கை பெறுதலும் தொகு

இருசப்பர் பல வித்தைகளிலும் கைதேர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்து சித்ரமுத்து அடிகள் நட்சத்திர காண்டம் முதல், சாமுத்திரிகா லட்சணங்கள் வரையிலும் பல வித்தைகளை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். அதனோடு சோதிட வித்தையையும் முமுமையாகக் கற்றுக் கொண்டார். அதே வேளையில் முக்காலமும் உணர்ந்தவராகப் போற்றப் பெற்ற ஸ்ரீசெகந்நாத சுவாமிகளைக் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து திருவருட் தீக்கை பெற்று வாழ்வியல் உண்மைகளை முற்றுணர்ந்தார். தம் வாழ்வில் பல இக்கட்டான சூழல்கள் வரவிருப்பதைத் தான் கற்ற சோதிடக் கலையின் மூலம் முன்கூட்டியே அறிந்து தாய்நாட்டிற்குத் திரும்பினார்.

மக்கட்பேறும் துன்பங்களும் தொகு

தாய்நாட்டிற்குத் திரும்பிய பொழுதில் இவருக்கு ஆண்குழந்தையொன்று பிறந்தது. இந்தக் காலத்தில் சித்ரமுத்து அடிகள் சிற்றின்ப நாட்டங்களிலிருந்து விலகிப் பேரின்பப் பெருவாழ்வுக்குத் தலைப்படத் தொடங்கினார். ஆனால் இறைவனின் சோதனையினால் கண்பார்வை பறிபோயிற்று. கையில் தடியைக் கொண்டு தடவித் திரியவேண்டியதாயிற்று. இதனால் அவருடைய மனைவியாரும், குழந்தையும் மற்ற உறவினர்களும் இவருக்கு உணவும் நீரும் தரமறுத்து வெறுத்து ஒதுக்கும் சூழல் நேர்ந்தது. தனக்கேற்பட்ட கொடுந்துன்பங்களைக் கண்டு பொறுக்க இயலாத நெஞ்சம் கொண்ட சித்ரமுத்து அடிகள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறி இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று கருதி தனது உறவினராகிய உலகாயம்மாளிடம் இரண்டு ரூபாய் கடன் பெற்றுச் சென்றார். வாலாந்தராவை என்னும் இரயில் நிலையத்திற்குச் சென்று நண்பர் ஒருவரின் உதவியால் இராமநாதபுரத்திற்குப் பயணச் சீட்டுப் பெற்று அங்கு அமர்ந்திருந்தார். சென்னை செல்லும் தனுக்கோடி எக்சுபிரசு வண்டியில் ஏறி இராமநாதபுரம் சென்றார். அன்றிரவு முழுவதும் இரயில் நிலையத்திலேயே கழிக்க முடிவு செய்தார். அந்தச் சூழலில் பெண்ணொருவர் இவரைத் திருடன் என்று கருதிக் கூச்சலிட மக்கள் சூழ்ந்து அவரைத் தாக்க முற்பட்டனர். அந்த நேரத்தில் அவ்வூரைச் சேர்ந்த கிராமமுன்சீப் சுப்பையா என்பவர் சித்ரமுத்து அடிகளைக் காத்துத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தெருவாயிலில் அமரவைத்தார். அவர் உள்சென்றதும் பசி தாளாது போவோர் வருவோரிடம் தனக்கு உணவு தருமாறு இரந்து கூவினார் சித்ரமுத்து அடிகள். ஒரு பெண் மண் கலயத்தில் சிறிது உணவு கொண்டு வந்து கொடுக்க அதனை உண்டு விட்டு உடனே அவ்விடத்திலிருந்து புறப்பட்டார். கண்கள் தெரியாமல் எங்கு செல்வது எனத் தெரியாமல் திரிந்தலைந்த சித்ரமுத்து அடிகளைப் பலவிடங்களில் தேடியும் காணாமல் கிராமமுன்சீப் அவரைக் கண்டுபிடித்து அழைத்து வர ஆட்களை அனுப்பினார். அந்த ஆட்கள் அவரை முன்சீப்பிடம் அழைத்துச் சென்றனர்.

துன்பங்கள் தீர்தல் தொகு

கிராமமுன்சீப் ஒரு பெரியவரிடம் சித்ரமுத்து அடிகளை ஒப்படைத்து அவருடைய கண்பார்வையைச் சரிசெய்யும்படி ஆணையிட்டார். அந்தப் பெரியவரும் சிலநாட்கள் பச்சிலை மூலிகைகளைக் கசக்கிப் பிழிந்து உணவு தந்து ஆதரித்தார். பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட சித்ரமுத்து அடிகள் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அங்கும் அவரை வெறுக்கவே மனம் வெதும்பி அழகன்குளம் என்னும் இடத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்குத் திடீரெனக் கண்கள் ஒளிபெற்றுப் பிரகாசித்தன. அத்துடன் அவரைப் பற்றியிருந்த துன்பங்கள் யாவும் நீங்கின.

இந்திய தேசியப் படையில் சேர்தல் தொகு

சித்ரமுத்து அடிகள் தான் முன்பு அடகு வைத்திருந்த தனது குடும்பச் சொத்துகளையெல்லாம் விற்று அதன்மூலமாகக் கிடைத்த பொருளைக் கொண்டு மீண்டும் அயலகத்திற்குப் பயணம் மேற்கொண்டார். 1940ஆம் ஆண்டில் காயாசம் என்னும் துவறாடை பூண்டு சன்னியாச ஒழுக்கத்தை மேற்கொண்டார். பணத்தைக் கரத்தால் தொடமாட்டேன் என்று சபதம் செய்ததோடு தன்னலத் தொழில்களில் ஈடுபட மறுத்துத் தேசசேவையைப் பெரிதெனப் போற்றி நேதாஜி சுபாசு சந்திரபோசுவின் இந்திய தேசியப் படையில் பணியாற்றத் தொடங்கினார். தாய்நாடு திரும்புதல் 1947-ஆம் ஆண்டு தன்னுடைய மாணவர்களின் துணையோடு மீண்டும் தாய்நாடு திரும்பினார். முன்னர் மறுத்து மனைவியும் குழந்தையும் இப்போது அவரை அன்போடு வரவேற்றனர். அவர்களையும் தன்னுடைய தவநெறிக்கு அறிமுகப்படுத்திப் பனைக்குளம் என்ற ஊரில் அருளொளி மடம் என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து இறைப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

உபதேசம் அருளல் தொகு

தான் கண்ட உண்மைகளை யாவரும் பெற்று உய்ய வேண்டும் என்று கருதிய சித்ரமுத்து அடிகள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று சீவகாருண்ய ஒழுக்கத்தையும், சன்மார்க்க போதனைளையும் அருளத் தொடங்கினார். பல அறிஞர்களோடு உறுதுணையாக்கிக் கொண்டு ஆன்மப் பரிசோதனைகளையும் நிகழ்த்தி வந்தார். ஆனால் இவற்றிலெல்லாம் அவருக்குப் பெருவெற்றி கிட்டவில்லை. தவவாழ்வு மேற்கொள்ளுதல் தான் உணர்த்தும் அருளுரைகளைச் செவிமடுக்க மக்கள் விரும்பவில்லை என்று அறிந்ததும் சித்ரமுத்து அடிகள் மாற்று வழி தேடினார். சித்த உறுதியும் உடற்கலைகளும் புலனொடுக்கமும் ஒளிரும் அறிவும் இனிய புனித மொழிகளும் அறப்பணிகளும் மக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் எனக் கருதி மெய்யுபதேசம் என்னும் பெயரில் தவவாழ்வினை மேற்கொள்ளத் தொடங்கினார். அவ்வாழ்வியல் நெறிகளை நூல்வடிவிலும் அச்சிட்டு மக்களுக்குப் பயன்பாட்டிற்கு அளித்தார். இதற்கு வீர வைராக்கிய விரதம் என்றும் பெயருண்டு.

எதிர்ப்புகள் பெருகுதல் தொகு

சித்ரமுத்து அடிகளின் சன்மார்க்க – தவவாழ்வு பலருக்கு வெறுப்பைத் தந்தது. அதனால் அவர்கள் ஒன்று கூடி மக்களிடம் இவரைப் பற்றி இழிவாகப் பேசச் செய்தனர். அவருடைய அருளுரைகளை அச்சிடக் கூடாதென்றும் மக்களிடம் பரப்பக் கூடாதென்றும் தடைசெய்தனர். ஆனாலும் சித்ரமுத்து அடிகள் தனது இடைவிடாத முயற்சியால் மதுரை நகரிலிருந்து சில அறிஞர்களோடு வாதம் மேற்கொண்டு அவர்களை வென்று அவர்தம் ஆதரவு பெற்று சன்மார்க்க சபைத் தலைவர்களின் சிறப்புரைகள் பெற்றதோடு, அரசியல்வாதிகள், வழக்கறிஞர்களின் நன்மதிப்பினையும் பெற்றுத் தனது அனுபவ மொழிகளை நூலாக்கி மக்களிடையே பரவச் செய்தார்.

சித்ரமுத்து அடிகள் அருளிய நூல்கள் தொகு

தன் வாழ்வில் கண்ட உண்மைகளையும் தான் கற்ற மேன்மைகளையும் சித்ரமுத்து அடிகள் நூல்களாகப் படைத்தளித்தார். அவை,

  1. குருமதிமாலை
  2. திருப்புகழ் திரவியம்
  3. பேரின்பக் குறள்
  4. மௌனானந்த மொழிகள்
  5. மரண சிந்தனை
  6. ஞானபண்டிதன்
  7. நிறைநெறி மொழிகள்
  8. சீர்திருத்து மனிதா!
  9. கருணைக் கண்ணீர்
  10. கிருபைப் பிரகாசப் பொக்கிஷம்
  11. காந்திஜியின் திருவருட்புலம்பல்
  12. அருளொளிமலர்

போன்ற பல நூல்களையும் படைத்தளித்துள்ளார். இவருடைய படைப்புகள் மொத்தமாக அருளொளி என்னும் தலைப்பில் தொகுப்பப் பெற்றுள்ளன. அவற்றில் கூடுதலாக, அருளொளி கண்ட மக்களுக்கு அறிவுரை

  1. பிரார்த்தனைப் பாடல்கள்
  2. யோகாசன விளக்கம்
  3. மலைநாட்டின் சிறப்பு
  4. சுவாமிகளின் கடிதங்கள்
  5. மாணவர்கள் பாடிய துதிப்பாடல்கள்

ஆகியன இணைக்கப் பெற்றுள்ளன.

எதிர்ப்புகள் அகலுதல் தொகு

சித்ரமுத்து அடிகளின் அருளொளி வாழ்வுக்கு இடையூறாக நின்ற எதிர்ப்புச் சக்திகள் வலுவிழந்து மறையத் தொடங்கின. காலப்போக்கில் அத்தகைய எண்ணமுடையோர் இவரையே நாடிவந்து உபதேசிக்க வேண்டினார். பகைவருக்கும் அருளும் பண்புள்ளம் கொண்ட சித்ரமுத்து அடிகள் அவர்களை அரவணைத்துக் கொண்டார்.

ஞானசபைகளின் தோற்றம் தொகு

திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் தன்னுடைய கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு அருட்பிரகாச ஞானசபையை உருவாக்கியதைப் போலவே சித்ரமுத்து அடிகளும் அவர்தம் அடிச்சுவட்டில் வள்ளலார் வழியில் சீவகாருண்யம், சோதிவழிபாடு, அன்னதானம் முதலியவற்றை மேற்கொண்டு ஞானசபையைத் தோற்றுவித்தார். மதுரை, திருச்சி, கம்பளிக்காரன் குப்பம் (புதுச்சேரி அருகில் அமைந்துள்ளது) மலேசியா, பினாங்கு, இலங்கை ஆகிய இடங்களில் அருளொளி ஞான சபைகளை அமைத்து ஆன்மீகத் துறையில் பல புதிய தடங்களை ஏற்படுத்தினார். ஏழை எளிய மக்களின் மனத்தில் வீர ஞான உணர்வை வளர்க்கும் விதத்தில் அவை செம்பணியாற்றின. இவற்றின் தலைமை நிறுவனம் பனைக்குளத்தில் அமைந்துள்ளது. இது தாய்வீடு என்று அழைக்கப் பெறுகிறது. சித்ரமுத்து அடிகளின் இலட்சியம் ஊழின் காரணமாகத் தன் வாழ்வில் அடைந்த துன்பங்களையும் அவற்றிலிருந்து பெற்ற அ.னுபவங்களையும் கொண்டு அத்தகைய துன்பங்களை மற்றையோரைப் பற்றாதிருக்க வேண்டுவதும் அதற்காக மக்களை ஒருங்கு திரட்டி உழைப்பதுமே தன்னுடைய இலட்சியம் என்று அவர் குறித்துள்ளார்.

சித்ரமுத்து அடிகள் பரிபூரணம் தொகு

தன் வாழ்நாள் முழுவதும் இறைத்தேடலிலும் மக்கட்பணியிலும் அயராது பாடுபட்ட சித்ரமுத்து அடிகள் 05.03.1995 (பவ ஆண்டு மாசி மாதம் 21ஆம் நாள்) அன்று பரிபூரணம் அடைந்தார். இன்றும் அவருடைய கொள்கைகளையும் அருளுபதேசங்களையும் வாழ்வியல் நெறியாகக் கொண்டு அவர்தம் பக்தர்கள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.

சான்றாதாரம் தொகு

சித்ரமுத்து அடிகளின் அருளொளி நூல்தொகுப்பிலிருந்து சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரமுத்து_அடிகள்&oldid=3708910" இலிருந்து மீள்விக்கப்பட்டது