சிரிக்கும் புத்தர்

சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தன. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என்.டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு

தொகு

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஓர் அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். இதற்கு முன்னர் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்திய அணுமின் திட்டத்துக்கு தொழிற்நுட்ப ஆதரவளித்த போது, அந்த தொழில் நுட்பத்தை போர் காரணங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. அவற்றை அணுகுண்டு செய்வதற்கு பயன்படுத்துவது அந்த நிபந்தனைகளை மீறும் செயலாகும். எனவே அணுகுண்டு சோதனையை “அமைதியான அணுக்கரு வெடிப்பு” (Peaceful nuclear explosion) என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. மேலும் புத்தர் பிறந்த புத்த பூர்ணிமா தினத்தில் இவ்வெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டதால் இதனை சூசகமாக சிரிக்கும் புத்தர் என்றும் அழைத்து வந்தனர்.

இந்திய வல்லுனர்களின் குழு

தொகு

டாக்டர் ஹோமி சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை இரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது. இக்குழுவின் தலைவராக டாகடர் ராஜா ராமண்ணா செயல்பட்டார். இக்குழுவில் டாக்டர் பி. கே. ஐயங்கார், டாக்டர் ராஜகோபால சிதம்பரம், டாக்டர் நாகப்பட்டினம் சாம்பசிவ வேங்கடேசன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் வாமன் தத்தாத்த்ரேய பட்வர்தன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர். ஒட்டு மொத்தமாக 75 அறிவியலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் மட்டுமே இதில் குறைந்த அளவில் இத்திட்டத்தில் செயல் பட்டனர். இந்தக் காரணங்களால், இந்த திட்டத்தை இரகசியமாகவே வைத்து நிறைவேற்ற முடிந்தது.

வெடிப்பு

தொகு

அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்புக் கருவியின் அடிப்படையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அணு குண்டு சோதனைக்கான இக்கருவியை வடிவமைத்து வழங்கியது. சைரஸ் அணு உலையில் தயாரித்த ஆறு கிலோ புளுத்தோனியம் இந்தச் சோதனைக்காகப் பயன்பட்டது. மும்பை ட்றோம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தக் கருவி தயாரானது, பிறகு பொக்ரானுக்கு எடுத்துச் சென்றார்கள்.

1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பொக்ரான் சோதனைக் கிராமத்தில் 107 மீட்டர் ஆழத்தில் இக்கருவியை இறக்கி பரிசோதனையை மேற்கொண்டார்கள். இச்சோதனை மூலம் சுமார் 12 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிக்கை வெளிவந்தது, ஆனால் உண்மையில் 2 முதல் 20 கிலோ டன்கள் வரை ஆற்றல் வெளியிட்டிருக்கலாம் என்பது மற்றவர்களின் வாதம் ஆகும். இந்த அளவு இன்றும் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்து வருகிறது. கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது மே 18, 1974 அன்று, இந்தச்சோதனை நிறைவேறியது.

பின் விளைவுகள்

தொகு

இச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக ஹோமி சேத்னாவுக்கும், ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்மவிபூசன் விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.[2] இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து கனடா நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. ^ a b "India's Nuclear Weapons Program - Smiling Buddha: 1974". Nuclear Weapon Archive. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html.
  2. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html
  3. ^ Richelson, Jefferey T. (March 1999). Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran and North Korea. WW Norton. pp. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0393053838

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிக்கும்_புத்தர்&oldid=3762214" இலிருந்து மீள்விக்கப்பட்டது