== மினுக்கு வேசம் ==
உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர்.
== கதகளி நடிப்பு முறை ==
பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் மொழியாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதக்களி நடக்க இருப்பதை [[மத்தளம்]] முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும்.
கதக்களி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதக்களி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும்.
{{கேரளத்தில் கலைகள்}}
[[பகுப்பு:நடன வகைகள்]]
[[பகுப்பு:கேரளப் பண்பாடு]]
[[பகுப்பு:கேரளக் கலைகள்]]
|