கி. த. பச்சையப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கி.த.பச்சையப்பன் (23.10.1935 - 20.09.2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:50, 22 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கி.த.பச்சையப்பன் (23.10.1935 - 20.09.2018) , புதுவையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும் மூத்த தமிழறிஞரும் ஆவார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்திலும் [1], பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டவராவார். தமிழறிஞர், மொழிப் போராட்டத் தியாகி, ஈழத் தமிழ் உணர்வாளர், சென்னை ஆசிரியர் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் என தமிழுக்காக தன் வாழ்க்கையை தகவமைத்துக் கொண்ட புலவர் பச்சையப்பன், பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சுமார் 70 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனித்தமிழைப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்கள் நடத்தியும் பங்கேற்றும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்[2].

பிறப்பும் இளமைக்காலமும்

1935 ஆம் ஆண்டு புதுச்சேரி குயவர்பாளையத்தில் கி.தங்கவேல், தனம் அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடிக்கும் காலத்தில், பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியின் விடுதலைக்கான இயக்கத்தில் சேர்ந்தார்[3]. இதனால் அவரின் பள்ளி இறுதி வகுப்பு தடைபட்டது. தமிழகத்தின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பில் சேர்ந்தார். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட ஈடுபாடு காரணமாக இங்கும் படிப்பு தடைபட்டது. 1954 ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய தேசியக் கொடியை ஏற்றியதால், பிரெஞ்சு போலீஸால் தாக்கப்பட்டார் பச்சையப்பன். அதையொட்டி தமிழகப் பகுதியில் ஆறு மாதங்களுக்கும் மேல் தலைமறைவாக இருந்தார். பின்னர், திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் தமிழ் வித்துவான் படிப்பை முடித்தார்.

ஆசிரியப் பணி

சென்னையில் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய பச்சையப்பன், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியராக ஓய்வுபெற்றார். தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார்[4].

ஊடகவியல் பணி

அன்றாடச் செய்தியில் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில், புலவர் கி.த.பச்சையப்பனுக்கு முக்கிய பங்கு உண்டு. பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்கபடியாக, ‘தமிழ் ஓசை’ நாளேட்டில் மொழிநடை ஆசிரியராக பணிபுரிந்த இவர், மக்கள் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் தனித்தமிழ்ச் சொற்களை கொண்டு வந்த முயற்சியில் முக்கிய பங்கு வகித்தார். இதனையடுத்தே பெரும்பாலான நவீன ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளும் புழக்கத்தில் வந்தன. அதன் தாக்கத்தில் இன்றைய 24 மணி நேரத் தொலைக்காட்சிகளில் தனித்தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன.

தமிழ் பணிகள்

பச்சையப்பனார் சென்னை அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். ஊடகம் மற்றும் அச்சு துறையில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆதிக்கம் இருந்த போது தமிழ் மொழியையும் டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு வந்தார்[5][6]. தமிழைச் செம்மொழியாக அறிவிக்குமாறு டெல்லிக்கும் சென்று முழக்கமிட்டார். தமிழ்த் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தவராவார் [3].

போராட்ட வாழ்வு

பிரெஞ்சிந்திய விடுதலைப்போராட்டத்தின் போது புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று முழக்கமிட்ட இவர் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1999-ல் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார். பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாக தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய பா.ஜ.க. அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது[7].

மேற்கோள்கள்

  1. "கி.த.பச்சையப்பன்".
  2. [1]தமிழுக்கு தொண்டாற்றிய கி.த.பச்சையப்பன் காலமானார்
  3. 3.0 3.1 "முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்".
  4. https://tamil.samayam.com/latest-news/state-news/famous-tamil-scholar-pachchaiyappan-passesaway-chennai/articleshow/65886117.cms
  5. "தமிழுக்காக அரும்பாடுப்பட்ட தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மரணம்". https://tamil.samayam.com/latest-news/state-news/famous-tamil-scholar-pachchaiyappan-passesaway-chennai/articleshow/65886117.cms. 
  6. "தமிழறிஞர் பச்சையப்பன் மரணம்".
  7. https://www.vikatan.com/news/tamilnadu/137496-kithapachaiyappan-passesaway.html {{citation}}: External link in |title= (help) புலவர் கி.த.பச்சையப்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._த._பச்சையப்பன்&oldid=2580434" இலிருந்து மீள்விக்கப்பட்டது