பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

07:40, 21 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.