ஜேம்ஸ் ராம்ஸ்போதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{cleanup}} needed
No edit summary
வரிசை 5:
caption= |
dead=dead |
birth_date= தெரியாது21-03-1915|
birth_place= இங்கிலாந்து|
death_date= தெரியாது12-12-2004|
death_place= இங்கிலாந்து|
}}
 
சந்தசுவாமி என்ற தீட்சா நாமம் கொண்ட ஜேம்ஸ் றாம்ஸ்போதம் என்பவர் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளது உத்தமத் துறவுச் சீடர்களில் ஒருவராகும். தன்னை அறியும் ஆர்வத்தாலே (Urge for Self-Realization) யோகசுவாமிகளை அண்டி வந்து உயர் ஞான சாதனை பயின்று உயர்நிலை அடைந்த ஞானியாவார்.
யோகசுவாமிகள் தம்மைச் சத்தியதாகத்துடன் நாடி வந்த ஆங்கிலச் சீடருக்குச் சூட்டிய துறவுத் திருநாமமே சந்தசுவாமிகள் என்பது. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஜேம்ஸ் றாம்ஸ்போதம் என்பதாகும். இவரது தந்தையார் பிரித்தானியாவின் இறுதிக் கவர்ணர் ஜெனரலாக இலங்கையைப் பரிபாலித்த சோல்பரிப் பிரவு ஆவர். ஜேம்ஸ் றாம்ஸ்போதம் அவர்களிடம் சிறுவனாயிருக்கும் போதே உயர் குடிப் பிறந்தார்குரிய நற்பண்புகள் பரிமளிக்கலாயின. அவ்ர் மூதாதையர் காட்டி வைத்த மார்க்க வழியிற் செல்லும் விருப்புடையவராகவும் இருந்தார். அவரது பாடசாலைக்காலம் படிப்பிலும் விளையாட்டிலும் பண்பிலும் பலரும் மெச்சும் படியாயிருந்தது. அவரோர் கண்ணியம் மிக்க மனிதராகத் திகழ்வார் என அவரது குரவரெல்லாம் கணிப்பிட்டனர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
படிப்பில் படிப்படியாக வளர்ந்த அவரது உள்ளம் மெய்ப்பொருள் காணும் கல்வியையே நாடியது. அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பாடத்தைப் படிக்கத் தூண்டியது இந்நாட்டமேயாம். அவர் மெய்யியலில் முதுமாணிப் பட்டதாரியாகத் தேறினார். ஆயினும் அப்படிப்பு அவரது மெய்ப்பொருள் நாட்டத்துக்கு அத்துணை உதவி செய்யவில்லை. அவர் சிறிதுகாலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்குப் பயணம் செய்தார். இக் காலத்தில் ருஷ்யஞானி ஒருவர் காட்டிய வழியில் உண்மையை அறியப் பல்வேறு சாதனைகளில் ஈடுபட்டிருந்த ஜெர்மனிய ஆர்வலர் கூட்டமொன்றைச் சந்தித்தார். இக்கூட்டத்தாரோடு கூடி வாழுவதற்கும் இயலவில்லை. அவர் அந்தீயா என்னும் நங்கையை நேசித்துத் திருமணம் செய்தார். நங்கையும் நம்பியும் இன்பமாய் வாழ்ந்தனர். ஆயின் வெகு விரைவிலே அவ்வின்பம் துன்பத்தில் முடிவுற்றது. மனைவியார் மகப்பேற்று வேளையில் மரணித்தார். இம்மரணம் அவருக்கு ஒரு மரும அடியாக விழுந்தது. இம்மரும அடியின் அதிர்ச்சியினின்றும் அவர் சிறிது சிறிதாக விடுபடும் வேளையில் அவர்தம் உள்ளார்ந்த மெய்ப்பொருள் நாட்டம் தலையெடுக்கலாயிற்று. அன்பான அனையாளோடு கூடிவாழ்ந்த இன்பவாழ்வு கனவாய்க் கழிந்ததே! வாழ்க்கைக் கோலங்களெல்லாம் சோகமான கனவுதானோ! கனவெனில் கனவு காணாத நீண்ட விழிப்பு நிலை உளதே? அந்த விழிப்பு நிலையை அறிய விளைந்தார். அவருக்குப் பிரபுத்துவ வாழ்க்கைச் சௌகரியங்கள் ஆகிய யாவும் மனம் பற்றற்குரியனவாயிருக்கவில்லை. அவர் மனம் இந்தியாவை நாடியது. இந்தியாவில் புனிதத் தலங்கள் பலவற்றுக்குச் சென்றார். பெரியார் பலரைக் கண்டார். ஆனால் அவரது நாட்டம் நிறைவேறவில்லை. ஆயினும் தெய்வ மணம் கமழும் பாரதப்பண்பு அவர் நெஞ்சிற்கு இதம் அளித்தது. இந்த இதத்தின் பதிவாக அந்நாட்களில் பிரபலமாயிருந்த இரகுபதி ராகவ ராதாராம் என்னும் கீதம் அவருள்ளத்தில் உறைந்தது. பின்னாளில் செங்கலடி ஆச்சிரமத்திலே கொடிமல்லிகைப் பந்தரின் கீழ் இடப்பட்ட ஆசனத்தில் ஏகாந்தமாயமர்ந்திருக்கும் வேளைகளில் இக்கீதத்தை சந்த நயத்துடன் பாடி இன்புறுவார்.
இவரது தந்தையார் இலங்கையில் பிரித்தானியார் ஆட்சிக்காலத்தில் இறுதி ஆளுனராக இலங்கையைப் பரிபாலித்த சோல்பரிப் பிரவு (ஹேவால்ட் றாம்ஸ்போதம்) ஆவார். விஸ்கவுன்ற் சோல்பரி (Viscount Soulbury) என்பது சோல்பரிப் பிரபுவிற்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டமாகும். ஹேவால்ட் றாம்ஸ்போதம் என்பவருக்கும் டோறிஸ் டி ஸ்ரெயின் றாம்ஸ்போதம் என்பவருக்கும் 1915 ஆண்டு பங்குனி 21ஆம் நாள் அவர் இங்கிலாந்தில் பிறந்தார்.
 
==கல்வி==
அன்னையர் பலரிருப்பினும் ஒருவர்க்கு நற்றாய் ஒருவரேயன்றோ! அவ்வாறே மகான்கள் பலரிருப்பினும் சீடர்க்கு ஞானகுரு ஒருவரே. றாம்ஸ்போதம் அவர்களின் ஞான தேசிகர் இலங்கையில் இருந்தார். கொழும்புத் துறைக் குரு சீடனின் பக்குவகாலம் அறிந்து தம்மிடம் அவரை ஈர்த்தெடுக்கத் திருவுளம் பற்றினார். றாம்ஸ்போதம் அவர்கள் இலங்கை வந்தார் (1952). இலங்கையிலே புண்ணிய தலங்கள் பலவற்றுக்குப் பயணஞ் செய்தார். தென்திசையில் கதிர்காமம் சென்றார். வடக்கே செல்வச் சந்நிதிக்கும் வந்தார். சந்நிதியில் இரு வெள்ளைக்கார துறவியர் இருந்தனா. ஜெர்மன் சாமி எனவும், நரிக்குட்டிச் சாமி எனவும் வழங்கப்பெற்ற அவர்கள் புதிதாக வந்த தம்மினத்தவருடன் உறவு கொண்டாடியதியல்பே. அவ்விருவரும் ஏற்கனவே யோகசுவாமிகளைத் தரிசித்தவர்கள். அவர்கள் புதிய சகபாடியையும் யோகசுவாமிகளிடம் அழைத்துச் சென்றனர். ஜெர்மன் சுவாமி யோகசுவாமிகளிடம் றாம்ஸ்போதமவர்களைக் கவர்ணர் ஜெனரில் மகன் என அறிமுகம் செய்தார். சுவாமிகள் தம்முன் தாகமாய் வந்து நிற்கும் புத்தடியவரைப் பார்த்து “உனது கவர்னரும் நான்; ஜெனருலும் நான்” எனக் கூறினார். ‘நீ எனது ஆளுகைக்குட்பட்டவன். நான் உன்னைக் காத்தாள்வேன்’ என்ற இவ்வாசகப் பொருளை றாம்ஸ்போதம் அவர்கள் புரிந்து கொண்டார். தாம் தேடித்திரிந்த ஞானத் தந்தையாரைக் கண்டு கொண்டதான நிறைவு அவருக்கு ஏற்பட்டது. யோகசுவாமிகளிடம் றாம்ஸ்போதம் அவர்கள் அவ்வப்போது சென்று வந்தார். சுவாமிகள் அவருக்கு வேண்டுவனவற்றைத் தாராளமாக வழங்கினார். தம்மால் ஆளாக்கப்பட்ட மார்க்கண்டு சுவாமிகளுடன் சகவாசம் புரிதற் பொருட்டுக் கைதடி ஆச்சிரமத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் தியானஞ் செய்வதற்கு வாய்ப்பாகச் சிவதொண்டன் நிலையத்திலும் சேர்ந்தார். சிவதொண்டன் நிலையவாயிலில் நின்று செல்லத்துரை சுவாமிகளை அழைத்து “இவர் இங்கு இருக்கட்டும்; இவரை நாம் கவனமாக வளர்த்து ஆளாக்க வேண்டும்” எனக் கூறிச் சென்றார். சிவதொண்டன் நிலையத்திற்குத் தம் சகபாடியைச் சந்திப்பதற்காக ஜெர்மன்சாமி ஆகியோர் இடையிடையே வந்து சென்றனர். குருவைக் காட்டி வைத்த அவர்களிடம் றாம்ஸ்போதம் அவர்களும் மிக்க மரியாதையுடன் பழகினார். அவ்விருவரதும் கூட்டுறவு தம் ஞானப் புதல்வரின் வளர்ச்சிக்குத் தடையாகும் எனச் சுவாமிகளுக்குத் தெரிந்தது போலும், ஒரு நாள் நிலைய வாயிலில் நின்று செல்லத்துரை சுவாமிகளிடம் “அவர்கள் (பெயர் குறிப்பிட்டு) வருகின்றார்களா?” என வினாவினார். பின்னர் அவர்களை இங்கு விடப்படாது. இவர் உண்மையறியும் உண்மையான ஆர்வம் கொண்டவர். அவர்கள் சும்மா இருக்க முடியாமல் “ சும்மாயிரு என்று பச்சைகுத்தித் திரிபவர்கள்” எனக் கூறிச் சென்றார். இவ்வண்ணம் தம் சீடனின் வளர்ச்சிக்குச் சாதகமானவற்றை ஊட்டுவதிலும் பாதகமானவற்றைக் களைவதிலும் சுவாமிகள் விழிப்புடனிருந்தார். சீடரும் கொழும்புத்துறைக்கொட்டில், கைத்தடி ஆச்சிரமம், சிவதொண்டன் நிலையம், என்னும் தவச் சாலைகளில் இடையறாத நற்சிந்தனையினராய் வளர்ந்து வந்தார்.
 
==இலங்கைக்கான பயணம்==
றாம்ஸ்போதம் அவர்கள் யோகசுவாமிகள் அவ்வப்போது தமக்கீந்த வாக்கியப் பிரசாதங்களையெல்லாம் நெஞ்சிற் பதித்து அன்றன்றே தமது நினைவேட்டில் எழுதிச் சாதனை புரிந்து வந்தார். அவ்வாறு அவர் பேணிய நினைவேட்டின் முதன்மொழி “ஆதியில் அச்சொல் இருந்தது…..” எனத் தொடங்கும் விவிலிய வேத மொழியாகும். இது பற்றிப் பின்னர் செல்லத்துரை சுவாமிகளிடம் மேல்வருமாறு கூறினார். “அறிவறிந்த காலம் முதலாய் நாடோறும் அதனைச் சொல்லி வருகிறேன். ஆராதனைகளின் போது எத்தனையோ பாதிரிமார்களின் வாயின் மூலமும் கேட்டிருக்கிறேன். ஆனால் சுவாமிகளின் வாய்மொழியாகக் கேட்ட அப்பொழுதிலேயே இதன் பொருள் எனக்குப் புரிந்தது”. சுவாமிகள் இவ்வாசகப் பொருளாயிருந்தமையாலும், இப்பொருள் பண்படுத்தப்பட்ட நிலம் போன்ற சீடரின் உள்ளத்தில் பதியவேண்டும் என்ற அருட்பெருக்காற் சொல்லினராதலாலும் அச்சொற் பொருள் சீடருக்கு விளக்கமாகியது. அவரது நினைவேட்டில் அடுத்துள்ள மொழிகள் தேகம் பற்றியன. சுவாமிகள் சீடரின் தேகத்தைச் சீடரின் மனைவியாக உருவகித்துக் கூறினார். ஈதோர் அதிர்ச்சி வைத்தியம் போன்றதே. மனைவி இறந்தபோது நேர்ந்த சோகக் காயத்தின் தழும்பு இப்போது அவருக்குத் “தேகம் நானல்ல” என்னும் திடமருளும் மருந்தாயிற்று. இன்னோர் உவமானத்தில் தேகத்தை நீ அணியும் சட்டை” என மொழிந்தார். அவ்வப்போது மாற்றியும் கழித்தும்விடும் சட்டைகள் போன்றனவே தேகங்கள்; நானோ தேகத்தின் வேறுபட்ட தனிப்பொருள் எனச் சீடர் எண்ணலானார். தான் தேகத்திலும் வேறான தனிப் பொருளெனின் பொருளின் தன்மை என்ன? அத்தன்மையைத் தன்னிலே கண்டுகொள்ள இப்பொழுது சீடரால் இயலாது. ஆதலால் சுவாமிகள் தனது தானான தன்னையைச் சீடருக்கு எடுத்துக் கூறினார். தான் எல்லோரிடத்தும் வாழ்பவன். எல்லாருருவும் தன்னுரு. தான் அங்கும் இங்கும் எங்கும் உள்ளவன். அன்றும் இன்றும் என்றுமுள்ள நித்தியன் என்ற உண்மையை எடுத்துரைத்தார். சீடர் இவற்றுக்கான குறிப்புகளைச் சுவாமியிடம் கண்டு வியந்திருக்கின்றாராதலால் இவற்றை அவ்வாறே நம்பினார். சுவாமிகள் தன் உண்மைத் தன்மையைச் சீடர் நம்பச் செய்தபின் சீடரின் தன்மையையும் அதுவே என உபதேசித்தார். கதையில் வரும் சிங்கம் ஆட்டு மந்தையுடன் கூடித் தன்னை ஆடெனவே எண்ணியிருந்த தனது குட்டியின் பிடரியைப் பிடித்துத் தூக்கிச் சென்று ஒரு நீர்க்கரையில் விட்டு நிழலைக் காட்டி “நாம் இருவரும் ஒரே சாயலாயிருக்கிறௌமல்லவா?” எனக் கூறியது போலச் சீடரும், தானும் ஒரே தானான தன்மையினரே எனச் சுவாமிகள் விளக்கம் செய்தார். நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். உன்னிடத்தில் எல்லாம் உள்ளன. நீ தெய்வம் உன் கண் தெய்வம். இவ்வாறு ‘நீ அது’ என்ற உண்மையைச் சுவாமிகள் அவருக்கு எடுத்துரைத்தார்.
 
==கதிர்காம யாத்திரை==
தானான தன்மை தெய்வாம்சமானதெனின் நான் நீஇ அவன் அவள் அது, நன்மை தீமை, சுகம் துக்கம், மரணம் பிறப்பு என்பவற்றுக்கும் அத்தெய்வாம்சத்துக்குமுள்ள சம்பந்தம் என்ன? அச்சம்பந்தம் நீருக்கும் குமிழிக்கும், கடலுக்கும் அலைக்குமுள்ள சம்பந்தம் போன்றதெனச் சுவாமிகள் அவருக்குக் கூறினார். குமிழிகள் தோன்றி மறைகின்றன. அவற்றுக்கு ஆதாரமான நீர்நிலை அப்படியேயுள்ளது. அலைகள் தோன்றி மறைகின்றன. அலைகளுக்கு ஆதாரமான கடல் அவ்வாறே உள்ளது. நானும் நீயும் இயேசுவும், புத்தரும், மாணிக்கவாசகரும் கடலின் அலைகள் போலாவோம். அலைகள் கடலன்றி வேறன்று. நாமும் அதுவன்றி வேறன்று. இவ்வண்ணம் சுவாமிகள் மெய்ப்பொருளைச் சீடருக்குப் போதுமளவு எடுத்துரைத்தார்.
 
==குருவுடனான சந்திப்பு==
இம்மெய்ப்பொருளை அனுபவத்தில் கண்டு அவ்வனுபவ அறிவிலே நிலைத்து நிற்பதற்கான வழி யாது? அவ்வழியினையும் சுவாமிகள் காட்டி வைத்தார். சுவாமிகள் றாம்ஸ்போதம் அவர்களிடம் அவ்வறிவினைத் தேடி “ஆட்டுக்குட்டி போல் அங்குமிங்கும் அலையாதே” எனக் கூறினார். ஏனெனில் உன்னுள்ளேயுளது. “ பரலோக ராச்சியம் உன்னுள்ளேயுள்ளது” என்ற பையிள் வாக்கியத்தையும் அவருக்கு நினைவூட்டினார். உண்மையை அறிவதற்கு உண்ணாது உறங்காது திரிதல் வழியன்று என்று அவ்வழியினைத் தடை செய்தார். நீ மிதமாக உண், மிதமாக நித்திரை செய் எனக் கூறினார். வேலை செய்யாது சாமி வேடங்கொண்டு வீதியில் திரிபவர்கள் வழியையும் அவர் ஏழனம் செய்தார். நீ வேலை செய்ய வேண்டும். உனது தோள்வலுவுக்கு ஏற்ப நீ வேலை செய் எனக் கூறினார். உண்மையைத் தேடிப் புத்தகக் குப்பையைக் கிளறும் வழியை அவர் உகக்கவில்லை அதனைச் சாத்திரமருள் எனக் கண்டித்தார். உன் நெஞ்சப் புத்தகத்தைப் படி என்றார். இனத்தைச் சேராது தனித்துத் திரியும் காண்டா மிருகம் போலச் சனமருளில் அகப்படாதிருக்கும் படி கூறினார். ஒரு சொல்லால் பன்றியைக் கொன்ற பக்கிரியின் கதையைக் கூறி எல்லாம் சொற்படி வித்தை சித்தாட்டக்காரரில் மயங்காதே என எச்சரித்தார். உண்மை கூற முடியாதது. புத்தர் யேசு ஆகியோராலும் அதனைப் பூரணமாகக் கூற முடியவில்லை. ஆதலால் அவர்களையும் நம்பாதே என்னையும் நம்பாதே. உன்னையே நீ நம்பு, உன் உயர்நிலை உன்னை வழிப்படுத்துவதாக எனக் கூசாது கூறினார். “நான் அறிவேன்” என்ற முனைப்பால் ஒரு போதும் உண்மையை அறிய முடியாது. நேரடியாப் போரிட்டு அதனைக் கைப்பற்றிக் கொள்ள முடியாது. இயல்பான ஒப்படையே வேண்டுவது. “நீ பலமுறை முயன்று விழுந்தெழுந்தபின் இறைவா என்னால் ஏதும் பெற முடியவில்லையே நீயே இரங்கு என மன்றாடு. அப்பொழுது இறைவன் உன் அருகே வருவார். பாய்மரக்கப்பலின் கயிற்றை அவிழ்த்ததும் அது ஓடாது நிற்கும். அதுபோல் வேகங்கெட்டுச் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருக்கும் சாந்தமான மனத்திலே இறைவன் துலங்கித் தெரிவார். “தியானம் செய்வதும் ஒரு வேலை. சும்மா இரு” என்பதே சுவாமி அவருக்குக் காட்டிய வழி. அவருக்குத் தியானம் என்றால் என்ன என்பதை விளக்குமிடத்து “தியானம் என்பது எதனையும் எண்ணாதிருத்தல். அது சும்மா இருக்கும் நமது சுபாவத்தில் பொருந்தியிருத்தல்” எனவே சுவாமிகள் எடுத்துரைத்தார்.
 
==சிவதொண்டன் நிலையப் பணிகள்==
சுவாமிகள் கூறிய முதல் விவிலிய வாசகம் போலவே சுவாமிகள் அருளிய அமுத வாசகங்கள் முழுவதும் அவர்தம் சிந்தையில் மந்திரசக்தியுடன் பதிந்தன. அவை வெகுவிரைவில் அனுபவ அறிவாக மலரும் பக்குவம் முதிர்ந்தது. சுவாமிகள் தாம் திருவடிக்கலப்புறுதற்கு மூன்றுமாத காலத்துக்குள் (1963 – மார்கழித் திருவாதிரை) அவருக்குச் ‘சந்த சுவாமிகள்’ என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அது அவருள்ளே இசைக்கும் ஓம் இசை அமுதத்தின் மாசிலாச் சந்த நயத்தில் திளைத்து உபசாந்தத்தில் லயிக்கும் பெருநிலைக்கோர் அடையாளமாகச் சூட்டப்பட்ட ஒரு பெயர். அப்பெயருக்கு இலக்கிதமாக அவர் ஆயினார். சீவன் முத்தருட் சிலர் மௌனியாயிருப்பர். சிலர் இறைபணி செய்வர். மார்க்கண்டு சுவாமிகள் கைதடி ஆச்சிரமத்தில் மௌனியாயிருந்தார். செல்லத்துரை சுவாமிகள் சிவதொண்டன் நிலையத்திலிருந்து சிவதொண்டு புரிந்தார். சந்தசுவாமிகள் தகதக என்று அழலாய் எரியும் தேகத்தினர். அவர் அத்தேகத்துடனிருக்கும் பொழுது வேலை செய்தாக வேண்டும். அன்றியும் மனித சேவையை முக்கிய அம்சமாகக் கொள்ளும் சமயப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் அவர். இவற்றால் தொண்டு செய்யும் உணர்ச்சியுடையவராயிருந்தார். ஆதலால் சுவாமிகள் அவரைத் தொண்டிற் பூட்டத் திருவுளப்படி அவர் திருவடிக் கலப்பற்ற அதே திங்களில் கிழக்கு மாகாணத்துச் சித்தாண்டி செங்கலடியில் ஒரு சிவதொண்டன் நிலையம் கால் கொண்டது. இச் சிவதொண்டன் நிலையத்திலிருந்து சிவதொண்டு புரியும் பொறுப்பை சந்தசுவாமிகள் குருவாணையாக ஏற்றார். யாழ் சிவதொண்டன் நிலையத்திற் போன்றே மட்/சிவதொண்டன் நிலையத்திலும் பூசை விழாக்கள் அமைந்தன. இவற்றைச் சிவதொண்டன் சோதி பெருகும் வகையில் சந்தசுவாமி நடத்தினார். நிலையத்துக்கென ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பான வளவயல் இருந்தது. அவ்வயலில் பூமாதேவியின் வளத்தை உறிஞ்சாத வகையில் சுறுசுறுப்பாகப் பணி முயன்று விளைவினைப் பெற்றார். விளைவினை ‘வேளாண்மை’ என்பதன் பொருளுக்கேற்ப உலகோபகாரமாகப் பயன்படுத்தினார். நிலையத்தை ஒட்டிய அயற்கிராமங்களில் மார்கழி மாதத்தில் கடும் பஞ்சம் நிலவும். இப்பஞ்சகாலத்தில் ஆச்சிரமத்து நெற்களஞ்சியத்திலிருந்து ‘நெல்’ அளித்தார். திங்கள் தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழும் யாகத்தைப் பெரியதொரு அன்னதானத்துடன் செய்தார். இவ்வாறான பலரும் அறிந்த அவர்தம்பணிகளுக்கு அப்பால் அவர் இறைகளோடிசைந்த இன்பத்தில் திளைப்பவராயிருந்தார். அகத்தெழும் மாசிலோசை கேட்டு அகமலர்பவராயிருந்தார். இவ்வகமலர்ச்சியின் விளக்கமாக இருந்த சிவயோக சுவாமிகளது திருவாய் மொழிகளைச் சிந்தை செய்வதில் இன்பம் பண்டார். அவர் “நற்சிந்தனைப்பேழை” யாக இருந்த மார்க்கண்டு சுவாமிகளுடன் சகவாசம் செய்திருந்த காலத்தும் சிவதொண்டன் நிலையத்தில் தவம் மேற்கொண்ட காலத்தும், சுவாமிகளின் திருவாய் மொழிகள் யாவற்றையும் நயந்து அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். நற்சிந்தனைகளுட் பல ஏற்கனவே ஆங்கில வடிவினைப்பெற்றிருந்தன. ஏனையவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கிலச் செய்யுள்களின் யாப்பமைதி பற்றிய புலமை இருந்தாலும், ஆங்கிலத்திலுள்ள மறைஞானப் பாடல்களின் கலை அழகில் ஈடுபட்டவராதலும், அவ்வப்போது சுவாமிகளது அணுக்கத் தொண்டர்களது ஆலோசனைகளைப் பெற்றவராதலாலும், ‘நற்சிந்தனை’ களைச் செம்மையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவற்றைக் தன்னொத்த வெளிநாட்டலரும் படித்துப் பயன்பெற வேண்டுமாதலால் சைவபாரம்பரியம், வேதாந்த சித்தாந்த தத்துவம், யோக நுட்பம் ஆகியன பற்றிய வேண்டும் குறிப்புகளை வேண்டும் இடங்களில் குறித்து வைத்ததுடன் விரிவானதோர் முன்னுரையும் எழுதியமைத்தார். செய்வன எல்லாம் செவ்வனே செய்யும் பண்பாடு முதிர்ந்தவராதலாலே சிவதொண்டன் வெளியீடான NATCHINTHANAI ஆங்கில நூல் பலரும் போற்றும் படியாயமைந்தது. WORDS OF OUR MASTER என்னும் நூலில் அவர்பணி மேலும் மகத்துவம் பொருந்தியிருந்தது. தமக்குச் சுவாமிகள் சொன்ன அருள் மொழிகளை அவர் பக்குவமாகப் பேணிவந்தார். அவற்றின் அருமை தெரிந்தவராதலால் மார்க்கண்டு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள், சிறிகாந்தா என்போர் பேணிவந்த அருள் மொழிகளையும், அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியன போகத் தமிழில் குறித்து வைத்துள்ளவற்றை அவர்களது உதவியுடனே ஆங்கிலத்தில் பெயர்த்தமைத்தார். இவற்றையெல்லாம் பலமுறை செம்மைசெய்து சுவாமிகளது பிறந்ததின நூற்றாண்டு விழாவின்போது (1972) நினைவு நூலாக வெளியிடுதற்கு ஆயத்தமாக வைத்தார். இந்நூலைப் பொருளமைதிப்கேற்பத் தொகுத்து வெளியிடுவதற்கான ஆயத்தத்தையும் அவர் செய்தவரெனத் தெரிகிறது. சுவாமிகளது திருநூல்கள் தமிழிற் செம்மையாக வருவதற்குச் செல்லத்துரை சுவாமிகளுக்கும், ஆங்கிலத்தில் செம்மையாக வருவதற்கு சந்தசுவாமிகளும் சிவதொண்டர் பலருடன் முன்னின்றுழைத்த பணி மகத்தானது.
 
==வெளியிட்ட புத்தகங்கள்==
சந்தசுவாமிகள் 1977ம் ஆண்டுவரை சிவதொண்டன் நிலையப் பணியைச் சுறுசுறுப்புடன் செய்தார். அப்பால் அவர் அகம் சும்மாயிருக்கும் சுகத்தையே பெரிதும் விழைந்தது. மேற்கொண்டு தொண்டிற் பூண்டு கிடக்க அவரால் இயலாததாயிற்று. கைதடி ஆச்சிரமத்துக்கு வந்து மார்க்கண்டு சுவாமிகளுடன் சும்மா இருக்கும் சுகத்தில் இலயித்தார். மார்க்கண்டு சுவாமிகள் திருவடிக் கலப்பை அண்மித்த வேளையில் இங்கிலாந்து திரும்பினார். (1984) இங்கிலாந்திலே “வின்செஸ்ரர்” என்னும் இடத்திலுள்ள தம் மூதாiர்யர் காணியில் ஓர் ஆச்சிரமம் அமைத்து அவ்வாச்சிரமத்தில் குருபரன் நினைவுடன் உறைந்தார். அவரது அகம் சும்மா இருக்கும் சுகத்தில் இருந்து வெளிப்பட்ட போதெல்லாம் சுவாமிகளது அருள்மொழிகளையே வளைய வளைய வந்தது. உண்மையை நாடும் உலகோர்க்கெல்லாம் உபகாரமாயிருத்தற் பொருட்டு WORDS OF OUR MASTER ல் இருந்து POSITIVE THOUGHTS OF DAILY MEDIATION என்னும் நூலை வெளியிட்டார். குருபரன் நினைவிலேயே இலயித்திருந்த அவர் 02-12-2004 கார்த்திகை மூலநாள் அன்று குருபதம் அடைந்தார். போத குருவை நாதங்கடந்த ஞான வெளியிடைக் கண்டு பேதமின்றிப் பிறப்பற்றார். அவரது விருப்பப்படி அவர்தம் தேகம் அக்கினிப் பிரவேசமாயது. அஸ்தி தேம்ஸ் நதியில் கலந்தது.
 
==சமாதி==
இச்சிற்றுரையிலே சந்த சுவாமிகள் பற்றிய இன்னும் சில விடயங்கள் விடுபட்டுவிட்டன. அவற்றுள் ஒன்றையேனும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமாகும். அதாவது சிவயோக சுவாமிகள் உலக நாடுகளுக்கான சிவதொண்டன் தூதுக்குழு ஒளன்றை 1962ம் ஆண்டு அனுப்பி வைத்தார். யோக சுவாமிகளின் ‘நற்சிந்தனை’ யை உலகுக்கு எடுத்துரைக்கும் அத்தூதுக் குழுவின் அருங்கலமாகச் சந்தசுவாமிகள் அமைந்தார் என்பதே அக்குறிப்பாகும்.
 
சந்தசுவாமிகள் சத்தியதாகம் கொண்டு மேற்குலகினின்றும் வந்து சுவாமிகளைச் சரணடைந்தார். சுவாமிகள் மாறாத ஞான பானத்தையூட்டி அவரை உபசாந்தராக்கினார். உபசாந்தசுகத்தில் இலயித்த அவர் சுவாமிகளின் திருவாய் மொழிகளையே நினைப்பற நினையும் பாக்கியரானார். உலகம் முழுவதுமுள்ள உண்மையுணரும் தாகம் கொண்டோர்க்கெல்லாம் வாய்க்கவேண்டும். என்னும் அருட்பெருக்கால் உலக மொழியாகிய ஆங்கிலத்தில் சுவாமிகளின் திருவாய் மொழிகளைச் செம்மையான நூலுருவாக்கினார். அவர் தம் வாழிவாலும் பணியாலும் ஓர் உலக குருவென்பதையும் அவர் தம் நற்சிந்தனை உண்மையறியும் நாட்டம் கொண்ட உலகமாந்தர் யாவர்க்கும் உகந்தது என்பதையும் உணர்த்தும் துருவநட்சத்திரமாகத் திகழ்கின்றார்.
 
குறிப்பு: இக்கட்டுரை ஸ்ரீமத் சந்தசுவாமிகள் என்னும் தலைப்பில் சிவதொண்டன் மாசிகையில் <ref>சிவதொண்டன் (2008) மலர் 72</ref>வெளியான கட்டுரையாகும். சிவதொண்டனின் அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 
==உசாத்துணை==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ராம்ஸ்போதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது