அங்கிதா ரெய்னா

இந்திய டென்னிசு வீராங்கனை

அங்கிதா ரவீந்தர்கிருசன் ரெய்னா (Ankita Ravinderkrishan Raina, பிறப்பு:11 சனவரி 1993) ஓர் இந்திய தொழில்முறை வரிப்பந்தாட்ட (டென்னிசு) வீராங்கனை ஆவார்.[1] இவர் 1993ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் நாளில் பிறந்தார்.[2] பெண்கள் வரிப்பந்தாட்ட சங்கம் நடத்தும் பெண்கள் வரிப்பந்தாட்ட சங்க 125கே இரட்டையர் போட்டியை இவர் வென்றுள்ளார். இதைத் தவிர பன்னாட்டு வரிப்பந்து கூட்டமைப்பு சுற்றுப் போட்டிகளில் 11 முறை ஒற்றையர் பிரிவு போட்டியையும் 18 முறை இரட்டையர் வரிப்பந்து பிரிவு போட்டிகளையும் இவர் வென்றுள்ளார்.

அங்கிதா ரெய்னா
டென்னிசு வீராங்கனை
குடியுரிமைஇந்தியர்
பதக்கத் தகவல்கள்
வரிப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஜகார்த்தா மகளிர் ஒற்றையர்

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கிதா முதல் முறையாக முதல் 200 ஒற்றையர் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தார். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[3][4] 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அங்கிதா பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியிலும் கலப்பு இரட்டையர் போட்டியிலும் விளையாடி தங்கப் பதக்கங்களை வென்றார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெட் கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய அங்கிதாவின் வெற்றி-தோல்வி விகிதம் 23–17 என்ற கணக்கில் உள்ளது.[5] 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பெட் கோப்பை போட்டியில் அங்கிதா சீன வீராங்கனை சூ லின்னையும் கசக்கிசுதானின் யூலியா புடின்ட்சேவாவையும் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

அங்கிதா ரெய்னா மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் ஒரு காசுமீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்தார். இவரது நடுத்தர வர்க்க இந்து குடும்பம் காசுமீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரத்திலிருந்து வந்த குடும்பமாகும். சம்மு-காசுமீரில் நடந்துகொண்டிருந்த கிளர்ச்சியின் காரணமாக, 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காசுமீர் இந்துக்கள் வெளியேற்றத்தின் போது இவரது குடும்பமும் காசுமீரை விட்டு வெளியேறியது.[6] அங்கிதா இந்தி, குசராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசும் வல்லமை கொண்டவராவார். அங்கிதா ரெய்னா பிரிகான் மகாராட்டிரா என்ற நிறுவனத்தில் படித்தார்.

தேசிய அளவு போட்டிகளில் அங்கிதா ரெய்னா தனது சொந்த மாநிலமான குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ரோசர் பெடரர், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்சு மற்றும் சானியா மிர்சா ஆகியோர் இவரது முன்மாதிரிகளாவர்.

ரெய்னா நான்கு வயதிலேயே தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அகாடமியில் விளையாடத் தொடங்கினார். மூத்த சகோதரர் அங்கூர் ரெய்னா ஏற்கனவே வலைப்பந்து விளையாடகூடியவர். தாயாரும் விளையாட்டு ஆர்வலராகவும் மற்றும் வலைப்பந்தாட்டம் விளையாடியவராகவும் இருந்தார். இதனால் தன் ஆரம்பகாலத்திலேயே அங்கிதாவுக்கு உத்வேகம் கிடைத்தது. அகில இந்திய வலைபந்தாட்ட சங்கம் நடத்திய திறமை வேட்டை போட்டியில் மகாராட்டிராவைச் சேர்ந்த 14 வயது வீரரை தோற்கடித்தபோது 8 வயது அங்கிதா ரெய்னா பரபரப்பாகப் பேசப்பட்டார். 2007ஆம் ஆண்டில் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல கூடுதல் பயிற்சியளிப்பது அவசியம் என்று முடிவு செய்த அங்கிதாவின் குடும்பம் புனேவுக்கு குடிபெயர்ந்தது. புனேவில் தனது பயிற்சியாளரான ஏமந்து பெந்துரேவை அங்கிதா சந்தித்தார். அவர் ரெய்னாவின் விளையாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

புனேவில் உள்ள பி.ஒய்.சி இந்து ஜிம்கானாவில் உள்ள ஏமந்து பெந்துரே டென்னிசு அகாடமியில் அங்கிதா பயிற்சி பெற்றார். இப்போது அர்ச்சுண் காதே பயிற்சியாளராக உள்ளார். பயிற்சியின் போது அவரே உடன் விளையாடும் ஆட்டக்காரருமாக உள்ளார்.[7][8]

தொழில்முறை சாதனைகள் தொகு

 
பிரெஞ்சு திறந்தநிலை போட்டியில் முதன் முறையாக அங்கிதா ரெய்னா
  • 2011ஆம் ஆண்டு பருவ போட்டிகளில் அங்கிதா இரட்டையர் பிரிவில் மூன்று போட்டிகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். ஐசுவர்யா அகர்வாலுடன் சேர்ந்து விளையாடிய ஓர் இரட்டையர் போட்டியை வென்றார்.
  • 2012ஆம் ஆண்டில் அங்கிதா தனது முதல் தொழில்முறை ஒற்றையர் பட்டத்தை புதுடெல்லியில் வென்றார். இதே ஆண்டில் இரட்டையர் பிரிவில் மேலும் மூன்று பட்டங்களை வென்றார்.
  • 2017 மும்பை திறந்தநிலை போட்டியில் இரண்டு போட்டிகளில் வென்று மிகப்பெரிய காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
  • ஏப்ரல் 2018இல் உலக தரவரிசையில் 197ஆவது இடத்தை எட்டினார். நிருபமா சஞ்சீவ், சானியா மிர்சா, சிகா உபெராய் மற்றும் சுனிதா ராவ் ஆகியோரைத் தொடர்ந்து தரவரிசையில் முதல் 200 பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இடம் பிடித்த ஐந்தாவது இந்திய தேசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே ஆண்டில் ஆகத்து மாதம் இந்தோனேசியாவின் தலைநகரம் சகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பதக்கம் வென்ற இந்தியப் பெண்கள் அங்கிதா ரெய்னா மற்றும் சானியா மிர்சா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அராண்ட்சா ரசை எதிர்த்து விளையாடி சிங்கப்பூரில் நடந்த ஐடிஎப் டபிள்யூ25 பட்டத்தை அங்கிதா வென்றார். 2019 குன்மிங் ஓபனில், முன்னாள் அமெரிக்க சாம்பியனும், முதல் 10 வீரருமான சமந்தா சுடோசூரை தோற்கடித்து தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். 2019 பிரெஞ்சு ஓபனில், ரெய்னா தனது முதல் தகுதிப் போட்டியை அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் உடன் இரண்டு இருக்கமான செட்களில் இழந்தார். அக்டோபர் 2019 இல் அங்கிதா ரெய்னா முதல் முறையாக இரட்டையர் தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் நுழைந்தார்.
  • ரோசாலாவுடன் 2020 தாய்லாந்து ஓபனில் ரெய்னா தனது முதல் பெண்கள் வலைப்பந்து சங்கத்தின் சுற்றுலா போட்டியிகளில் அரையிறுதிக்கு வந்தார். இது ரெய்னாவுக்கு இரட்டையர் பிரிவில் 119 ஆவது இடத்தைப் பெற்றுத்தந்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இரண்டு ஒற்றையர் பட்டங்களையும் வென்றார். பின்னர் இவர் 2020 பிரெஞ்சு ஓபனில் போட்டியிட்டார், அங்கு அவர் முதல் முறையாக இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறினார், ஆனால் குருமி நாராவிடம் தோற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Ankita Raina gets harsh induction into Grand Slam club at Australian Open". ESPN (in ஆங்கிலம்). 2021-02-11. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  2. "Ankita Raina". Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
  3. Srinivasan, Kamesh (9 April 2018). "Ankita Raina in top-200". http://www.thehindu.com/sport/tennis/ankita-in-top-200/article23484503.ece. 
  4. "Ankita Raina becomes only third Indian woman tennis player to break into top 200 singles rankings". PTI. 10 April 2018. https://www.firstpost.com/sports/ankita-raina-becomes-only-third-indian-woman-tennis-player-to-break-into-top-200-singles-rankings-4425623.html. 
  5. "Ankita Raina". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Ankita, India's Reigning Tennis Star Is A Pandit Girl
  7. "Ankita Raina - Bio". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  8. Coach Kadhe puts Ankita Raina's progress in context

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிதா_ரெய்னா&oldid=3904650" இலிருந்து மீள்விக்கப்பட்டது