அபக்கூக்கு (நூல்)

திருவிவிலிய நூல்

அபக்கூக்கு (Habakkuk) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

அபக்கூக்கு இறைவாக்கினர். பளிங்குச் சிலை. கலைஞர்: டொனாத்தேல்லோ (1386 - 1426). காப்பிடம்: ஃபுளோரன்சு பெரிய கோவில் மணிக்கூண்டு, இத்தாலியா.

பெயர் தொகு

அபக்கூக்கு என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் חבקוק (Ḥavaqquq, Ḥăḇaqqûq) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αββακούμ (Abbakouk) என்றும் இலத்தீனில் Habacuc என்றும் உள்ளது.

இறைவாக்கினர் அபக்கூக்கு கி.மு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், கல்தேயர் இனத்தாரான பாபிலோனியரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.

உள்ளடக்கம் தொகு

பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கி, "பொல்லாதவர்கள் நேர்மையானவர்களை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கிறீர்?" என்று வினவிய அபக்கூக்கிற்கு, தாம் குறித்த காலத்தில் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதாகவும், அதுவரை நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் வாழ்வார்கள் என்றும் ஆண்டவர் மறுமொழி கூறினார்.

இந்நூலின் பிற்பகுதி நேர்மையற்றோர், கொடியோர் ஆகியவர்களுக்கு ஆண்டவர் வழங்கும் தண்டனைத் தீர்ப்பைப் பற்றிக் கூறுகிறது. இறுதியில் அமைந்துள்ள பாடல் இறைவனின் மாட்சியையும் புகழையும் எடுத்துரைக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகள் தொகு

அபக்கூக்கு 1:2
"ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு
நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;
நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?
இன்னும் எத்துணைக் காலத்திற்கு
வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்;
நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?"

அபக்கூக்கு 3:17-19
"அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்;
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை;
அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்;
உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்."

உட்பிரிவுகள் தொகு

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. அபக்கூக்கின் குற்றச்சாட்டுகளும் ஆண்டவரின் மறுமொழியும் 1:1 - 2:4 1378 - 1379
2. நேர்மையற்றோர் மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு 2:5-20 1379 - 1381
3. அபக்கூக்கின் மன்றாட்டு 3:1-19 1381 - 1382
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபக்கூக்கு_(நூல்)&oldid=1639628" இலிருந்து மீள்விக்கப்பட்டது