அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி

அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல் யமானி (Abdullah Ibn Umar Badheeb Al Yamani, செய்கு பாதிப் மௌலானா, 1825 - சனவரி 14 1892) என்பவர் யெமன் நாட்டின் ஹழரமௌத் பிரதேசத்தில் இருந்து 1858ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மிகச்சிறந்த இசுலாமிய அறிஞரும், சூபியும் ஆவார். இலங்கையில் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்த பெரியாராகவும் இவர் காணப்பட்டார். இலங்கையின் மு. கா. சித்திலெப்பை, எகிப்தின் விடுதலை வீரர் ஓராபி பாட்சா ஆகியோருடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். இவர், மக்களிடையே பாதீப் மௌலானா என்றும் அறியப்படுகின்றார்.

இசுலாமிய அறிஞர்
அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல்யமானி
பிறப்பு1825
முக்கவா,யெமன்
இறப்புசனவரி 14, 1892
கஹடோவிட, இலங்கை
சமயம்இசுலாம்
வலைத்தளம்
http://www.badheebiyya.com/

ஆரம்ப வாழ்க்கை தொகு

செய்கு அப்துல்லாஹ் பாதீப் யெமன் நாட்டின் முகவா எனும் நகரில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரில் பெற்றுக் கொண்டார். பின்னர் மக்கா நகருக்கு சென்ற அவர்,அக்காலத்தில் மக்காவில் புகழ்பெற்ற இசுலாமிய அறிஞரான உஸ்மானுல் மீர்கானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய விஞ்ஞான முறைகள் என்பனவற்றைக் கற்றார். தனது உயர்கல்வியை தொடர்வதற்காக எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்த செய்கு அப்துல்லாஹ் பாதீப், அங்கு இஸ்லாமியச் சட்ட முறைமை, தப்ஸீர், அரபு இலக்கணம் மற்றும் அரபு இலக்கியம் ஆகிய துறைகளைக் கற்று தனது இளமாணிப் பட்டத்தை பெற்றார். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராக அவர் பணியாற்றினார்.

பிந்திய வாழ்க்கை தொகு

எகிப்தின் அல்-அஸஹர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி சிறிது காலத்தின் பின்னர் தனது சமயப் பணிக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்தார். இவரின் பயணத்தின் போது சமகாலத்தில் அவருடன் அல்-அஸஹர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற செய்கு அஹ்மத் இப்னு முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் சந்தித்தார். இவர்கள் இருவரும் இந்தியாவின் கேரளாவின் மலாபர் நகருக்கு சென்று அங்கு பெரியார் அப்துல் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா அவர்களின் வீட்டில் தங்கி தமது சமயப்பணியைத் தொடர்ந்தனர். சிறிது காலத்தில் செய்கு அஹ்மத் இப்னு முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இலங்கைக்குச் சென்றார். பின்னர் தனது சமயப்பணிக்காக வட இந்தியாவுக்கு சென்ற செய்கு அப்துல்லாஹ் பாதீப், அங்கு தமது அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டார். முகம்மது நபி அவர்களின் பெற்றோர்கள் விடயத்தில் மார்க்கத்துக்கு முரணான சில கருத்துக்களை கொண்டுவந்தவர்களுக்கு எதிராக 'துஹ்பதுல் முஸ்லிமீன் பீ அபவி செய்யிதில் முர்ஸலீன்" என்ற நூலை எழுதினார். இந்தியாவில் இருந்து 1958ஆம் ஆண்டளவில் செய்கு அப்துல்லாஹ் பாதீப் இலங்கைக்கு வந்தார்.

இலங்கைக்கு செய்கு அப்துல்லாஹ் பாதீப் வந்தடையும் போது இலங்கையின் முஸ்லிம்களின் கல்வி நிலை மிகக்குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. செய்கு அப்துல்லாஹ் பாதீப் இலங்கையை அடைந்த சமகாலத்தில், எகிப்தின் விடுதலை வீரர் ஓராபி பாட்சாவின் வருகையும் அமைந்தது. அக்காலப்பகுதியில் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவரும், சட்டத்தரனியுமாகிய மு.கா.சித்திலெப்பைக்கு இவர்களிருவரின் வருகை பெரும் உதவியாக அமைந்தது. செய்கு அப்துல்லாஹ் பாதீப், சித்திலெப்பை அவர்களின் ஆன்மீக குருவாக இருந்ததோடு,அவரின் வேலைகளுக்கு உதவியாகவும் இருந்தார். செய்கு அப்துல்லாஹ் பாதீப், ஓராபி பாட்ஷா மற்றும் வாப்பச்சி மரைக்கார் போன்றவர்களின் உதவியோடு கொழும்பு சாஹிரா கல்லூரி சித்திலெப்பையால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் பல பாடசாலைகள் அமைப்பதற்கும் சித்திலெப்பைக்கு, செய்கு அப்துல்லாஹ் பாதீப் உதவியாக அமைந்தார். இக்காலப்பகுதியில் பல இசுலாமிய அறிஞர்கள் , இசுலாமிய ஆன்மீகத்துறையின் மறுமலர்ச்சிக்கு பங்காற்றினார்கள். இவ்வகையில் செய்கு அப்துல்லாஹ் பாதீப், காதரியதுல் பாதிபிய்யா எனும் சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்ததுடன் முஸ்லிம்களின் ஆன்மீகத்துறைக்கு பெரும் பங்காற்றினார்.[1]

செய்கு அப்துல்லாஹ் பாதீப், தமது சன்மார்க்கப்பணிக்காக இலங்கையின் கண்டி, கம்பளை, ஹெம்மாதகமை, பதுளை,மடுல்போவ போன்ற பல இடங்களுக்குச் சென்றார்கள். ஹெம்மாதகமையில் சிறிதுகாலம் தங்கியிருந்து சன்மார்க்கப்பணியில் ஈடுபட்டார். பின்னர் கஹடோவிட்ட என்ற ஊருக்குச் சென்ற அவர், தனது மரணம் வரை அங்கே தங்கியிருந்தார். கஹட்டோவிடவில் பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் தக்கியா என்று அழைக்கப்படும் ஆன்மீக இல்லத்தை அமைத்தார். மேலும் கஹட்டோவிட்டவின் முதலாவது பாடசாலையை அமைத்தார். இன்று இப்பாடசாலை அல்-பத்ரியா மகாவித்தியாலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் வருடாந்த கந்தூரி மஜ்லிஸையும் அவர் அமைத்தார்.

மறைவு தொகு

செய்கு அப்துல்லாஹ் பாதீப் 1892ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் திகதி காலமானார். அவரின் உடல் கஹட்டோவிட பாதிபிய்யா தக்கியாவில் அடக்கம் செய்யப்பட்டது.[2]

பங்களிப்புக்கள் தொகு

செய்கு அப்துல்லாஹ் பாதீப் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

  • ஸைலுல் வரீத்

இஸ்லாத்தில் பெயரால் மார்க்கத்தில் புகுந்திருந்த விடயங்களை திருத்தும் ஒரு நூலாக இது அமைந்துள்ளது.[3]

  • ரிஸாலதுல் அக்தார்.
  • ரியாலுல் ஜினான்.
  • நஸீமுன் நஜ்தி பீ ராதி நுன்கிருல் மஹ்தி.
  • சூருல் முன்கரீன் பீ ரத்தில் மன்ஜூபீன்.

மேலும்வாசிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. (19 செப்டம்பா் 1909). முஸ்லிம் மித்திரன்
  2. (30 ஜனவரி 1892). முஸ்லிம் நேசன்: இலங்கை அச்சக தபானம்
  3. கலாநிதி. சுக்ரி . (1986). இலங்கை முஸ்லிம்களின் வரலாறு. பேருவளை: ஜாமிஆ கல்விஸ்தபானம்

வெளிஇணைப்புக்கள் தொகு