அயிரை மீன்

மீன் இனம்
அயிரை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிஃபார்மீசு
குடும்பம்:
கொபிடிடே
பேரினம்:
கொபிடிஸ்

அயிரை மீன் என்பது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் நன்னீர் மீன் இனம் ஆகும். இவை குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழ்கின்றன. இவை உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன. இவை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பயன்படுத்தும் போது பிற மீன்களைப் போல் இம்மீனின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை. இம்மீன்கள் சேற்றுப்பகுதியில் வசிப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாகும்படி உப்பு கொண்டு ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரு சில முறை சுத்தம் செய்யப்படுகிறது. இம்மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இதன் விலையும் பிற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள அசைவ உணவகங்களில் இம்மீன் குழம்பு கிடைக்கிறது.

சங்க இலக்கியத்தில் அயிரை மீன் தொகு

  • குமரி ஆற்று அயிரை மீனைச் சிறப்பித்துப் பிசிராந்தையார் பாடியுள்ளார் [2]
  • தொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ளார் [3]
  • கடல் காக்கையின் ஆண்-காக்கை கருவுற்ற தன் பெண்-காக்கைக்குக் கடற்கழிச் சேற்றில் அயிரை மீனைத் துழவிக் கண்டுபிடிக்கும். [4]
  • கீழைக்கடலில் வாழும் சிறகு-வலிமை இல்லாத நாரை ஒன்று மேலைக்கடலில் இருக்கும் பொறையன் என்னும் சேர-மன்னனின் தொண்டித்-துறை அயிரைமீனை உண்ண விரும்பியது போல, அடைய முடியாத ஒருத்தியை அடையத் தன் நெஞ்சு ஆசைப்படுவதாகத் தலைவன் ஒருவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான்.[5]
  • மேலைக்கடலோர மரந்தைத் துறைமுகத்தில் வாழும் வெண்நாரை அலையில் புரண்டு வரும் அயிரை மீனை உண்ணும். [6]
  • அயிரை மீன் வயலில் மேயும். [7]
  • கடல்வெண்காக்கை கழியில் வாழும் அயிரைமீனை உண்ணும்.[8]
  • காயவைத்திருக்கும் அயிரைக் கருவாட்டை மேயவரும் குருகுகளை மகளிர் ஓட்டுவர். [9]
  • அயிரை மீனைத் தூண்டிலில் மாட்டிப் போட்டு வரால் மீனைப் பிடிப்பர். [10]

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. Freyhof, J. (2011). "Cobitis taenia". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2011: e.T5037A11109311. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T5037A11109311.en. http://www.iucnredlist.org/details/5037/0. பார்த்த நாள்: 15 December 2017. 
  2. புறநானூறு- 67
  3. குறுந்தொகை - 128
  4. கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் பூஉடைக் குட்டம் துழவும் (நற்றிணை 272)
  5. குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு (குறுந்தொகை 128)
  6. தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை (குறுந்தொகை 166)
  7. அயிரை பரந்த அம் தண் பழனத்து (குறுந்தொகை 178)
  8. பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும் (ஐங்குறுநூறு 164
  9. அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும், (பதிற்றுப்பது 29)
  10. வேண்டு அயிரை இட்டு வராஅஅல் வாங்குபவர் (பழமொழி 302)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயிரை_மீன்&oldid=2846207" இலிருந்து மீள்விக்கப்பட்டது