ஆரைத்துண்டு மாதிரி

ஆரைத்துண்டு மாதிரி (sector model) என்பது ஒரு நகர நிலப்பயன்பாட்டு மாதிரி ஆகும். இது பொருளியலாளரான ஓமெர் ஓயிட் (Homer Hoyt) என்பவரால் 1939 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. இதனால் இம்மாதிரியை ஓயிட் மாதிரி என்றும் அழைப்பதுண்டு. இது நகர வளர்ச்சிக்கான ஒருமைய வலய மாதிரியின் ஒரு வேறுபட்ட வடிவம் எனலாம். இது வெளிநோக்கிய நகர வளர்ச்சிக்கு இடமளிப்பது, இதனைப் பயன்படுத்துவதில் உள்ள பயன்களுள் ஒன்று. இது ஒரு எளிமையான மாதிரி என்பதால் சிக்கலான நகர நிலப் பயன்பாட்டுத் தோற்றப்பாடுகளோடு நோக்கும்போது இந்த மாதிரியின் ஏற்புடைமை ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே உள்ளது.

ஆரைத்துண்டு மாதிரியின் ஒரு அடிப்படை வடிவம்

விளக்கம் தொகு

மைய வணிகப் பகுதியொன்று இருப்பதை ஏற்றுக்கொண்ட ஓயிட், பல்வேறு வலயங்கள், தொடர்வண்டிப் பாதைகள், நெடுஞ்சாலைகள், இது போன்ற பிற போக்குவரத்து வழிகள் போன்றவற்றைப் பின்பற்றி வெளிப்புறமாக வளர்ச்சியடைகின்றன என முன்மொழிந்தார். சிக்காகோ நகரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், உயர் வகுப்பினரின் குடியிருப்புக்கள் மைய வணிகப் பகுதிக்கு வடக்கே, மேற்படி செயற்பாட்டுக்குப் பொருத்தமான மிச்சிகன் ஏரியின் கரையோரமாக வளர்ச்சியடைவதும், தொழிற்சாலைகள் தொடர்வண்டிப் பாதையை அண்டித் தெற்கு நோக்கி ஆரைத்துண்டு வடிவில் வளர்வதும் மேற்கூறியவாறான வளர்ச்சிகள் ஆகும்.

இந்த மாதிரியை உருவாக்கும்போது, குறைந்த வருவாயினரின் வீடுகள் தொடர்வண்டிப் பாதைகளுக்கு அண்மையில் அமைவதையும், வணிக நிறுவனங்கள் வணிகப் பாதைகளுக்கு அருகாக வளர்ந்து செல்வதையும் கவனித்தார். தொடர்வண்டிப் பாதைகள், துறைமுகங்கள், டிராம் வண்டி வழிகள் போன்ற போக்குவரத்துப் பாதைகள் கூடிய அணுகு தன்மையை அடையாளம் கண்டுகொண்ட ஓயிட், நகரங்கள், மைய வணிகப் பகுதியில் இருந்து தொடங்கி, ஆப்புருவக் கோலங்கள் வடிவில் முதன்மையான போக்குவரத்துப் பாதைகளை அண்டி வளர்ச்சி அடைகின்றன என்னும் கோட்பாட்டை உருவாக்கினார்.

பொருத்தப்பாடு தொகு

இந்த மாதிரி, ஏராளமான பிரித்தானிய நகரங்களுக்குப் பொருந்துகிறது. எடுத்துக் காட்டாக, டைன் நதியை அண்டி அமைந்த நியூகாசில் நகரம், இம் மாதிரியுடன் நியாயமான அளவு சரியாகப் பொருந்தி வருகிறது. இத்தகைய நகரங்கள், போக்குவரத்து வசதிகளே மட்டுப்படுத்தும் காரணிகளாக அமைந்த ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருப்பதே இப்பொருத்தப்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம். பழைய நகரங்கள் கூடிய அளவு ஓயிட் மாதிரிக்கும், அண்மைக்காலத்தில் உருவான நகரங்கள் பர்கெசுவின் மாதிரிக்கும் பொருத்தமாக அமைவதை ஒரு பொது விதியாகக் கொள்ளலாம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரைத்துண்டு_மாதிரி&oldid=1912070" இலிருந்து மீள்விக்கப்பட்டது