ஆலிஃபாக்சு வெடிப்பு

ஆலிஃபாக்சு வெடிப்பு (Halifax Explosion) என்பது, 1917 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலை, கனடாவின் நோவா இசுக்கோசியாவில் உள்ள ஆலிஃபாக்சு என்னும் இடத்தில் இடம்பெற்ற ஒரு கடல்சார் பேரழிவு ஆகும். நார்வேயைச் சேர்ந்த கப்பலான "எஸ்.எஸ்.இமோ", உயர் வெடிபொருட்களை ஏற்றியிருந்த பிரான்சு நாட்டின் "எஸ்.எஸ்.மொன்ட்-பிளாங்க்" என்னும் கப்பலுடன், ஆலிஃபாக்சு துறைமுகத்தையும், பெட்போர்டு நீர்ப்பகுதியையும் இணைக்கும் நீரிணையில் மோதியது. இதன் விளைவாகப் பிரான்சுக் கப்பலில் ஏற்பட்ட தீ, அதில் ஏற்றப்பட்டிருந்த வெடிபொருட்களைப் பற்ற வைத்ததால், பெரிய வெடிப்பு ஏற்பட்டு ஆலிஃப்பக்சின் ரிச்மனண்ட் பகுதியைப் பேரழிவுக்கு உள்ளாக்கியது. வெடிப்பினாலும், சிதறல்களினாலும், தீயாலும், உடைந்து வீழ்ந்த கட்டிடங்களாலும் ஏறத்தாழ 2,000 பேர் இறந்தனர். மேலும் 9,000 பேர் காயமடைந்தனர்.[1] இதுவே அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வெடிப்பு ஆகும்.[2] இவ்வெடிப்பு, 2.9 கிலோதொன் டி.என்.டிக்குச் சமமான ஆற்றலை வெளியிட்டது.

ஆலிஃபாக்சு வெடிப்பு
நீருக்கு மேல் எழும் புகை மண்டலம்
வெடிப்பின்போது எழுந்த புகை மண்டலம்
இடம்ஆலிஃபாக்சு, நோவா இசுக்கோசியா, கனடா
நாள்6 டிசம்பர் 1917
9:04:35 மு.ப. (அத்திலாந்திக்கு நியம நேரம்)
இறப்பு(கள்)2,000 (மதிப்பீடு) (1,950 உறுதிப்படுத்தியது)
காயமடைந்தோர்9,000 (அண்ணளவு)
வெடிப்பினால் அழிந்த பகுதி. 1900 ஆம் ஆண்டில் எடுத்த படம்
வெடிப்பினால் ஏற்பட்ட அழிவுகளைக் காட்டும் படம். துறைமுகத்துக்கு எதிர்ப் பக்கத்தில் கப்பல் கரை ஒதுக்கி இருப்பதும் தெரிகிறது.

உயர் வெடிபொருட் சரக்கை நியூயார்க் நகரத்தில் ஏற்றிக்கொண்டு, ஆலிஃபாக்சு வழியாக பிரான்சிலுள்ள வோர்டோவுக்கு வருமாறு பிரான்சு அரசு மொன்ட்-பிளாங் கப்பலுக்கு உத்தரவிட்டிருந்தது. ஏறத்தாழக் காலை 8.45 மணியளவில், மிகக் குறைவான, ஏறத்தாழ ஒரு கடல்மைல் (1.2 மைல்/மணி அல்லது 1.9 கிமீ/மணி) வேகத்தில், நியூயார்க்கில் நிவாரணப் பொருட்களை ஏற்றுவதற்காக "பெல்சிய நிவாரணத்துக்கான ஆணையகம்" அனுப்பியிருந்த, சரக்கு ஏற்றப்படாத இமோவுடன் மோதியது. பிரெஞ்சுக் கப்பலில் ஏற்பட்ட தீ விரைவிலேயே கட்டுப்படுத்த முடியாமல் பெரிதாகியது. ஏறத்தாழ 20 நிமிடங்களுக்குப் பின்னர், காலி 9:04:35 மணியளவில் மொண்ட்-பிளாங்க் வெடித்தது.

ரிச்மண்ட் சமூகம் உட்பட 800 மீட்டர் (அரை மைல்) ஆரை கொண்ட சுற்றுவட்டத்துக்குள அடங்கிய ஏறத்தாழ எல்லாக் கட்டுமானங்களும் அழிந்துபோயின.[3] ஒரு அழுத்த அலை மரங்களைச் சாய்த்தது, இரும்புக் காப்பு வேலிகளை வளைத்தது, கட்டிடங்களை உடைத்தது, கப்பல்களைக் கரைக்கு ஒதுக்கியது (இமோவும் தொடர்ந்து நிகழ்ந்த ஆழிப்பேரலையால் கரையில் ஒதுக்கப்பட்டது), மொண்ட்-பிளாங்கின் துண்டுகளைப் பல கிலோமீட்டர்களுக்குச் சிதற வைத்தது. நகரத்தில் இருந்த எந்தச் சாளரமுமே இந்த வெடிப்புக்குத் தப்பவில்லை. துறைமுகத்துக்கு எதிர்ப் பக்கத்தில், டார்ட்மவுத்திலும் பரவலான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. வெடிப்பினால் உருவான சுனாமி, "டஃப்ட்ஸ் கோவ்" பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த மிக்மாக் முதல் தேசச் சமூதாயம் முற்றாகவே அழிந்துபோனது.

நிவாரண வேலைகள் உடனடியாகவே தொடங்கின. மருத்துவமனைகள் விரைவாக நிரம்பின. நிவாரணத் தொடர்வண்டிகள் நோவா உசுக்கோசியா, நியூ புருண்விக் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தன. கனடாவின் நடுப்பகுதியில் இருந்தும், ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும் புறப்பட்ட நிவாரணத் தொடர் வண்டிகள் பனிப்புயலினால் தடைப்பட்டன. பேரழிவினால் வீடிழந்த மக்களுக்குத் தற்காலிகக் கொட்டகைகளை அமைப்பதற்கான வேலைகளும் உடன் தொடங்கின. தொடக்க நீதி விசாரணைகளின்படி மொண்ட்-பிளாங்க் கப்பலே விபத்துக்குப் பொறுப்பு எனக் காணப்பட்டது. ஆனால், பிந்திய மேன்முறையீட்டு விசாரணையில் இரண்டு கப்பல்களுமே விபத்துக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆலிஃபாக்சின் "நார்த் என்ட்" பகுதியில் இந்த வெடி விபத்தில் இறந்தவர்களுக்கான பல நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வதந்திகளும் விசாரணையும் தொகு

ஆலிஃபாக்சில் உள்ள பலர் முதலில் இந்த வெடிப்பு செருமனியர்களின் தாக்குதல் என்றே நம்பினர்.[4] "ஆலிஃபாக்சு எரால்ட்" (Halifax Herald) இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. அதேவேளை, இமோவின் கப்பல் இயக்குனரான யோன் யோன்சன் வெடிப்பின்போது ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ஐயத்துக்கு இடமான முறையில் நடப்பதாக இராணுவக் காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. அவருடைய உடமைகளைச் சோதனையிட்டபோது, செருமன் மொழியில் எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்ததால், யோன்சன் ஒரு செருமன் உளவாளி எனக் கருதப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார்.[5] இக்கடிதம் நோர்வீசிய மொழியில் எழுதப்பட்டதாகப் பின்னர் கண்டறியப்பட்டது. வெடிவிபத்தைத் தொடர்ந்து, ஆலிஃபாக்சில் தப்பியிருந்த செருமன் மக்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.[6][7] வெடிவிபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தப் பயம் குறைவடைந்தது. எனினும், செருமன் தொடர்பு குறித்த வதந்திகள் தொடர்ந்தும் இருந்தன.

மேற்கோள்கள் தொகு

  1. "Halifax Explosion 1917". CBC. 19 September 2003. பார்க்கப்பட்ட நாள் 25 February 2011.
  2. Time: Disasters that Shook the World. Time Home Entertainment. 2012. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-60320-247-1. https://archive.org/details/disastersthatsho0000unse. 
  3. Armstrong 2002, ப. 42.
  4. Glasner 2011, ப. 123.
  5. "Helmsman of ship that hit Mont Blanc held as spy". Hartford Courant: p. 1. 14 December 1917 இம் மூலத்தில் இருந்து 26 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150626103422/https://pqasb.pqarchiver.com/courant/doc/556533267.html?FMT=ABS&FMTS=ABS:AI&type=historic&date=Dec%2014,%201917&author=&pub=Hartford%20Courant&edition=&startpage=&desc=HELMSMAN%20OF%20SHIP%20THAT%20HIT%20MONT%20BLANC,%20HELD%20AS%20SPY. 
  6. Armstrong 2002, ப. 113.
  7. "Elements still scourge desolated city of Halifax, 1050 bodies at morgues; all Germans being arrested". The Gazette CXLVL (295): p. 1. 10 December 1917. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிஃபாக்சு_வெடிப்பு&oldid=3784317" இலிருந்து மீள்விக்கப்பட்டது