இடப்பெயர் ஆய்வு

இடப்பெயர் ஆய்வு என்பது, இடங்களின் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொருள், பயன்பாடு, வகைப்பாடு என்பவை பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். இது பொதுவான எல்லா வகையான பெயர்களையும் பற்றி ஆராயும் பெயராய்வுத் துறையின் ஒரு பகுதியாகும்.

இடப்பெயர் என்பது ஒரு ஊர், பிரதேசம், புவி மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி அல்லது ஒரு செயற்கை அம்சத்தைக் குறிக்கக்கூடும். ஒரு நிலப்பகுதியை இன்னொரு பகுதியிலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இடப்பெயர்கள் உருவானதாகக் கருதப்படுகின்றது. சில பண்பாடுகளில், இத்தகைய இடப்பெயர்கள், பெரும்பாலான அல்லது எல்லாப் பெயர்களும் உள்ளூர் மொழியில் ஒரு பொருளைக் கொண்டிருக்கும். இத்தகைய பொருள் பொதிந்த பெயர்கள், அவ்விடங்களோடு தொடர்புடைய மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்குகின்ற தன்மை வாய்ந்தவை. இதனால், இடப்பெயர் ஆய்வானது, வரலாறு, மொழியியல், தொல்லியல் போன்ற துறைகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இடப்பெயர்கள் ஒரு பகுதியின் வரலாற்றுப் புவியியல் குறித்துப் பெறுமதி வாய்ந்த விளக்கங்களைத் தர வல்லவை. 1954ல் எஃப். எம். போவிக்கே என்பார், இடப்பெயர் ஆய்வு குறித்துக் கூறியபோது, இவ்வாய்வுகள் தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த கண்டுபிடிப்புக்களையும் மொழியியல் விதிகளையும் பயன்படுத்துவதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும் உதவுகின்றன என்றார்.[1] இடப்பெயர்கள் இனக்குழுக்களின் குடியேற்றங்களின் பரம்பற் கோலங்களைக் காட்டுவதோடு நில்லாது புலப் பெயர்வுகளின் காலத்தை அறிந்துகொள்வதிலும் உதவுகின்றன.[2][3][4]

புலவர்களும், புராணக்கதை எழுதியோரும் பல இடப்பெயர்களைத் தொடர்பு படுத்தித் தங்கள் கதைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இதனால், இவர்கள் ஒருவகையில் இடப்பெயர் ஆய்வுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர் எனலாம். ஆனாலும் இவை அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அல்ல என்பதால், இவற்றை முறையான இடப்பெயர் ஆய்வாகக் கொள்ள முடியாது. சில சமயங்களில் இடப்பெயரை மையமாகக் கொண்டே இத்தகைய கதைகள் எழுவதும் உண்டு. இடப் பெயர்களின் அமைப்பு, உச்சரிப்பு ஒலி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர்களுக்குப் போலியான பொருள் கூறப்படுவதையும் காணலாம்.

இடப்பெயர் ஆய்வைப்பற்றி 1768 இல் முதலில் குறிப்பிட்டவர், வில்லியம் லெய்ப்னிஷ் என்பவராவார். எக்லி, அடால்பர்க், சிமித், ஸ்டீவார்ட், கார்டினர், உட்லி, டிரையே போன்றவர்கள் இடப்பெயர் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.

குறிப்புக்கள் தொகு

  1. Powicke, reviewing Armstrong, Mawer, Stenton and Dickins The Place-Names of Cumberland (1950–53) in The English Historical Review 69 (April 1954), p 312.
  2. McDavid, R.I. (1958). "Linguistic Geographic and Toponymic Research". Names (6): 65–73. 
  3. Kaups, M. (1966). "Finnish Place Names in Minnesota: A Study in Cultural Transfe". The Geographical Review (Geographical Review, Vol. 56, No. 3) 56 (56): 377–397. doi:10.2307/212463. 
  4. Kharusi, N. S. & Salman, A. (2011) The English Transliteration of Place Names in Oman. Journal of Academic and Applied Studies Vol. 1(3) September 2011, pp. 1–27 Available online at www.academians.org

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்பெயர்_ஆய்வு&oldid=2865842" இலிருந்து மீள்விக்கப்பட்டது