இரண்டாம் ஓடான் சண்டை

இரண்டாம் ஓடான் சண்டை (Second Battle of the Odon) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

இரண்டாம் ஓடான் சண்டை
கான் சண்டையின் பகுதி

ஜூலை 16ல் 112 மற்றும் 113ம் குன்றுகளுக்குகிடையே பதுங்குகுழிகளில் பிரிட்டானியக் காலாட்படை வீரர்கள்
நாள் 15 -17 ஜூலை 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை
மேல்நிலை உத்தியளவில் நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் செருமனி நாசி ஜெர்மனி
இழப்புகள்
3,500 பேர் 2,000 பெர்

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. சார்ண்வுட் நடவடிக்கையின் மூலம் கான் நகரின் வடக்கு பகுதிகள் கைப்பற்றப்பட்டன. பிற பகுதிகளைக் கைப்பற்ற தாக்குதல்கள் தொடர்ந்தன. முன்னர் முதலாம் ஓடான் சண்டையில் கான் நகருக்கு மேற்கே இருந்த ஓடான் பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முயன்று பிரிட்டானியப் படைகள் தோற்றிருந்தன. கான் நகரின் மீது நடத்தப்படவிருந்த அடுத்த பெரும் தாக்குதலான குட்வுட் நடவடிக்கைக்கு முன்னோடியாக இரண்டாம் ஓடான் சண்டை நடை பெற்றது. ஓர்ன் ஆற்றுப் பாலமுகப்பிலிருந்து நிகழவிருந்த குட்வுட் தாக்குதலிருந்து ஜெர்மானியப் படைகளின் கவனத்தைத் திசை திருப்ப ஒடான் பள்ளத்தாக்குப் பகுதியில், ஜூலை 15ம் தேதி பிரிட்டானியப் படைகள் தாக்கின. இந்த தாக்குதல் கிரீன்லைன் நடவடிக்கை, பொமொகிரனேட் நடவடிக்கை என இரு நடவடிக்கைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. முன்னதில் ஜூலை 15ம் தேதி பிரிட்டானிய 12வது கோர் 112ம் மற்றும் 113ம் குன்றுகளைத் தாக்கியது. அதற்கு மறு நாள் தொடங்கிய பொமொகிரனேட் நடவடிக்கையில் 30வது கோர் தன் தாக்குதலைத் தொடங்கியது. இந்த இருமுனைத் தாக்குதலில் எந்தப் புதிய பகுதிகளையும் பிரிட்டானியப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. எனினும் இத்தாக்குதலைச் சமாளிக்க மூன்று ஜெர்மானியக் கவச டிவிசன்கள் ஓடான் பள்ளத்தாக்குக்கு அனுப்பப்பட்டதால், அடுத்து நிகழ்ந்த குட்வுட் தாக்குதலில் அவை பங்கேற்கவில்லை. இரு தரப்புக்கும் பெரும் இழப்புகள் ஏற்படுத்திய இச்சண்டை ஜூலை 17ம் தேதி முடிவுக்கு வந்தது. அதற்கு மறுநாள் குட்வுட் நடவடிக்கை தொடங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஓடான்_சண்டை&oldid=1381866" இலிருந்து மீள்விக்கப்பட்டது