இராணிபௌவா

நேபாள நாட்டிலுள்ள ஒரு நகரம்

இராணிபௌவா (Ranipauwa) நேபாள நாட்டின் முசுதாங் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். முன்னதாக முசுதாங் இராச்சியத்தில் இப்பகுதி இடம்பெற்றிருந்தது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 12140 அடி உயரத்தில் (3700 மீட்டர்) இராணிபௌவா நகரம் அமைந்துள்ளது.[1]

இராணிபௌவா நகரத்தில் ஒரு கடை
முக்திநாத் கோவில், தோரங் லா கணவாய் பாதையில்-இரவு நேர இராணிபௌவா நகரம்.

இங்கு ஏராளமான உணவு விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், சிற்றுண்டியகங்கள், உணவகங்கள் மற்றும் நினைவு பரிசு கடைகள் உள்ளன. முக்திநாத் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்நகரம் உள்ளதால் உலகெங்கிலும் உள்ள இந்து மற்றும் புத்தமத புனிதப் பயணிகள் இங்கு வருகைதருகின்றனர். மத்திய நேபாளிலுள்ள பிரபலமான மலையேறும் பாதையான அன்னபூர்ணா சுற்று வழியாகச் செல்லும் மலையேறிகளுக்கு இராணிபௌவா ஒரு தங்குமிடமாகும். திண்மப் பாறைத்தொகுதியான அன்னபூர்ணா- இமால் மலைப்பகுதியைச் சுற்றி அன்னபூர்ணா சுற்றுப்பாதை செல்கிறது. கடிகார திசையில் மலையேறும் போது கடல் மட்டத்திலிருந்து 17769 அடி (5416 மீட்டர்) உயரத்திலுள்ள தோரோங்-லா-கணவாயைக் கடப்பதற்கு முன்பாக இப்பாதையிலுள்ள கடைசி நகரம் இராணிபௌவா நகரமேயாகும்.

உண்மையில் இராணிபௌவா நகரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற ஒரு நகரமல்ல. மிகக் குறைந்த அளவில் பாரம்பரிய கட்டிடங்களும் ஏராளமான நவீன கற்காரையால் கட்டப்பட்ட உணவு விடுதிகளும் பிற சுற்றுலா கட்டிடங்களுமே இந்நகரில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மிகவும் சுமாரான உள்கட்டமைப்பு வசதிகளும் உள்வரும் சாலைகளும் உள்ளூர் வீதிகளும் நடைபாதைகளற்று காணப்படுகின்றன. மின்சார வசதி எப்போதும் நம்பகமானதாக இருக்காது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணிபௌவா&oldid=3090724" இலிருந்து மீள்விக்கப்பட்டது