இருதுணை மணம்

இருதுணை மணம் (Bigamy) என்பது, சட்டப்படி மணந்த ஒருவர் இருக்கும்போது இன்னொருவரை மணம் புரிதலைக் குறிக்கும்.[1] பல மேல் நாடுகளிலும், வேறு பல நாடுகளிலும் இருதுணை மணம் சட்டப்படி குற்றமாகும். இச்சூழலில் பெரும்பாலும் இரண்டாவது மணம் நடக்கும்போது முதல் அல்லது இரண்டாவது துணைவருக்கு இது தெரியாமல் இருக்கும் நிலை உள்ளது.[2][3] இருதுணை மணச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில், முதல் துணைவரின் சம்மதம் இருப்பதோ இல்லாதிருப்பதோ சட்டப்படி எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்துவது இல்லை. இரண்டாவது மணம் சட்ட வலுவற்றதாகவே இருக்கும். பொதுவாக, வாழுகின்ற ஒரு கணவனையோ, மனைவியையோ கொண்டிருக்கும் ஒருவர் இன்னொருவரை மணம் புரிவதையோ, அல்லது தான் ஏற்கெனவே மணம்புரியாது இருந்தாலும் மணம் புரிந்த இன்னொருவரை மணம் புரிவதையோ சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், முன்னைய மணம் சட்டப்படி செல்லாதது ஆக்கப்பட்டாலோ, சட்டப்படியான மணமுறிவு பெற்றிருந்தாலோ, முன்னைய துணைவர் காணாமல் போய் இறந்துவிட்டதாக நம்பப்பட்டாலோ இன்னொரு மணம் புரிந்துகொள்ளச் சட்டம் அனுமதிக்கும்.

எல்கனாவும் அவரது இரண்டு மனைவியரும்

இருதுணை மண எதிர்ப்புச் சட்டங்களின் வரலாறு தொகு

உரோமப் பேரரசில் கிறித்தவம் அரச மதமாக ஆவதற்கு முன்பே டயோகிளேசியனும், மக்சிமிலியனும், கிபி 285 இல் ஒருதுணை மணத்தை மட்டுமே சட்டத்துக்கு அமைவானதாக ஆக்கும் பல்துணை மறுப்புச் சட்டங்களை நிறைவேற்றினர். 393 ஆம் ஆண்டில், பைசண்டியப் பேரரசர் முதலாம் தியோடோசியசு பல்துணை மணம் மீதான தடையை யூதச் சமூகத்துக்கும் ஏற்புடையதாகும்படி கட்டளையிட்டார். 1000 ஆவது ஆண்டில், ராபி கேர்சம் பென் யூதா, கிறித்தவச் சூழலில் வாழும் அசுக்கெனாசி யூத சமூகத்தினரிடையே பல்துணை மணம் ஏற்கப்படாது என அறிவித்தார்.

முற்காலத்தில், இருதுணை மணம் குறித்த வழக்குகள் மதம் சார்ந்த நீதிமன்றங்களிலேயே இடம்பெற்றன. சீர்திருத்தங்களுக்குப் பின்னர், இங்கிலாந்து நாடாளுமன்றம் இருதுணை மணத்தைக் குற்றமாக்கும் சட்டங்களை இயற்றியது. இதே போன்ற நடவடிக்கைகள் பிற இடங்களிலும் எடுக்கப்பட்டன.

பெண்ணிய வரலாற்றாளர் சாரா மக்டூகலின் கருத்துப்படி, 16 ஆம் நூற்றாண்டின் மத்திய ஐரோப்பாவின் மீதான இசுலாமிய ஆக்கிரமிப்புக்களும், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களில் ஐரோப்பியரின் குடியேற்றவாதமும் ஐரோப்பியக் கிறித்தவரைப் பல்துணை மணத்தைக் கடிப்பிடிக்கும் பண்பாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் விளைவாகவே ஐரோப்பியக் கிறித்தவ நாடுகளில் ஒருதுணை மணத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, இருதுணை மணம் புரியும் கிறித்தவ ஆண்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், மரண தண்டனை, கடூழியம், நாடுகடத்தல், நீண்டகாலச் சிறை போன்ற கடும் தண்டனைகளுக்கு உள்ளானார்கள்.

பழங்காலச் சீனாவில், இருதுணை மணம் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஆனால், அதிகாரபூர்வ மணமாக இல்லாதிருக்கும்வரை வைப்பாட்டிகளை வைத்திருப்பதைப் பொறுத்துக்கொண்டனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடனேயே மணம் புரிந்திருக்க முடியும். மறுதலையும் அவ்வாறே.

சட்ட நிலை தொகு

பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இருதுணை, பல்துணை மணங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அந்நாடுகளில் இவ்வகை மணங்கள் குற்றம் ஆக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் மக்களின் பல்துணை சார்ந்த வாழ்க்கை முறையையும் தடை செய்துள்ளன. சில அமெரிக்க மாநிலங்களில் இவ்வாறான தடைகள் உள்ளன. இவ்விடங்களில் பல்துணை வாழ்க்கை முறையைக் குற்றமாக்கியது, மோர்மன் எதிர்ப்புச் சட்டங்களாகவே உருவாகின. எனினும் இச்சட்டங்களை மிகவும் அரிதாகவே நடைமுறைப்படுத்துகின்றனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Definition of BIGAMY". www.merriam-webster.com. Archived from the original on 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
  2. George Monger (2004). Marriage customs of the world: from henna to honeymoons. Santa Barbara, Calif: ABC-CLIO. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57607-987-2. https://books.google.com/books?id=o8JlWxBYs40C&pg=PA31. பார்த்த நாள்: 2012-07-30. 
  3. "Sex Offenses: Consensual - Bigamy". Law Library - American Law and Legal Information. Archived from the original on 2009-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.
  4. Turley, Jonathan (3 October 2004). "Polygamy laws expose our own hypocrisy". USA Today இம் மூலத்தில் இருந்து 22 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120722135630/http://www.usatoday.com/news/opinion/columnist/2004-10-03-turley_x.htm. பார்த்த நாள்: 2012-07-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதுணை_மணம்&oldid=3586229" இலிருந்து மீள்விக்கப்பட்டது