இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)

இறுதி இராவுணவு அருட்சாதனம் (The Sacrament of the Last Supper) என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ (1904-1989) வரைந்த ஒரு புகழ்மிக்க ஓவியம் ஆகும். ஒன்பது மாதங்கள் உழைப்புக்குப் பின் உருவான இந்த ஓவியம் 1955இல் நிறைவுற்றது.

இறுதி இராவுணவு அருட்சாதனம்
ஓவியர்சால்வதோர் தாலீ
ஆண்டு1955
வகைதுணிப்பரப்பின்மேல் எண்ணெய் ஓவியம்
இடம்தேசிய கலைக்கூடம், வாஷிங்டன்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய கலைக்கூடத்தில் இந்த ஓவியம் 1956இல் வைக்கப்பட்டது. அதுவரையிலும் அந்த கலைக்கூடத்தில் பெரும்பான்மை மக்களால் போற்றப்பட்ட ஓவியமாக இருந்தது பியேர் ஓகுஸ்த் ரெனுவா (Pierre-Auguste Renoir) என்னும் கலைஞரின் படைப்பாகிய "பூவாளி பிடித்த சிறுமி" (A Girl with a Watering Can)[1] என்னும் ஓவியமே. அதன் இடத்தை தாலீயின் ஓவியம் பிடித்துக்கொண்டது. இன்று தேசிய கலைக்கூடத்தில் மக்கள் போற்றும் முதன்மை ஓவியமாக "இறுதி இராவுணவு அருட்சாதனம்" ஓவியம் விளங்குகிறது.

புதுக் கலைப்பாணி தொகு

சால்வதோர் தாலீ அடிமன வெளிப்பாட்டியம் என்னும் புரட்சிக் கலைப்பாணியில் ஓவியங்களை வரைந்தார். அதன்பின் பண்டைச் செவ்விய கிறித்தவ கருத்துருக்களை நவீனத்தோடு அவர் இணைக்கத் தொடங்கினார். அதன் பயனாக, உருவான படைப்புகளுள் சில:

  • சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்) (Christ of Saint John of the Cross)
  • "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" (The Temptation of St. Anthony)
  • "மிகுகனசதுர சிலுவையில் இயேசு" (Corpus Hypercubus)[2]
  • "லிகாத் துறைநகர அன்னை மரியா" (The Madonna of Port Lligat)[3]
  • "அணுநிலைச் சிலுவை"(Nuclear cross)
  • "பொதுச் சங்கம்" (The Ecumenical Council)[4]

கணித விகிதப் பாணி தொகு

தாலீ உருவாக்கிய "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தில் பொன் விகிதம் என்னும் கணித வாய்பாடு செயலாக்கம் பெறுகிறது.[5]

தாலீ வரைந்த இந்த ஓவியத்தின் நீளமும் அகலமும் பொன் விகிதத்தின்படி அமைந்துள்ளன. மேலும், இயேசுவும் அவருடைய நண்பர்களும் அமர்ந்திருக்கின்ற உணவு மேசையைச் சூழ்ந்து குவிந்துள்ள அமைப்பு பன்னிருகோணம் (dodecahedron) ஆகும். பன்னிருகோண வடிவத்தின் பண்புகளை விவரித்த பிளேட்டோ என்னும் பண்டைய மெய்யியலார் "வான வெளியில் (பன்னிரு) கிரகத் தொகுப்புகளைச் சூழ்ந்து அணிசெய்ய கடவுளே பயன்படுத்திய வடிவம் அது" என்று கூறியுள்ளார். பன்னிருகோண வடிவும் பொன் விகிதத்தோடு நெருங்கிய தொடர்புடையது. குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற மூன்று பொன் விகித செங்கோண முக்கோணங்கள் பன்னிருகோண வடிவத்தை உருவாக்குகின்றன.

விமர்சனங்கள் தொகு

தாலீ வரைந்த இந்த ஓவியத்தில் குறைகண்டோருள் பிரான்சிசு ஷேஃபர் (Francis Schaeffer), பவுல் டில்லிக் (Paul Tillich) என்னும் இறையியலாரும் அடங்குவர். ஷேஃபர் கூறியது:

"தெளிவில்லாத இருப்பியல்வாத அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் காணும் கிறித்து புலன்களுக்கு எட்டாதவராக உள்ளார். அவருடைய சீடர்கள் தெளிவாக, திடப்பொருள்முறையில் உள்ளார்கள். சால்வதோர் தாலீ, திடப்பொருள் காட்சியைவிடத் தெளிவற்ற, கலக்கமான காட்சியைச் சக்தியாகக் கருதி உள்ளார்ந்த அர்த்தம் வாழ்வுக்குக் கிடைப்பதாகக் கூறுகிறார். அந்த அர்த்தத்தைக் கொடுப்பதற்காக மேலே ஒரு கூரையை அமைத்துள்ளார். இங்கே கிறித்தவப் பார்வை மறைந்துவிட்டது."

பவுல் டில்லிக் என்னும் இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைக் குறைகூறினார். சமய எழுச்சி என்ற பெயரில் தாலீ தரும் ஓவியம் பொருளற்றதாக, வெறும் குப்பையாகவும் ("simply junk!") உள்ளது என்பது அவரது கருத்து.[6]அப்படத்தில் இருக்கின்ற இயேசு "அமெரிக்காவின் அடிப்பந்தாட்ட வீரர் போல, திடகாத்திரமான உடலோடு காட்டப்பட்டுள்ளார். அது தவறு" என்றார் டில்லிக். இயற்கையை மகிமைப்படுத்தும் இந்த முயற்சி வெறுக்கத்தக்கது என்பது அவரது பார்வை.

எதிர் விமர்சனம் தொகு

மேலே கூறிய இரு இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று வேறு விமர்சகர்கள் கூறுகின்றனர்.[7]

அவர்கள் கருத்துப்படி, தாலீயின் ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தை முற்றிலும் ஒத்ததாகக் கருதுவது தவறு. இயேசுவைச் சூழ்ந்து பன்னிரண்டு பேர் அமர்ந்து இருப்பது அத்தோற்றத்தைத் தரக்கூடும். ஆனால் தாலீ தரும் பொருள் அதைவிட ஆழமானது.

சால்வதோர் தாலீயின் கத்தோலிக்க சமய நம்பிக்கை வெளிப்படுதல் தொகு

இந்த ஓவியத்தை தாலீ வரைந்தபோது (1955) அவர் கத்தோலிக்க சமயத்திற்குத் திரும்பிவிட்டிருந்தார். அவருடைய மனமாற்றம் நிகழ்ந்தது 1949இல் ஆகும். அதற்கு முன்னோடியாக அமைந்தது தாலீ எசுப்பானியப் புனிதரான சிலுவையின் புனித யோவான் என்பவருடைய இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு, கிறித்தவ சமயத்தைச் சார்ந்த பொருள்கள் குறித்து கலையாக்கம் செய்யத்தொடங்கியது ஆகும். வெளிப்படையாகக் கிறித்தவப் பொருள்பற்றி தாலீ 1946இல் வரைந்த முதல் ஓவியம் "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" (The Temptation of St. Anthony). கத்தோலிக்க சமய நம்பிக்கையை வெளிப்படையாகத் தழுவிய காலத்திலிருந்து, தாம் அடிமன வெளிப்பாட்டியத்தின் கூறுகளோடு, செவ்வியம் மற்றும் மறுமலர்ச்சிக் காலக் கலைக்கூறுகளையும் இணைத்துக் கலையாக்கம் செய்ய உறுதிபூண்டார்.

அறிவியலும் சமயமும் முரணாகா தொகு

சால்வதோர் தாலீ நவீன கால அறிவியல் முன்னேற்றங்களைத் தம் கலையாக்கத்தில் இணைப்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டினார். அணுக்கரு இயற்பியல் (nuclear physics) மனித அறிவுக்குக் கொணர்ந்த இயற்கை இரகசியங்களை ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தினார். எனவே, அவருடைய பார்வையில் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று. மெய்யியல் துறை, அறநெறித் துறை, கலைத்துறை, உயிரியல் துறை ஆகியவற்றின் எந்தவொரு கண்டுபிடிப்புமே கடவுள் மறுப்புக்கு இட்டுச்செல்வதில்லை என்பது அவருடைய கருத்து.

சிக்மண்ட் பிராய்டின் உளநிலைப் பகுப்பாய்வு, கனவு வெளிப்பாடுகள் போன்றவற்றைக் கைவிடாமலே அவர் கிறித்தவக் கருத்துகளையும் நவீன கலைப்பாணியையும், குறிப்பாக அடிமன வெளிப்பாடுகளையும் இணைக்கின்ற வழியைத் தம் கலைப்படைப்புகளில் கையாண்டார்.

ஓவியத்தின் விளக்கம் தொகு

தாலீயின் "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்ற ஓவியத்தைத் துல்லியமாக ஆய்ந்தால் பல ஆழ்ந்த சமய உண்மைகளைக் கண்டுகொள்ளலாம்:

  • இயேசுவின் முகம் ஓவியத்தின் மையமாக அமைந்துள்ளது. அது தொடுவானக் குறுக்குக்கோட்டின் மையமாக இருப்பதோடு, சூரிய ஒளிக்கதிர் விரிந்துபரவுகின்ற குவிமையமாகவும் உள்ளது.
  • ஓவியத்தின் நடு மேற்பகுதியில் தெரிகின்ற உருவம் ஒளிபுகு நிலையில் அமைந்து, கைகளை அகல விரித்து, ஓவியத்தில் உள்ள அனைவரையும் அன்போடு அரவணைப்பதாக உள்ளது. அந்த உருவத்தின் உடல் மேற்பகுதி மட்டுமே உள்ளது. அதன் தலை தெரிவதில்லை, கழுத்துப்பகுதி வரையே தெரிகிறது. இந்த துண்டிக்கப்பட்ட உருவம் இயேசுவைக் குறிக்கிறது என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், இது கிறித்தவ மறைக்கு அடிப்படையான உண்மையாக இருக்கின்ற மூவொரு இறைவன் அல்லது திரித்துவம் என்னும் மறைபொருளில் முதலில் குறிப்பிடப்படுகின்ற தந்தையாம் கடவுளை தாலீ உருவகிக்கும் கலைப்பாணி ஆகும். கடவுளின் உடனிருப்பு மனிதரோடு உண்டு என்றாலும், அவரை முழுமையாக அறிந்துகொள்ள மனிதரின் சிற்றறிவால் இயலாது என்பதைக் குறிக்க தாலீ, தந்தையாம் கடவுள் உருவத்தின் தலை மனிதக் கண்களுக்குத் தெரியாநிலையில் இருப்பதாக ஓவியத்தை வரைந்துள்ளார்.
  • ஓவியத்தின் நடுவில், ஒளிபுகுநிலையில் இருக்கின்ற இயேசு உருவத்தின் கைகள் மற்றொரு உண்மையைச் சுட்டுகின்றன. இயேசுவின் இடது கை அவர்தம் நெஞ்சத்தை நோக்கி உள்ளது. அவரது வலது கை மேலே உயர்ந்துள்ளது. அதில் பெருவிரலும் ஆட்காட்டி விரலும் தந்தையாம் கடவுளைச் சுட்டிக்காட்டுகின்றன.
  • இவ்வாறு ஒரு கையால் தம்மையும் மறு கையால் தந்தையையும் இயேசு சுட்டிக்காட்டுவதன் பொருளை அறிய வேண்டும் என்றால் விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டின் யோவான் நற்செய்தியைப் புரட்டவேண்டும். அங்கே இயேசுவின் இறுதி இராவுணவின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது:

"அப்போது பிலிப்பு, இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: 'பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே..." (யோவான் 14:8-10)

  • இவ்வாறு, தந்தையாம் கடவுளோடு தமக்குள்ள நெருங்கிய ஒன்றிப்பைக் குறிப்பிடும் இயேசுவின் சொற்களுக்கு தாலீ ஓவிய வடிவம் அளித்துள்ளார்.
  • தந்தையாம் கடவுளின் முகம் மனிதருக்குத் தெரிவதில்லை. அதாவது கடவுள் பற்றிய முழு அறிவும் மனிதரின் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை. இது விவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் விடுதலைப் பயணம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"ஆண்டவர் மோசேயிடம், 'என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது' என்றார்" (விடுதலைப் பயணம் 33:20)

  • மூவொரு கடவுள் என்னும் கருத்துருவகத்தில் மூன்றாம் ஆளாய் இருப்பவர் தூய ஆவி. அவரைப் புறா வடிவில் உருவகிப்பது கிறித்தவ மரபு. தாலீயும் தூய ஆவியைப் புறா வடிவில் தம் ஓவியத்தில் இணைத்துள்ளார். ஓவியத்தில் இருக்கும் இயேசுவின் இடது கைக்கு மேல் அவரது தோள் அருகே தலைமுடியை இணைத்து நாடியைத் தொடுவதுபோன்று புறா உருவம் உள்ளது. இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் தாலீயின் ஓவியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தாலீ ஓவியத்தின் அமைப்பிடமும் தனித்தன்மை கொண்டுள்ளது. இயேசுவும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் மேசைக்குப் பின்புறத்தில் ஐங்கோண வடிவ அமைப்பு உள்ளது. அது பன்னிருகோண வடிவமைப்பின் (dodecahedron) பகுதியாகக் காட்சியளிக்கின்றது. அந்த வடிவமைப்பும் ஒளிபுகு நிலையில் உள்ளது. பன்னிருகோண வடிவமைப்பு என்பது பண்டைய கலாச்சார மரபில் கடவுள் உறைகின்ற விண்ணகத்தைக் குறித்தது. அங்குதான் ஓவியம் காட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கட்டட அமைப்பு கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் தந்தையாம் கடவுளின் நிழல் அங்கே தெரிகின்றது. அவரது பரந்து விரிந்த கைகள் மண்ணகத்தையும் விண்ணகத்தையும் அரவணைக்கின்ற பாணியில் ஓவியம் காட்டுகிறது.
  • வழக்கமாக இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியங்களில் இருப்பதுபோல, இந்த ஓவியத்திலும் இயேசுவோடு பன்னிரு திருத்தூதர்கள் உணவருந்தும் பாணியில் மேசையைச் சூழ்ந்து அமர்ந்திருப்பதுபோல மேலெழுந்த வாரியான பார்வைக்குத் தோன்றலாம். ஆனால், சரியாகக் கூர்ந்து நோக்கினால் இயேசுவோடு உள்ளவர்கள் பன்னிரு திருத்தூதர்கள் அல்ல என்பது தெரியவரும். வலதுபுறம் இருக்கும் ஆறுபேரும் இடதுபுறம் இருக்கும் ஆறுபேரின் "ஆடி எதிர்உருவம்" (mirror image) என்பதாக உள்ளனர். ஒத்த இரட்டையர்கள் (identical twins) ஆறு இணையாகக் காட்டப்படுவதுபோல் ஓவியம் உள்ளது. எனவே, இயேசுவைப் பின்சென்று அவருடைய சீடர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் ஓவியத்தில் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு.
  • இந்த ஓவியத்தில் இயேசுவோடும் தந்தை மற்றும் தூய ஆவியோடும் வேறு யார்யார் உள்ளனர் என்பது முக்கியமன்று, மாறாக அவர்களுடைய செய்கைகள் எதைக் குறிக்கின்றன என்று அறிவதே முக்கியம் என்னும் வகையில் தாலீயின் ஓவியம் உள்ளது.
  • படத்தில் உள்ள பன்னிருவரும் தாழ்ந்து பணிந்து வழிபடும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கவனம் இயேசுவை நோக்கி இருக்கவில்லை. அவர் கண்களுக்குப் புலப்படும் வகையில் அவர்களோடு அமர்ந்திருக்கவில்லை. மாறாக, புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒளிபுகு நிலையில் காட்டப்படுகிறார். படத்தில் நேரடியாகப் புலனாகின்ற பன்னிருவரும் (ஆறு இணையான இரட்டையர்கள்) பீடத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். பீடத்தின்மீது வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை முன்னிட்டுத்தான் அவர்கள் தாழ்ந்து பணிந்து வழிபடும் உடல்செயல் நிலையில் உள்ளனர். பீடத்தின்மீது இருப்பதோ இயேசு கிறித்துவின் உடலும் இரத்தமும் அடங்கிய நற்கருணை ஆகும். அதுவே அப்பத்தின் வடிவிலும் திராட்சை இரசத்தின் வடிவிலும் ஆங்கு உள்ளது.

நற்கருணையில் கிறித்துவின் உடனிருப்பு ஓவியத்தின் கருப்பொருள் ஆதல் தொகு

சால்வதோர் தாலீ வரைந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி என்னும் பேர்போன கலைஞர் வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தைப் போன்று, இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து உணவருந்தியதைக் குறிப்பது அல்ல. மாறாக, தாலீயின் ஓவியம் நற்கருணையில் இயேசு உண்மையாகவே உடனிருக்கிறார் என்னும் உண்மையைக் கலைவடிவில் காட்டுகிறது.

இயேசு அப்ப இரச வடிவத்தில் உண்மையாகவே நற்கருணையில் உள்ளார் என்பது கத்தோலிக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த உடனிருப்பின் உட்பொருள் என்னவென்பதை தாலீ கலைவடிவில் வெளிக்கொணர்கிறார். நற்கருணை என்பது ஒரு அருட்சாதனம். அருட்சாதனம் என்றால், "புலனாகா எதார்த்தத்தைப் புலனாக்கும் அடையாளம்" என்று பொருள்.

தாலீயின் ஓவியத்தில் பீடத்தைக் குறிக்கும் மேசையின்மீது அப்பமும் இரசமும் உள்ளன. அவற்றின்முன்னே புலனாகா விதத்தில் (ஒளிபுகு நிலையில்) இயேசு கிறித்து உள்ளார். அவரே "கடவுளின் அருட்சாதனம்" என்னும் வகையில் தந்தையாம் கடவுளை உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

நற்கருணைக் கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகின்ற திருப்பலியின்போது என்ன நிகழ்கிறது என்பதை சால்வதோர் தாலீ ஓவியமாகச் சித்தரிக்கிறார். மண்ணகத்தில் நிகழும் நற்கருணை வழிபாடு, விண்ணக எதார்த்தத்தை மண்ணகத்துக்குக் கொணர்கிறது என அவர் ஓவியத்தில் காட்டுகிறார். இயேசு நற்கருணையில் உண்மையாகவே உள்ளார் என்னும்போது இயேசு வெளிப்படுத்துகின்ற தந்தையாம் கடவுளும் அங்குள்ளார். குழுவாக இணைந்து வழிபடுகின்ற திருச்சபை தூய ஆவியின் உடனிருப்புக்குச் சான்றாக உள்ளது.

மூவொரு கடவுள் எங்கு உள்ளாரோ அங்கே விண்ணகம் உள்ளது. அது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இறைவேண்டலில் ஈடுபட்டு வழிபடுகின்றோருக்கு அது உள்ளார்ந்த விதத்தில் புலனாகின்றது. இதுவே சால்வதோர் தாலீ வரைந்த "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தின் உட்பொருள்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு